யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
யுக்ரேன் செவ்வாயன்று ரஷ்ய எல்லைக்குள் தனது தாக்குதலைத் தொடங்கியது. ரஷ்யாவிற்குள் 10 கிமீ (ஆறு மைல்கள்) தூரத்துக்கு முன்னேறியுள்ளது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யா யுக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை தொடங்கிய பிறகு ரஷ்யாவுக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
யுக்ரேனில் தலைநகர் கீவ் மற்றும் பல பகுதிகள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரேன் அதிபரின் வீடியோ உரை
தனது உரையில், அதிபர் ஜெலென்ஸ்கி யுக்ரேனின் "போர் வீரர்களுக்கு" நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து யுக்ரேனின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் ஆலோசனை செய்ததாகக் கூறினார்.
"யுக்ரேன் நீதியை மீட்டெடுக்க முடியும் என்றும் ஆக்கிரமிப்பாளர் மீது தேவையான அழுத்தத்தை கொடுக்க முடியும் என்பதையும் நிரூபித்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ள போதிலும் பலன் கிடைக்கவில்லை.
இதனால், அந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்துவிட்டனர்.
குர்ஸ்க், பெல்கோரோட், பிரையன்ஸ் ஆகிய பிராந்தியங்களில் பயங்கரவாத எதிர்ப்பு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பொருள், அந்த பிராந்தியங்களில், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம். தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, கண்காணிப்பது போன்ற பிற நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.
ரஷ்ய எல்லைக்குள் ரஷ்யா - யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கும் இடையிலான மோதல்கள் சனிக்கிழமை இரவு முதலே நடந்து வருவதாகத் தெரிகிறது. குர்ஸ்க் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதலில் மக்கள் காயமடைந்ததை சுட்டிக்காட்டி, யுக்ரேனின் "துரோக" தாக்குதல் என்று குறிப்பிட்டார்.
சனிக்கிழமை பிராந்திய தலைநகர் குர்ஸ்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது யுக்ரேனிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
யுக்ரேன் எல்லையே ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் வோரோனேஜ் பிராந்தியங்களிலும் ஒரே இரவில் யுக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக அவற்றின் ஆளுநர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சேதங்கள் பற்றி அவர்கள் ஏதும் குறிப்பிடவில்லை.
அதேநேரத்தில், யுக்ரேன் தலைநகர் கீவ் பகுதியில் ராக்கெட் பாகம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்ததில் 35 வயது ஆணும் அவரது நான்கு வயது மகனும் கொல்லப்பட்டதாக அவசர சேவை அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. 13 வயது குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டெலிகிராமில் வான் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக "செயல்படுகின்றன" என்றும் பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
படக்குறிப்பு,டாங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் ஆகியவற்றை ரஷ்யா குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது
யுக்ரேனிய படைகள் திடீர் ஊடுருவல்
ரஷ்யாவுக்குள் யுக்ரேனின் `அரிதான’ ஊடுருவல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அப்போது 1,000 வீரர்கள் அடங்கிய படை, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
யுக்ரேனியர்கள் பல கிராமங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் சுட்ஜா நகரையும் அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
வெள்ளியன்று, ஆயுதமேந்திய யுக்ரேனியப் படை வீரர்கள் நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறும் வீடியோவும், காஸ்ப்ரோம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு முக்கிய ரஷ்ய எரிவாயு மையத்தையும் கைப்பற்றிவிட்டதாக காட்டும் வீடியோவும் வெளியானது.
யுக்ரேன் எல்லையில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள சுட்ஷாவின் வடமேற்கு புறநகரில் எடுக்கப்பட்ட வீடியோ அது என்பதை `பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது.
முழு நகரத்தையும் யுக்ரேனிய துருப்புகள் கைப்பற்றியதாகக் கூறப்படும் வீடியோவை பிபிசி சரிபார்க்கவில்லை.
ரஷ்ய ராணுவ வீடியோ பதிவுகள், சுட்ஜா நகரம் இன்னும் ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறுகிறது.
ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 38 கிமீ தொலைவில் உள்ள ஒக்டியாப்ர்ஸ்கோ நகரத்தின் வழியாக ஒரு சாலையில் 15 வாகனங்கள் கொண்ட ரஷ்ய கான்வாய் சேதமடைந்ததால் கைவிடப்பட்டதை அந்த வீடியோ காட்டுகிறது.
இந்த காட்சிகளில் ரஷ்ய வீரர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் காயமடைந்தவர்கள், சிலர் இறந்திருக்கலாம் - மேலும் சிலர் வாகனங்களில் இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.
குர்ஸ்க் பிராந்தியத்திற்கு டாங்கிகள் மற்றும் ராக்கெட்-லாஞ்சர் அமைப்புகள் உட்பட கூடுதல் ஆயுத தளவாடங்களை ரஷயா அனுப்பியுள்ளது. ரஷ்ய துருப்புகள் யுக்ரேனியப் படைகளின் "முயற்சியை முறியடிக்கத் தொடர்ந்து முன்னேறுகின்றன" என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.
