16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சோசியல் மீடியா உபயோகிக்க தடை - அரசு அதிரடி
16 Sep,2024
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பன்ஸி, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை உபயோகிக்க முடியாதபடி சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளார்.
உலகம் முழுக்கவே சிறார்கள் போன் உபயோகிப்பதும், சமூகவலைதளங்களை உபயோகிப்பதும் பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக சிறார்கள் போன் மற்றும் சமூகவலைதளங்களை உபயோகிக்கும் போது அவர்களின் உடல் நலனிலும், மன நலனிலும் அதிகபடியான பாதிப்புகளை சந்திக்கின்றனர் என பரவலாக பேச்சு எழுந்துவருகின்றன.
இப்படியான ஆபத்தில் இருந்து சிறார்களை தற்காப்பதற்கு முன்னதாக ஐரோபியாவில் சிறார்கள் சமூகவலைதளத்தை உபயோகிக்க வயது வரம்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அது தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் சிறார்கள் சமூகவலைதளத்தை உபயோகிக்க வயது வரம்பு சட்டம் கொண்ட வரவிருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பன்ஸி அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிறார்கள், சமூகவலைதளங்களை அதிக அளவில் உபயோகிப்பதும், அதன் காரணமாக அவர்கள் உளவியல் மற்றும் உடல் அளவில் பாதிக்கப்படுவதாகவும் அதனால், இதனை கட்டுபட்டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் அங்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை உபயோகிக்க தடை கொண்டுவரப்படும் என அங்கிருக்கும் எதிர்க் கட்சி அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதமர் அந்தோனி அல்பன்ஸி, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை உபயோகிக்க முடியாதபடி சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை உபயோகிக்க தடை விதித்து இந்த ஆண்டு சட்டம் கொண்டுவரப்படும். அதற்கு முன்பாக வயது வரம்பு மற்றும் சரிபார்பு குறித்து முன்னோட்டம் நடத்தப்படும்.
சிறுவர்கள் மனிதர்களுடன் பழகி அந்த அனுபவங்களை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் தங்களது சிறுவயது வாழ்வை அனுபவிக்க வேண்டும். அதேபோல் பெற்றோர்கள் அமைதியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என பதிவிட்டு அந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.