ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
13 Sep,2024
அன்று நீதானே சொன்னாய்
ஓடித்தப்பு பின் ஊர்களைக்
காப்பாற்றவேண்டுமென்று.
அதனால்..
வெளிநாடொன்றில்
தஞ்சம் புகுந்து விட்டோம்.
எங்களை..
ஏற்றுக்கொள்ள
எத்தனை கேள்விகள்
எத்தனை விசாரணைகள்
எத்தனை இழுத்தடிப்புகள்
இப்படியே எத்தனை வருடங்கள்
காத்துக்கிடந்தோம்.
அகதியென்ற பெயருடனும்
கையில்..
அன்னத் தட்டுடனும்
அவர்களின் முகாங்களில்
அலைந்தபோது கூட
எங்கள் துன்பங்களை
உனக்கு சொல்ல நாம்
விரும்பியதேயில்லைத் தாயே!
விடிவு தேடும்
உனது துன்பத்தை விட
இது சிறியதென்பதால்.
நாங்கள்..
தாங்கியே வாழப் பழகினோம்.
வேறொரு மொழி,
வேறொரு கலாச்சாரம்,
வேற்று மனிதர்கள்
விபரம் தெரியாத நாம்.
அரசுகள் எங்களை
ஏற்றுக்கொண்டபோதிலும்
இங்கு சிலர் எங்களை
வேற்ரு கிரக மனிதர்களாகவே
பார்த்தார்கள்.
இப்படி இருந்தும்
எங்களின் உழைப்பின்
ஒருபகுதியை
உனக்கு அனுப்பியே
அங்குள்ளேரை
வாழவைத்தாயென்பதை
அவர்களுக்கு
ஞாபகப் படுத்து தாயே!
அனால் இன்றோ
எங்களின் உழைப்பு
பொய் களவில்லா எங்களின்
வாழ்க்கை முறை
மொழியின் தேர்ச்சி
குழந்தைகளின்
கல்வியின் உயற்சி
பலதையும் பார்த்து
மனிதநேயத்துடன் தங்களின்
குழந்தைகளாக
எங்களை பார்கிறார்கள்.
தாயா?தத்தெடுத்த தாயா?
என்ற குளம்பம்
எங்களை இப்போது
வாட்டுகிறது.
இருந்தாலும்- எம்
உயிர் போகும்
நிலை வந்தாலும்
உன்னை மறக்கமுடியுமா?
அம்மா..
எங்கள் பிள்ளைகளுக்கு
பேரப் பிள்ளைகளுக்கு
பூட்டப் பிள்லைகளுக்கு
உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி
பூட்டியென
சொல்லி வளர்கிறோம் தாயே!
ஒருகாலம் நாங்கள்
வரும்போது-இது
எனது பிள்ளைகள்,
எனது பேரப்பிள்ளைகள்
எனது பூட்டப் பிள்ளைகளென்று
“அங்கிருப்போர்க்கு”
சொல்லிவை தாயே
அது போதும் எங்களுக்கு!