ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில், லெனினின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம், ஆகஸ்ட் 1, 2024 அன்று 100-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்த நினைவிடம் திறக்கப்பட்டதிலிருந்து, பல சம்பிரதாய மற்றும் ராணுவ அணிவகுப்புகளுக்கான இடமாக இருந்து வருகிறது.
இந்த காலக்கட்டத்தில், இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் லெனின் உடல் வெளியேற்றப்பட்டு மீண்டும் கொண்டுவரப்பட்டது. சிறிது காலத்திற்கு, ஜோசப் ஸ்டாலினின் உடலும் அங்கேயே வைக்கப்பட்டு பின்னர் கொண்டு செல்லப்பட்டது.
லெனினின் சவப்பெட்டியை சேதப்படுத்தும் முயற்சிகளில் இருந்து பாதுகாக்க குண்டு துளைக்காத கண்ணாடி 1970களில் நிறுவப்பட்டது.
1990 களில், லெனினின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. லெனின் நினைவிடம் பற்றிய ஐந்து விஷயங்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
லெனின் உடலை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தது யார்?
லெனினின் உடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் 1923இல் ஜோசப் ஸ்டாலினுக்குத் தோன்றியது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அந்த சமயத்தில் , சோவியத் செக்காவின் தலைவர் (கேஜிபி மற்றும் எஃப்எஸ்பி பாதுகாப்பு முகமைகளின் முன்னோடி) கார்கிவில் பணியில் இருந்தபோது இறந்தார். விளாடிமிர் வோரோபியோவ் என்ற இளம் விஞ்ஞானி அவரது உடலை எம்பாமிங் செய்தார்.
மாஸ்கோவில் விளாடிமிர் உடலைப் பார்த்த கம்யூனிஸ்டுகள் அதன் நன்கு பாதுகாக்கப்பட்ட செயல்முறையால் ஈர்க்கப்பட்டனர்.
அதே ஆண்டு நவம்பரில், லெனினை நெருங்கி வந்த மரணம் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டினார். லெனின் அப்போது உயிருடன் இருந்த போதிலும், மோசமான உடல்நிலையில் இருந்தார்.
லெனினின் உடலை எம்பாமிங் செய்து பாதுகாக்க வேண்டும் என்று ஸ்டாலின் தன் கருத்தை முன்வைத்தார். இந்த யோசனையை எதிர்த்த எதிர்கட்சியினர் அனைவரும் பின்னர் 1930களில் கொல்லப்பட்டனர்.
மார்க்சியத்தில் நினைவுச் சின்னங்களுக்கு இடமில்லை என்று லியோன் ட்ரொட்ஸ்கி கூறினார், அதே நேரத்தில் நிகோலாய் புக்ஹாரின் என்பவர் ஒரு புரட்சித் தலைவரின் உடலை பாதுகாத்து வைப்பது அவரின் நினைவை அவமதிப்பதாக இருக்கும்’ என்று வாதிட்டார்.
லெனினின் மனைவி நடேஷ்டா க்ரூப்ஸ்கயாவும் லெனினின் உடலை வழிப்பாட்டு பொருளாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஆயினும்கூட, முழுமையான அதிகாரத்தை கொண்டிருந்த ஸ்டாலின், அவரது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.
தொழிலாளர்கள் கூட்டமைப்புகளின் கடிதங்களை அவர் மேற்கோள் காட்டினார், இருப்பினும் இவை உண்மையான அடிமட்ட தொழிலாளர்களின் முன்முயற்சியா அல்லது ஸ்டாலினின் கீழ் இயங்கும் அதிகாரிகளால் திட்டமிடப்பட்டதா என்பதை இப்போது தீர்மானிக்க இயலாது.
லெனின் எப்போதும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதே இந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கருத்து.
வடிவமைத்தது யார்?
லெனின் நினைவிடம் முதலில் வெறும் மூன்று மீட்டர் உயரம் மட்டுமே இருந்தது. அவரது இறுதிச் சடங்கிற்காக மூன்று நாட்களில் எழுப்பப்பட்டது.
அதனை உருவாக்கியது கட்டிடக் கலைஞர் அலெக்ஸி ஷுசேவ். அவரே அடுத்தடுத்து இந்த நினைவிடத்தை மேம்படுத்தினார்.
லெனின் 21 ஜனவரி 1924 இல் இறந்தார், அவரது பிரியாவிடை நிகழ்வு மார்ச் இறுதி வரை நீடித்தது. முதலில் எழுப்பப்பட்ட நினைவிடத்தை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்ததாக நம்பப்படுகிறது.
1924 ஆம் ஆண்டின் கோடையில், லெனினை உடலை பாதுகாத்து அவரது உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் செயல்பாடு முழு வீச்சில் நடந்தது.
கட்டிடக் கலைஞர் அலெக்ஸி ஷுசேவ் ஒரு புதிய கட்டிடத்தை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினார், அதே நேரத்தில் விஞ்ஞானிகள் அலெக்ஸி வோரோபியோவ் மற்றும் போரிஸ் ஸ்பார்ஸ்கி ஆகியோர் லெனின் உடலை எம்பாமிங் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 1, 1924 அன்று நினைவிடம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.
