டென்மார்க்கில் நடந்த உலக தடகளப்போட்டியில் தமிழக தீயணைப்பு வீரர் 4 தங்கம் வென்று சாதனை
12 Sep,2024
தீயணைப்பு வீரர்களுக்கான உலக தடகளப்போட்டியில் நெல்லை தீயணைப்பு வீரர் 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நெல்லை நாஞ்சான்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகதாஸ் மகன் மாரியப்பன் (23). இவர் சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். தீயணைப்புத்துறையில் இருந்து கொண்டே தடகளப்போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தீயணைப்பு வீரர்களுக்கான உலக தடகள போட்டிகளுக்காக தன்னை தயார்படுத்திய அவர், அதுதொடர்பாக முறையான பயிற்சி பெற வழிவகை செய்யுமாறு தீயணைப்புத்துறையின் இயக்குனர் ஆபாஸ் குமார் மற்றும் உதவி இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார். உடனடியாக அவர்களது உத்தரவின் பேரில் மாரியப்பன் தனது சொந்த மாவட்டமான நெல்லை, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் வெளிப்பணி புரிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொள்ள நெல்லை மாவட்ட அலுவலர் வினோத் உத்தரவு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சுமார் 7 மாத காலமாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து கொண்டு அண்ணா விளையாட்டு மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து இந்தியா சார்பில் உலகளவிலான தீயணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற மாரியப்பன் தகுதி பெற்றார். அதைத்தொடர்ந்து டென்மார்க் நாட்டில் நடந்து வரும் தீயணைப்பு வீரர்களுக்கான உலகளவிலான தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் மாரியப்பன் கலந்து கொண்டார். இதில் அவர் 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு நான்கு தங்க பதக்கங்களை வென்றார். இதையடுத்து அவரை தமிழ்நாடு தீணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் நெல்லை மாவட்ட தீயணைப்புத்துறையினர் நெல்லையில் உற்சாகமாக கொண்டாடினர்.