பிரேசிலைச் சேர்ந்த 44 வயதான கால்நடை பண்ணை உரிமையாளர் டியாகோ க்ளூக், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார்.
தெற்கு பிரேசிலிய நகரமான பெலோடாஸில் உள்ள தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தின் மையத்தில் ஒரு சுத்தமான வெள்ளை வாளியை வைத்தார். கருப்பு மழை என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு பற்றிய எச்சரிக்கைகள் அப்போது வழங்கப்பட்டிருந்தன.
"இந்த வாளியில் சேகரிக்கப்படும் நீர், கூரைகள் அல்லது சுவர்களில் இருந்து விழாமல், மேகங்களிலிருந்து நேரடியாக விழுவதற்காக சுவர்கள் அல்லது கூரைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை நான் தேர்ந்தெடுத்தேன்", என்று க்ளூக் விளக்குகிறார்.
அடுத்த நாள் அவர் வாளியைப் பார்த்த போது, அதில் சேகரிக்கப்பட்ட மழைநீர் கருப்பு நிறத்தில் இருந்தது.
"நான் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை. இது மிகவும் வருத்தமாக இருந்தது," என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.
தெற்கு பிரேசிலைத் தவிர, வடக்கு உருகுவே மற்றும் தெற்கு பராகுவே ஆகிய பகுதிகளிலும் கருப்பு மழை பொழிந்தது.
அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் இருந்து வரும் குளிர்ந்த காற்று பிரேசில் மற்றும் பொலிவியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயின் புகையை எதிர்கொள்ளும்போது, வரும் நாட்களில் அதிக கருப்பு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசிலின் தென்கோடியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் வியாழக்கிழமை பதிவானது, தென் அமெரிக்காவில் இதுவரை பதிவான அதிக அடர்த்தி கொண்ட புகைகளில் ஒன்றாகும் என்று மெட்சுல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் சேகரித்த கருப்பு நீரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
மெட்சுல் வானிலை மைய ஆய்வாளர் எஸ்டேல் சியாஸ் கருப்பு மழை என்பது, புகையால் கொண்டு வரப்படும் புகைக்கரியுடன் நீர் கலக்கும் போது உருவாகும் என்று விளக்குகிறார்.
"புதைபடிம எரிபொருட்கள், இயற்கை பொருட்கள் முழுமையாக எரிபடாத போது உருவாகும் கருப்பு கரிம நுண் துகள்களால் ஆனது புகைக்கரி" என்று சியாஸ் கூறுகிறார்.
"இவை முழுமையாக எரியாதபோது, நுண்துகள்கள் புகை மூலம் வளிமண்டலத்திற்குள் செல்கின்றன."
1,500 மீட்டர் உயரத்தில் புகை எங்கு செல்கிறது என்பதை காற்று வீசும் திசையே தீர்மானிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.
"காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும்போது, புகை அர்ஜென்டினா, உருகுவே மற்றும் தெற்கு பிரேசிலை நோக்கி செல்கிறது."
மேகத்தின் ஈரப்பதத்துடன் கலந்து, கருப்பு கரிம நுண்துகள்கள் ஒடுக்க (ஒடுக்கம்-வாயு நிலையில் உள்ள நீர், திரவ வடிவில் மாறுவது) அணுக்கருக்களாக செயல்பட முடியும் , அதைச் சுற்றி மழைத்துளிகள் உருவாகின்றன.
"மழை வரும் போது, வளிமண்டலத்தில் உள்ள கருப்பு கரிமத்துடன் கலந்து வருவதால், கருப்பு மழை பொழிகின்றது", என்கிறார் சியாஸ்.
மெட்சுல் வானிலை மைய ஆய்வாளர் கருப்பு மழை மாசுபட்டது, ஆனால் அது எப்போதும் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்காது என்று கூறுகிறார்.
"இது கருப்பு கரிமத்தை கொண்டிருப்பதால், பூமியின் மேற்பரப்புகளை அழுக்காக்கும்" என்று சியாஸ் கூறுகிறார்.
பெலோடாஸ் பெடரல் பல்கலைக்கழகத்தின் (UFPel) நீர் பொறியியல் பேராசிரியர் கில்பர்டோ கோலாரஸ், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நீர் மாசுபாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்கிறார்.
