தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆகஸ்ட் மாதம் கன்னிப்படல முக்கியத்துவம், கன்னித்தன்மை மற்றும் கன்னிகழிதல் போன்ற தலைப்புகளை தடயவியல் மருத்துவ பாடத் திட்டத்தில் இணைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய சூழலில் பெண்களின் புனிதம், பாலியல் தூய்மை, ஒழுக்கப் பண்புகள் மீது கட்டமைக்கப்படும் எதிர்பார்ப்புகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் சூழலில், என்.எம்.சியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பல்வேறு மட்டங்களில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மருத்துவ மற்றும் LGBTQ+ உரிமைகள் குழுக்களின் பெரும் அழுத்தத்தின் கீழ், தேசிய மருத்துவ ஆணையம் இந்த மாற்றங்களை செப்டம்பர் மாதம் திரும்பப் பெற்றது என்.எம்.சி.
2022ம் ஆண்டு நீக்கப்பட்ட சர்சைக்குரிய பாடப்பிரிவுகள்
கன்னித்தன்மை என்பது பெண்ணின் புனிதம், பாலியல் தூய்மை அல்லது ஒழுக்கத்தின் குறியீடாகவே நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இவை எப்போதுமே இப்படி இல்லை என்றாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் உருவாகும்போது கன்னித்தன்மை குறித்த பார்வையும் மாறியது.
குலத்தின் தூய்மையைக் காப்பாற்றுதல் பெண்களின் கடமை என்று ஆக்கப்பட்டது. சாதி மற்றும் மத நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அகமண முறையை முன்னிறுத்துகின்றன. அதில் பெண்ணின் கன்னித்தன்மையை வலியுறுத்துவதும் இணைந்துவிடுகிறது. பெண் உடலை போகத்திற்கான பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வையும் கன்னித்தன்மை பற்றிய கருத்துகளை உருவாக்குகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பதிலளித்து, தேசிய மருத்துவ ஆணையம்(NMC) 2022இல் MBBS பாடத் திட்டத்தைத் திருத்தியது. தடயவியல் மருத்துவத்தில் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் என்ற பிரிவில் இருந்து "தன்பாலின ஈர்ப்பு” நீக்கப்பட்டது.
கூடுதலாக, கன்னிப்படலம் மற்றும் கன்னித்தன்மையின் முக்கியத்துவம் போன்ற காலாவதியான கருத்துகள் அகற்றப்பட்டன. மேலும் இருவிரல் சோதனை "அறிவியலற்றது, மனிதாபிமானமற்றது மற்றும் பாரபட்சமானது" என்று கருதப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 2024இல், தேசிய மருத்துவ ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் முன்பு நிராகரிக்கப்பட்ட பல பிற்போக்கான கூறுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
நிர்பயா வழக்குக்குப் பிறகு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளில் இருவிரல் பரிசோதனையைத் தடை செய்வதும் ஒன்று. பாலியல் வன்முறை நடைபெற்றுள்ளதா என்று கண்டறிய பெண்ணின் கன்னிப்படலத்தை இரு விரல்களால் சோதித்துப் பார்ப்பதே இந்தப் பரிசோதனை. இது பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு கூறியது.
இந்தியாவில் பெண்களின் பாலியல் பின்னணி எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பது குறித்த உரையாடலை தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய உத்தரவுகள் மீண்டும் தூண்டியுள்ளன.
பிபிசியிடம் பேசிய பல பெண்கள் கன்னித்தன்மை பற்றிய தங்கள் எண்ணங்களை விளக்க முயன்றனர். கன்னித்தன்மைக்கு மருத்துவ அறிவியலில் இடம் இல்லை என்று கூறும் மருத்துவர், பெண்ணை சமூக ரீதியாக ஒடுக்கும் கருவியே கன்னித்தன்மை என்று கூறும் எழுத்தாளர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத சமூகத்தில் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று கூறும் ஐடி ஊழியர் எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் பலவிதமான கருத்துகளை தங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து பிபிசியிடம் பகிர்ந்துள்ளனர்.
