இப்பூலோகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பு பெண்ணாவாள். அந்தப் பெண்ணினங்களை மாது, தையல், மங்கை, காரிகை, பாவை, யுவதி, கோதை, இடையாள், வஞ்சி, நுண்ணிடை, பெண்டு......... இவ்வாறாக பல பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றாள்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் என்பதே உண்மை. இந்நிலையிலும் பெண் என்பவள் தான் சார்ந்திருக்கும் ஆணின் வெற்றியை தான் அடையும் வெற்றியாக கருதி அவரின் ஒவ்வொரு முயற்சியிலும் அவனோடு கூடவே இருக்கும் நிழலாக அவர்களை பின்தொடருகின்றாள்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் அவள் அவனது தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, துணைவியாக, அண்ணியாக, மகளாய்..... இவ்வாறு கூறிக் கொண்டே செல்லலாம். உலகில் உள்ள அனைத்தையும் சுமக்க கூடியவள்.
அந்த வகையில் ஆணின் வாழ்க்கை துணையான மனைவி பற்றி நோக்கையில் கணவனின் இன்ப துன்பங்களை பங்கெடுப்பவளாகவும் அவன் துன்பங்களில் துவண்டு விழும்போது ஆறுதல் கூறி அவள் தோள் சாயம் ஒரு தாங்கு தூணாகவும் விளங்குகின்றாள். தாய் பத்து மாதங்கள் சுமந்த அவனை தன் ஆயுள் முழுவதும் தனது நெஞ்சில் சுமப்பவள் தான் மனைவி என்ற பாவை.
ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல்ரீதியான வலிமை கொண்டவர்களாகவும் பெண்ணாளவள் மனரீதியான வலிமை உடையவர்களாகவும் திகழ்கின்றார்கள் இதனால் பெண்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் ஆண்கள் அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்தி காட்ட முடியாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள் அவர்களில் அவர்களின் ஆண்களுக்கு என்ன வேண்டும்..? வேண்டாம்..? என்பதை பார்த்து பார்த்து செய்யவோ..!
இந்த பூமியில் பெண்களை பிரம்மன் படைத்தான் என்னமோ புரியவில்லை...இன்று வெற்றி கண்ட சாதனையாளர்களை நாம் பார்த்தோமானால் அவர்களை அவர்களது மனைவிகளையும் கவனித்தோமானால் அவர்களிடம் எவ்வளவு அன்னியோன்யம், புரிந்துணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவ்வாறான மனைவியர்களே தனது கணவன் பயணிக்கும் வெற்றிப்பாதைகளில் வரும் முட்புதர்களை தாண்டி செல்வதற்கு அவர்களுக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றனர்.
மனைவி என்பவள் குடும்பத்தின் தலைவி என்ற பதவியை வகிக்கின்றாள். ஆண்களுடன் பொறுமையை எதிர்பார்ப்பது என்பது கடினமான விடயம் தான் இதனால் தான் ஆண்களிடம் பொறுமை என்பதே எதிர்பார்க்கவே முடியாது. மாறாக வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும் என்பார்கள்.
மனைவியர்கள் பொதுவாக கணவரிடம் வேலை பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து அவரது மனதை மட்டும் விரும்பி கணவரை மனதளவில் ஏமாற்றாமல் தான் செய்யும் எந்த ஒரு செயலையும் கணவனிடம் மறைக்காமலும் மற்றும் தான் செய்யும் எந்த செயலும் கணவனை பாதித்து விடக்கூடாது என மிக கவனமாக இருக்கின்றார்கள்.
தன்னலமற்ற குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் மனைவி எந்த ஒரு செயற்பாட்டிலும் குடும்பம், கணவன், பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை பார்த்து செய்வாள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் மேலும் காட்டு அக்கறை தங்கள் மேல் காட்ட மாட்டார்கள். குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல் நலத்தின் மேல் அக்கறை கொள்வதில்லை.
அறிவுநிலை ரீதியாகவும் உணர்ச்சி நிலையாக வும் சமநிலையில் செயல்பட கூடியவர்கள் பெண்கள் இன்பம் துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் நோக்கி வாழ்க்கையை அடுத்தடுத்து நிலைகளுக்கு எடுத்து செல்லும் மாதர் கூட்டமே...! மனதளவில் தங்கள் கண கணவனின் நிலையை அறிந்து புரிதல் உடன் செயலாற்ற கூடியவர்கள் தங்களது வாழ்க்கையை செம்மையாக வாழ்வதற்கு குடும்பம் செழிக்க அயராது உழைக்கும் காவல் தெய்வங்கள் என்பதில் தவறு ஏதும் இல்லை என்று தான் கூறவேண்டும்.