பெரிய நாடுகளை கைக்குள் வைத்திருக்கும் குட்டி நாடு! -
30 Jul,2024
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான ஜிபூட்டி, புவியியல் ரீதியாக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிறிய நாடாக இருந்தாலும், அதன் நில அமைப்பு ராணுவத் தளங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஜிபூட்டியில் 90% நிலப்பரப்பு வறண்டதாகவும், வாழத் தகுதியற்றதாகவும் இருக்கிறது. இதனால், 70% மக்கள் நகர்ப்புறங்களில்தான் வாழ்கிறார்கள். ஆனால், இந்த நாடு பல நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஜிபூட்டியில் ராணுவத் தளங்களை அமைக்க பல நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அமைத்துவிட்டன. தற்போது சீனாவும் ஜிபூட்டியில் ஒரு தளத்தை அமைத்துள்ளது. மேலும் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளும் அந்த வரிசையில் சேர விரும்புகின்றன. வெளிநாட்டு ராணுவத்தினர் தங்களது சக்தியை வெளியுலகத்திற்கு பறைசாற்றுவதற்கு ஜிபூட்டி ஒரு முக்கிய இடமாக விளங்குகிறது.
ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரையிலான எந்த வர்த்தகமும் ஜிபூட்டிக்கு அடுத்துள்ள சூயஸ் கால்வாய் மற்றும் பாப் எல் மண்டேப் ஜலசந்தி வழியாகவே நடந்து வருகிறது. அண்மையில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், வெளிநாட்டு ராணுவத்தினர் செங்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரையிலான மிகப்பெரிய வர்த்தகத்தை பாதுகாக்க, ஜிபூட்டியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால், புவிசார் அரசியல் போட்டியாளர்கள் நெருங்கிய இடங்களில் இணைந்து வாழும் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஜிபூட்டி வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஜிபூட்டியில் பல நாடுகள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டன. ஆப்பிரிக்காவிற்கும், மேற்கு ஆசியாவிற்கும் இடையே இருக்கும் இந்த நாட்டின் கையில்தான் பல பெரிய நாடுகளின் குடுமி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.