கன்னித்தன்மை குறித்த பிடிவாதங்கள் இளம்பெண்களைத் தொடர்ந்து பாதிப்பதாக பிபிசியிடம் பேசிய பெண்கள் தெரிவித்தனர். “தூய்மை” மீதான முக்கியத்துவம் பாலின பாகுபாடுகளை நீடிக்கச் செய்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்திய சமூகத்தில் திருமணம் ஆகும் வரை பெண்கள் ‘கன்னித்தன்மையுடன்’ இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஆண்களுக்கு அதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது.
கன்னித்தன்மை பரிசோதனை போன்ற பழக்கங்கள் இன்னமும் பின்பற்றப்படும் சமூகத்தில், பாலியல் தூய்மை என்பது பெண்ணின் உடலை மட்டுமல்லாமல் அவளது பாலியல் நடத்தையையும் கண்காணிப்புக்கு உள்ளாக்குகிறது.
சென்னை நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும்பிரபல மகப்பேறு மருத்துவர் ஜோஸ்பின் வில்சன், கன்னித்தன்மை என்பது “பழங்காலச் சொல்” என்கிறார். சமூக பரிணாமத்தின் மூலம் இந்தச் சொல் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மருத்துவர் ஜோஸ்பின் வில்சன், “பெண்களுக்கு இடையிலான பாலியல் வாழ்க்கை இருக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம், நீங்கள் எந்த கன்னித்தன்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“பெண்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற பட்சத்தில் கன்னித்தன்மை என்ற வார்த்தையே இருக்க முடியாது. மருத்துவத்தில், பாலியல் வல்லுறுவு, துன்புறுத்தல் ஆகிய விவகாரங்களைப் பற்றிப் பேசும்போது, உறுப்புகளில் ஏதேனும் காயம் இருக்கிறதா என்று நாங்கள் பரிசோதிக்கும்போது மட்டுமே இந்தச் சொற்கள் பயன்பாட்டுக்கு வரும். இது கன்னித்தன்மையை வரையறுப்பதற்குச் சமமானதல்ல" என்று அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, கன்னித்தன்மையை வரையறுக்கக்கூடாது. "நான் ஹைமெனோபிளாஸ்டி (Hymenoplasty) பற்றிய ஒரு படிப்பை முடித்துள்ளேன். அதன் மூலம் என்னால் ஒரு கன்னிப்படலத்தை (hymen) மறு உருவாக்கம் செய்ய முடியும். அப்படியிருக்கும்போது இங்கு கன்னித்தன்மையின் வரையறையை எப்படி முடிவு செய்வது?” என்கிறார்.
“நான் வளர்ந்த காலத்தில் கன்னித்தன்மை என்றால் கற்பு, அதாவது திருமணத்திற்குப் பிறகுதான் பாலியல் வாழ்க்கை என்று அர்த்தம். என்னைப் பொறுத்தவரை, கன்னித்தன்மை ஒரு நபரின் குணத்தை வரையறுக்கிறது," என்று அவர் கூறினார்.
மேலும், “ஒரு மருத்துவராக அந்த உறுப்பைப் பார்க்கும்போது, அது என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியும். திருமணமாகி பல ஆண்டுகளாக பாலியல் உறவுகொள்ளாத பெண்களை, என்னால் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். அப்படிப்பட்ட தருணங்களில் பலர் என்னிடம் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முன்வந்ததும் உண்டு.
நான் ஒரு மருத்துவ மாணவராக இருந்தபோது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு அல்லாத வேறு எந்த உறவும் ஒரு குற்றம் என்றும் வியாதி என்றும் கற்றுத் தரப்பட்டது. எது பாவமாகப் பார்க்கப்பட்டதோ, அதுவே சமூகப் பரிணாமத்தின் காரணமாக இப்போது அப்படிப் பார்க்கப்படுவதில்லை. அவர்களை ஒதுக்கி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பதை நாம் ஒரு சமூகமாகப் புரிந்துகொண்டுள்ளோம்” என்றார்.
கன்னித்தன்மை பற்றிய புரிதல் மாறி வருகிறது. இது உடலியல் உண்மை அல்ல, சமூகம் உருவாக்கிய கருத்து மட்டுமே என்று பலரும் கருதுகின்றனர்.
ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம் அவளின் மதிப்பை நிர்ணயிக்கும், வாழ்க்கையைப் புரட்டிபோடும் முக்கிய நிகழ்வாகும் என்ற பொய்யான நம்பிக்கையை உடைத்துப் பேசுகிறார் பிரபல தமிழ் எழுத்தாளர் சல்மா.
