த்ரிஷ்யம் படம் பார்த்து முன்னாள் மனைவியை கொலை செய்த நபர்... போலீசில் சிக்கியது எப்படி?
13 Aug,2024
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் த்ரிஷ்யம் படம் பார்த்து போலீசில் சிக்காத வகையில் கொலை செய்த நிலையில் போலீசார் மிக திறமையாக அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி தன்னுடைய தந்தை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இருவருக்கும் இடையே விவாகரத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது முன்னாள் மனைவிக்கு ராஜாராம் என்பவர் உடன் தொடர்பு இருப்பதை அறிந்த லோகேஷ் தனது முன்னாள் மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் த்ரிஷ்யம் படத்தை பார்த்து அதேபோல் அந்த பெண்ணை நயவஞ்சகமாக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து புதைத்து விட்டார்.
மேலும் தடயம் இருக்கக்கூடாது என்பதற்காக குழி வெட்டிய உபகரணங்களை ஓடையில் வீசிவிட்டார், பெண்ணின் இருசக்கர வாகனத்தையும் அணையில் தள்ளி விட்டு விட்டார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்த நிலையில் அந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தபோது சில சந்தேகத்திற்குரிய மொபைல் எண்களை கண்டுபிடித்தனர்.
அதன்படி லோகேஷ் மற்றும் ராஜாராம் ஆகிய இருவரையும் விசாரித்த போது இருவரும் சேர்ந்துதான் கொலை செய்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் த்ரிஷ்யம் படம் பார்த்து மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்ததாகவும் அவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கில் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.