கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கான சத்திர சிகிச்சை
19 Jul,2024
எம்மில் பலருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்படும். இதன் போது சிலருக்கு இப்பகுதியிலிருந்து ரத்த கசிவு உண்டாகி உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும்.
இந்நிலையில் இது போன்ற பாதிப்புகளுக்கு தற்போது TIPS Transjugular Intrahepatic Portosystemic Shunt) எனும் நவீன சத்திர சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மது அருந்தும் பழக்கம்- ஹெபடைடிஸ் சி மற்றும் பி வைரஸ் தொற்றுகள்- கொழுப்பு கல்லீரல் - நீரிழிவு - உடற்பருமன் - போன்ற பல காரணங்களால் எம்மில் பலருக்கும் கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்படும். இதனால் கல்லீரலிருந்து இதயத்திற்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
சேதமடைந்த கல்லீரலிலிருந்து திசுக்கள் வழியாக ரத்தத்தை வடிகட்டும் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்த நரம்பு பகுதியில் இயல்பான அளவை விட கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, இரத்த கசிவை உண்டாக்குகிறது. மேலும் சிலருக்கு கல்லீரலிலிருந்து இதயத்திற்கு செல்லும் நரம்பில் ரத்தம் உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு கல்லீரலில் இயல்பான அளவை விட கூடுதலாக இரும்பு சத்து சேகரமாகும். இதுவும் ரத்தக் கசிவு பாதிப்பை உண்டாக்கும்.
இதுபோன்ற தருணங்களில் வைத்தியர்கள் முறையான பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு அவர்களுக்கு TIPS (Transjugular Intrahepatic Portosystemic Shunt ) எனும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.இதன்போது ஸ்டென்ட் ஒன்றை பொருத்தி ரத்தக் கசிவை கட்டுப்படுத்துகிறார்கள்.
மேலும் ,இத்தகைய சிகிச்சையின் காரணமாக கல்லீரல் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறைந்து இயக்கம் சீரடைகிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாகப் பின்பற்றினால் மீண்டும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.