பல்வேறு வயது குழுக்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிபிசியிடம் பேசினர். கன்னித்தன்மைக்கு மருத்துவ வரையறை வழங்குவது, கன்னிப்படல பரிசோதனை செய்வது போன்றவை பெண்களின் உடல் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகின்றன என்றனர். பெண்கள் தங்களின் பாலியல் பின்னணியைவிட மேலானவர்கள் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் அவர்களின் உடலைச் சுற்றியுள்ள கருப்பொருள்களை ஆராய்வதில் தனது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட சல்மா, 'கன்னித்தன்மை' என்ற வார்த்தையே பெண்ணை அடிமையாக்கும் ஒரு கருவி என்று கூறினார் சல்மா.
"ஒரு பெண்ணின் உயிரைவிட உங்கள் கௌரவம், குறிப்பாக உங்கள் குடும்பத்தின் கௌரவம் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைக்கு அடிமைத்தனம் என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை. நிலைமை இப்போதும் பெரிதாக மாறவில்லை, தங்கள் மனைவிகள் 'கன்னி' ஆக இருக்கிறார்களா என்று தங்கள் முதலிரவில் சரிபார்க்கும் ஆண்கள் இன்னும் உள்ளனர். ஒரு பெண் ஒரு ஆணிடம் நீ கன்னித்தன்மையுடன் இருக்கிறாயா என்று கேட்பது அவனை பாதிக்கப் போவதில்லை, ஏனென்றால் அது அவனது பொறுப்பு என்று சமூகம் அவனுக்கு சொல்லித் தரவில்லை," என்று சல்மா கூறினார்.
கன்னித்தன்மை பற்றிய இளம் பெண்களின் எண்ணங்கள் பாலியல் தொடர்பாக இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியதாக இருக்கிறது. நவீன சூழல்களில் கன்னித்தன்மை எவ்வாறு உணரப்படுகிறது?
இந்த இளம் பெண்களில் பலர், கவிஞர் சல்மா கூறியதைப் போல, சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காகப் போராடும் வேளையில், ‘கன்னி’யாக இருப்பதற்கான தொடர் சமூக அழுத்தம் குறித்த விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு ‘கன்னித்தன்மை’ குறித்த சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் புதிதல்ல. 2005ஆம் ஆண்டில், முன்னணி நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, "திருமணத்தின்போது, பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து நம் சமூகம் வெளியே வரவேண்டும்" என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
தமிழ் செய்தி இதழில் அவரது அறிக்கை வெளியானதை அடுத்து, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார், அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் தலைமறைவாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வழக்குகளை எதிர்த்துப் போராட அவருக்குப் பல ஆண்டுகள் பிடித்தன. 2010இன் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பிபிசியிடம், 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பல பெண்கள், தங்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசினர். அவர்கள் பாலியல் சுயாட்சி பற்றிய விரிவான புரிதலைப் பகிர்ந்து கொண்டனர். கன்னித்தன்மை பற்றிய உரையாடல்களில் இதுவொரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. (இங்கே, "பாலியல் சுயாட்சி" என்பது ஒருவர் தனது பாலியல் வாழ்க்கை குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையைக் குறிக்கிறது).
கன்னித்தன்மையே ஒழுக்கம் என்று வலியுறுத்திய குடும்பத்தில் வளர்ந்த 40களின் பிற்பகுதியில் உள்ள பெண் ஒருவர், திருமணத்திற்காக "தன்னைக் காப்பாற்றிக் கொள்ள" மிகுந்த அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறினார்.
தனது இருபதுகளின் மத்தியில் தனது கன்னித்தன்மையை இழந்த பிறகு, மிகுந்த குற்ற உணர்ச்சி கொண்டதாகவும், தனது மதிப்பை இழந்துவிட்டதாக நினைத்ததாகவும் கூறினார்.
"பாலியல் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, எனது முதல் பாலியல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு அவமானம் என்னைச் சூழ்ந்து கொண்டது" என்று அவர் நினைவுகூர்ந்தார்.
