ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு பாதிப்பிற்குரிய சிகிச்சை
19 Jul,2024
எம்மில் சிலருக்கு மலம் கழிக்கும் போது சிறிதளவு குருதி கலந்து வெளியேறினால் உடனடியாக அச்சம் கொள்வர். மூலம் எனும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக எண்ணிக் கொள்வர். ஆனால் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற்றால். அவர் பரிசோதித்த பிறகு அது ஃபிஸர் எனப்படும் ஆசனவாய் வெடிப்பு பாதிப்பு என விவரிப்பார். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகம் ஆகி இருப்பதாகவும் தெரிவிப்பார்கள்.
ஆசனவாய் என்பது செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதியில் உள்ள பிரத்யேக தசையாகும். மலக்குடல் கால்வாயில் உள்ள சிறிய குறுகலான வட்ட வடிவிலான பிரத்யேக தசைப் பகுதியில் வெட்டுகள் அல்லது புண்கள் ஏற்படும்.
இதைத்தான் ஆசனவாய் வெடிப்பு பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள். இப்பகுதியில் ஏற்படும் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு அல்லது நரம்பு பிடிப்பின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் . மேலும் இந்த பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படும்.
மலத்தை வெளியேற்றும் போது வலி, இரத்தப்போக்கு ,மலம் கழித்த பின்னரும் நீடித்த வலி, அரிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவை ஆசனவாய் வெடிப்பு பாதிப்பாக கருதலாம்.
மலச்சிக்கல் காரணமாக கடினமான மற்றும் இயல்பான அளவைவிட கூடுதலான மலம் ஆசனவாய் வழியாக வெளியேறும் போது ஆசனவாய் வெடிப்பு பாதிப்பு உண்டாகிறது. மேலும் வேறு சிலருக்கு குடல் அழற்சி, தொடர் வயிற்றுப்போக்கு மற்றும் பிரசவ காலத்தில் கூட இத்தகைய ஆசனவாய் வெடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும்.
அனஸ்கோப்பி , ப்ளெக்ஸிபிள் சிக்மயாடொஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். அதன் பிறகு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு மட்டுமே பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் அளிப்பர்.