தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
17 Jul,2024
தாய்லாந்தின் தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அவர்கள் உட்கொண்ட தேநீர், காப்பியில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆறு பேரினது தேநீர் கோப்பைகளில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான முதலீடு தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு சென்றவேளை பொலிஸார் மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் சடலங்களை கண்டுள்ளனர்.
மேசையில் இன்னமும் பயன்படுத்தப்படாத உணவுகள் பிளாஸ்டிக் துண்டொன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. பயன்படுத்தப்பட்ட தேநீர் கோப்பைகளில் வெள்ளை நிற பவுடர் போன்ற பொருள் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்கதவு திறந்த நிலையில் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரை தேடுவதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது அந்த கோணத்தில் விசாரணையை கைவிட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒருவரே தேநீர் கோப்பையில் விசத்தை கலந்திருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் அமெரிக்க பிரஜைகள் ஏனைய நால்வரும் வியாட்நாமை சேர்ந்தவர்கள்.
ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட தேநீர் கோப்பைகளிலும் உயிரிழந்த ஒருவரின் உடலிலும் இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன. ஆறு பேரினதும் தேநீர் கோப்பைக்குள் சயனைட் காணப்பட்டது என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.