'கன்னித்தன்மை கணவருக்கு அளிக்க வேண்டிய ‘பரிசு’ என்று நினைத்தேன்'
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, தனது 30களில் இருக்கும் ஒரு பெண், பாலியல் குறித்து எப்போதும் ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் அவருக்கு பெண்ணின் கன்னித்தன்மை புனிதமானது என்று கற்றுத் தரப்பட்டதாகவும் கூறுகிறார்.
“நான் பாலியல் உறவில் ஈடுபடத் தொடங்கியபோது, ஒருபுறம் எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் மற்றொரு புறம் நான் என்னையே இழக்கிறேனோ என்ற பயம் இருந்தது. மனநல ஆலோசனை மற்றும் பிற உதவிகள் மூலம், எனது சுய மதிப்பு எனது பாலியல் அனுபவங்களின் அடிப்படையில் அமைவதல்ல என்று உணர்ந்தேன்” என்கிறார்.
மற்றொரு பெண், 4 வயது குழந்தையின் தாயார், தனது முதல் ஒருமித்த பாலியல் அனுபவத்திற்குப் பிறகு மிகுந்த அவமானத்தையும் வருத்தத்தையும் உணர்ந்ததாகக் கூறினார். "திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பாவம் என்ற நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்டவள் நான். உடல்ரீதியான இன்பத்துக்கும் மனரீதியான குற்ற உணர்வுக்கும் இடையில் போராடினேன். ஒரு பதற்றத்தை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.
சென்னை நகரில் 30 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தனது முப்பதுகள் வரை கன்னியாக இருக்க முடிவு செய்ததாகவும், "சமூக அழுத்தம் காரணமாக அல்ல, தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக" என்றும் கூறினார். அந்த வயது வரை கன்னியாக இருப்பதும் ஒரு சவாலாக இருந்தது என்று அவர் கூறினார்.
'நான் என் சொந்த விதிமுறைகளில் கன்னித்தன்மையை மீட்டெடுக்கிறேன்' என்று நான் நகைச்சுவையாகச் சொல்வேன். கன்னித்தன்மை உட்பட நமது பாலுணர்வை வரையறுக்க நமக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
சென்னையில் வசிக்கும் 30 வயதான பட்டய கணக்காளர் ஒருவர், “ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த எனக்கு கன்னித்தன்மை "மிகவும் புனிதமானது" என்றும், திருமணம் செய்யும் நபருக்கு “பரிசாக” சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கற்பிக்கப்பட்டதாகக் கூறினார்.
“ஆனால், அப்படி இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. இது உடல் சார்ந்தது அல்ல என்று புரிந்தது. ‘கன்னி’ என்ற பேட்ஜை குத்திக் கொண்டால்தான் ஒருவர் விசுவாசமானவர் அல்லது விலைமதிப்பற்றவர் ஆக முடியும் என்று கருதுவது தவறு.
திருமண வாழ்க்கை ஒரு பெண்ணின் கன்னிப்படலம் கிழிவதில் தொடங்குவதும் இல்லை, முடிவதுமில்லை. அது ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ய ஒரு காரணியாகவும் இருக்க முடியாது. ஒரு பெண்ணின் மதிப்பு அவளது பாலியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
கன்னித்தன்மை பற்றிய தமிழ்நாட்டுப் பெண்களின் பார்வை
பட மூலாதாரம்,PRASHANTI ASWANI
தனது 30களின் முற்பகுதியில் இருக்கும் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு பெண், தனது உடல் தனது உரிமையே, அதே நேரத்தில் தனது பொறுப்பும்கூட என்கிறார்.
"என் உடல் என் உரிமை. என் அனுமதியின்றி அதை யாரும் தொட அனுமதிக்க மாட்டேன். ஒரு பெண் தன்னை மீறிய சூழ்நிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால், நான் அவளுடன் நிற்கிறேன்.
ஆனால், அதே வேளையில் சமூகம் பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாறும் வரை, பெண்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவேன்," என்று அவர் கூறினார்.
பாலியல் கல்வி என்பது பதின்ம வயதினருக்கு மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுவதும் கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். "முதலிரவு படுக்கையில் ஒரு பெண் 'கன்னி' தானா என்பதைச் சரிபார்க்க வெள்ளைத் துணியைப் பயன்படுத்தும் குடும்பங்கள் உள்ளன," என்று அவர் கூறினார்.