அது மரத்தால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அதன் அளவு மற்றும் வடிவம் தற்போது உள்ள நினைவிடத்தை போலவே இருந்தது.
அதன் பின்னர் கிரானைட் நினைவிடம் 1930 இலையுதிர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
உலகத் தொழிலாளர் வர்க்கத் தலைவரின் உடலுக்கு மரியாதை செலுத்த மக்கள் இங்கு நீண்ட வரிசையில் நின்றனர்.
ஒரே நினைவிடத்தில் லெனின் மற்றும் ஸ்டாலின்
1953 ஆம் ஆண்டில், ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலையும் லெனினின் நினைவிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே அதில் சிக்கல்கள் இருந்தன. ஸ்டாலினின் உடலில் உள்ள தோல் பகுதி, குறிப்பாக அவரது முகம், மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அது எம்பாமிங் செயல்முறையை சிக்கலாக்கியது.
லெனின் கல்லறையில் மீதிருந்த பழைய கல்வெட்டுக்கு மேலே “லெனின் ஸ்டாலின்” என்ற புதிய கல்வெட்டு வைக்கப்பட்டது. புதிய கல்வெட்டு மழையால் அழிக்கப்பட்டு, கீழே உள்ள “லெனின்” என்ற வரலாற்று புகழ்பெற்ற வார்த்தையைக் காட்டியது.
சோவியத் தலைமை ஸ்டாலினின் ஆளுமை வழிபாட்டை எதிர்த்தது. அவரது ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட பரவலான அடக்குமுறைகளின் விளைவாக 1961இல் நினைவிடத்தில் இருந்து ஸ்டாலினின் உடல் அகற்றப்பட்டு, கிரெம்ளின் சுவருக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
போருக்குப் பிறகு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவு வரை, இந்த நினைவிடம் புனித ஸ்தலம் போன்று பாதுகாக்கப்பட்டது. வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் சோவியத் பள்ளி மாணவர்கள் இதனை பார்வையிட்டனர்.
மே 1945 இல், வெற்றி அணிவகுப்பின் போது, இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜெர்மன் ராணுவத்தின் நாஜிக் கொடிகள் கல்லறைக்கு முன்னால் தரையில் வீசப்பட்டன.
1950கள் மற்றும் 1970களின் பிற்பகுதி வரை, லெனினின் நினைவிடம் மீது கற்கள், சுத்தியல், எரியும் பொருட்களுடன் பாட்டில்கள் போன்ற ஆயுதங்கள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக குற்றவாளிகள் பிடிபட்டு, கட்டாய மனநல சிகிச்சைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
1973 இல், இங்கு ஒரு வெடிக்கும் சாதனம் பல பார்வையாளர்களைக் கொன்றது. அதன் பின்னர் லெனினின் கல்லறை மீது குண்டு துளைக்காத கண்ணாடி அமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கம்யூனிச கருத்துக்களை வெறுத்த அதிபர் போரிஸ் யெல்ட்சின், லெனினின் நினைவிடத்தை புறக்கணித்து, செஞ்சதுக்கத்தில் பிரத்யேகமாக நிறுவப்பட்ட மேடையில் இருந்து தனது உரைகளை நிகழ்த்தினார்.
1990களின் முற்பகுதியில், லெனினின் உடலை பராமரிக்கும் பொறுப்பில் இருந்த ஆய்வகம் அதன் சிறப்பு நிதியை இழந்தது.
அப்போதிருந்து, நினைவிடம் மற்றும் லெனினின் உடலைப் பாதுகாத்தல் பற்றிய பல ஆவணப்படங்கள் ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. அந்த படங்களில் லெனினின் உடல் 23% மட்டுமே அதன் உண்மையான பாகங்களை தக்கவைத்துள்ளது, மீதமுள்ளவை செயற்கையான சேர்த்தல்களால் மாற்றப்பட்டன என்று குறிப்பிட்டது.
இன்றுவரை, லெனினின் நினைவிடம் ரஷ்யாவின் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. கூகுள் மேப்ஸ் மற்றும் சுற்றுலா இணையதளமான டிரிப் அட்வைசர் ஆகியவற்றில், இது சராசரியாக ஐந்து நட்சத்திரங்களுக்கு நான்குக்கும் மேல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
“என் குழந்தை அவரது மஞ்சள் முகத்தை பார்த்து பயந்துவிட்டான்” போன்ற கருத்து தொடங்கி “சோவியத் சகாப்தத்தை பற்றி நேரடியாகவோ அல்லது அவர்களின் தாத்தா பாட்டி அல்லது பெற்றோரிடமிருந்தோ கேள்விப்பட்ட எவரும் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும்” போன்ற கருத்துக்கள் வரை மதிப்புரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் கம்யூனிச நாடுகளில் மட்டுமே தலைவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதில் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் மற்றும் வியட்நாமின் ஹோ சி மின் ஆகியோரின் உடல்களும் அடங்கும்.
வட கொரியாவில், நாட்டின் மறைந்த தலைவர்கள் கிம் இல் சுங் மற்றும் அவரது வாரிசான கிம் ஜாங் இல் ஆகியோரின் உடல்களும் ஒரு நினைவிடத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.