"கருப்பு மழை சில சேதங்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இந்த புகை காடுகள் மற்றும் புல்வெளி நிலங்களை எரிவதால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது" என்று கோலாரஸ் கூறினார்.
"இவற்றுடன் கூடுதலாக, நச்சுத் தன்மை கொண்ட தொழிற்சாலை கழிவுகள் இருந்தால், இது அமில மழையை உருவாக்கலாம். அது மிகவும் ஆபத்தானது" என்று அவர் மேலும் கூறினார்.
தெளிவாக மற்றும் சுத்தமாக இல்லாத மழைநீரை பயன்படுத்துவது குறித்தும் எச்சரிக்கை தேவை என்றும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உரிய வடிகட்டுதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அது போன்ற நீரை பருகலாம் என்று அவர் தெரிவிக்கிறார்.
"சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கும் நகர்ப்புறங்களில் மனித நுகர்வுக்கான நீர் இதனால் பாதிக்கப்படாது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
கருப்பு மழையால் பீதியடைவதை தவிர்ப்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"மக்களுக்கு தண்ணீர் தேவை, எனவே நாம் இவ்வளவு கண்டிப்பாக இருக்க முடியாது. இதனை நாம் பொறுப்பான முறையில் கையாள வேண்டும்" என்று கோலரஸ் கூறினார்.
"வெள்ளத்தின் போது (இந்த ஆண்டு மே மாதம்) இது போன்ற நிகழ்வுகளை நாங்கள் நிறைய அனுபவித்தோம். மக்கள் இவற்றை எதிர்கொள்கிறார்கள், அதனால் நாம் அவர்களை அக்கறையுடனும் கருணையுடனும் நடத்த வேண்டும்” என்கிறார் அவர்.
காலநிலை மாற்றம்
இந்த மழை குறைந்த சேதத்தையே ஏற்படுத்தக் கூடும் என்றாலும், காலநிலை மாற்றத்தால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வு குறிக்கிறது என்று கோலாரஸ் கூறுகிறார்.
"போர்டோ அலெக்ரேவில் [ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகர்], குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகள் மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவற்றுடன் நாம் இனிமேல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் மத்திய பிரேசிலில் நடந்த காட்டுத்தீயின் புகையால் ரியோ கிராண்டே டோ சுல் பகுதி பாதிக்கத் தொடங்கியது.
"குறைந்த உயர ஜெட்கள்" அல்லது காற்றுப் பாதை என்று பிரபலமாக அழைக்கப்படும் காற்றால் எடுத்துச் செல்லப்பட்ட புகைக்கரி அர்ஜென்டினா மற்றும் உருகுவேயையும் அடைந்தது.
பல நாட்களுக்கு, மூடுபனி காரணமாக சூரியன் முழுமையாக பிரகாசிக்காததால், “சிவப்பு சூரியன்” என்று அழைக்கப்படும் நிகழ்வை உருவாக்கியது.
போர்டோ அலெக்ரே மற்றும் ரியோ கிராண்டே டோ சுலில் உள்ள பிற நகராட்சிகளில், குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதத்துடன் புகை இணைந்து குளிர்காலத்தின் முடிவில் அசாதாரண வெப்பத்தை உருவாக்கியது. அங்கு வெப்பநிலை 36சC ஐ எட்டியது.
கோவிட்-19 தொற்றுநோய் முடிவடைந்ததன் காரணமாக காணாமல் போன முக கவசங்கள் சமீபத்திய புகை காரணமாக போர்டோ அலெக்ரேவின் மக்களிடம் மீண்டும் காணப்படுகிறது.
பள்ளிகளுக்கான அறிவுரைகள் மட்டுமல்லாமல், சுவாச பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ உதவியை நாடவும், மக்கள் அனைவரும் நீர்சத்தை பராமரித்து, திறந்தவெளிகளில் செல்வதைத் தவிர்க்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ரியோ கிராண்டே டோ சுலில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், சுவிஸ் நிறுவனமான IQAir செவ்வாயன்று போர்டோ அலெக்ரேவை உலகின் இரண்டாவது மிகவும் மாசுபட்ட பெருநகரமாக வகைப்படுத்தியது. முதல் இடத்தில், சாவோ பாலோ (பிரேசிலில் உள்ள நகரம்) உள்ளது. செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.