இனி 6 மாதத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப முடியாது... நாசா கூறுவதென்ன?
10 Aug,2024
அந்த திட்டம் வெற்றிக்கரமாக செயல்படும் பட்சத்தில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் பூமிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பூமிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை பரிசோதிக்க கடந்த ஜூன் 5ஆம் தேதி மூன்றாவது முறையாக சுனிதா வில்லியம்ஸை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது நாசா.
அவருடன் சக விண்வெளி வீரரான புச் வில்மோர் ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். 8 நாட்களில் ஆய்வு மற்றும் சோதனைகளை முடித்து விட்டு பூமிக்கு திரும்புவது தான் அவர்களின் திட்டம்.
ஆனால் அவர்கள் சென்ற போயிங்கின் ஸ்டார்லைனர் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இப்போது வரை அவர்களால் பூமிக்கு திரும்பி வர முடியவில்லை.
ஹீலியம் வாயுக்கசிவு காரணமாக ஸ்டார்லைனர் உந்துவிசை அமைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதை சீர்செய்யும் பணி நடந்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
மற்றொருபுறம் செப்டம்பர் மாதம் “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த திட்டம் வெற்றிக்கரமாக செயல்படும் பட்சத்தில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் பூமிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.