மோதல் நடக்கும் இடத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் அச்சம்
வெள்ளிக்கிழமையன்று, ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளையும் "அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு" ஐநா அணுசக்தி அமைப்பு வலியுறுத்தியது. ஏனெனில் மோதல்கள் நடக்கும் பகுதி குர்ஸ்க் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இது ரஷ்யாவின் மிகப்பெரிய அணுசக்தி தளங்களில் ஒன்று.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, "கடுமையான கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அணுசக்தி விபத்தைத் தவிர்க்க" நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
சுட்ஜாவிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.
ரஷ்யா மீதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேனின் பகுதிகள் மீதும் யுக்ரேன் நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு ‘கடினமான பதிலடி’ கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவின் அமைதியான மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் கியேவ் ஆட்சி தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது," என்று கூறியுள்ளார்.
படக்குறிப்பு,ரஷ்ய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா
சமீபத்திய தாக்குதல்களுக்கு "ராணுவக் கண்ணோட்டத்தில் எந்த அர்த்தமும் இல்லை" என்பதை யுக்ரேன் "நன்றாகப் புரிந்து கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜாகரோவா கடந்த 24 மணி நேரத்தில் யுக்ரேன் நடத்திய பல தாக்குதல்களைக் குறிப்பிட்டார். பிராந்திய தலைநகரான குர்ஸ்க் மீது ஒரே இரவில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
முன்னதாக, யுக்ரேனின் ஏவுகணைச் சிதைவுகள் குர்ஸ்க் நகரில் ஒரு பல மாடிக் கட்டிடத்தின் மீது விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அந்நகரின் உள்ளூர் கவர்னர் கூறினார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் என்ன சொன்னது?
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனியப் படைகளின் ‘ஆக்கிரமிப்பு முயற்சியை ரஷ்யத் துருப்புக்கள் தொடர்ந்து முறியடிக்கின்றன’ என்று ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.
"ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிச் செல்ல எதிரி குழுக்களின் கவச வாகனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன," என்று அவ்வறிக்கை கூறுகிறது.
யுக்ரேனின் எல்லையில் இருந்து 25கி.மீ., மற்றும் 30கி.மீ., தொலைவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று இடங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது.
யுக்ரேன் கடந்த 24 மணி நேரத்தில் 230 ராணுவ வீரர்களையும் 38 கவச வாகனங்களையும் இழந்தது, என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை. இந்த அறிக்கை முந்தைய நாட்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுடன் ஒத்திருக்கிறது.
முன்னாள் ஜப்பான் தூதர் கசுஹிகோ டோகோ, (தற்போதைய நிலையில் உக்ரேன் பேச்சுவார்த்தையை உதறிவிட்டு யுத்தத்தை மேலும் தொடருமானால் ) கியேவின் பேரம்பேசும் வலு மேலும் மேலும் மோசமடையும், என எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் அவருடன் நடத்திய நேர்காணலில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மறுத்தது முக்கியமான முடிவாகும், இது "உக்ரைன் மூன்று பகுதிகளாக சிதைவதற்கு வழிவகுக்கலாம்" என டோகோ குறிப்பிட்டார்.
"அடுத்த மூன்று மாதங்களில், ரஷ்யா அதன் முழுத்திறனைப் பாவித்து முன்நோக்கி முன்னேறி, சாத்தியமான அளவுக்கு (நிலப்பரப்பைக் கைப்பற்றும்) அடுத்து, உக்ரைன் மீண்டும் எந்தவிதமான முறையிலும் எழ முடியாதபடி உறுதிப்படுத்தி விடும், இது, [அமெரிக்க ஜனாதிபதிகளான] பைடன் அல்லது ஹாரிஸ் அல்லது டிரம்ப் ஆட்சியில் இருந்தாலும்) உக்ரைன் மூன்று பகுதிகளாக சிதைந்துவிடும்: கிழக்கு பகுதி [ரஷ்யாவுக்கு, மேற்கு பகுதி மேற்கு ஐரோப்பாவுக்கு, மற்றும் நடுவில் கியேவ் [அதன் தலைநகராக] கொண்ட சிறிய உக்ரைன் இருக்கும்."
யுக்ரேனின் பகுதிகள் மீதும் யுக்ரேன் நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு ‘கடினமான பதிலடி’ கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எவ்ஜினி பிரிகோஜினுக்கு பயந்து ஒளிந்துகொண்ட ரஷ்ய படைகள் பதிலடிகொடுக்கும் என்பது நல்லதொரு வேடிக்கை. முன்னைய சோவியத் ஒன்றியத்தின் பலமிக்க இராணுவ படையணியாக உக்ரேன் தான் இருந்திருக்கின்றது என இப்போதுதான் புரிகின்றது. ரஷ்யாவின் மாய விம்பம் உடைந்து வெகுநாளாயிற்று!