நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போதுஸ நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து மேடையில் முதல் வரிசையில் சீமான் அமர்ந்திருக்க, கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு கூட்டத்தில் பேசினார்.
அப்போது, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த கலைஞர் பற்றி ஹனீஃபா பாடிய பிரபலமான பாடலை தழுவி கலைஞரை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை மாற்றி பாடினார்.
அது மட்டுமல்ல அமைச்சர் உதயநிதியை புகழ்ந்து தற்போது திமுக மேடைகளில் பாடப்படும் பாடலையும் கேலி செய்து வரிகளை மாற்றி பாடினார். இவற்றை ரசித்து கைதட்டினார் சீமான்.
இந்த நிலையில், சாட்டை துரைமுருகனின் பேச்சு பதிவுகள் உளவுத்துறை மூலம் மேல் இடத்திற்கு சென்றன. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்த போலீஸ், தேர்தல் முடிந்ததும் குற்றாலத்தில் தங்கி இருந்த துரைமுருகனை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது.
ஜூலை 11ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்று கீழமை நீதிபதி விடுவித்துவிட்டார்.
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட அதே நேரம் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “கருணாநிதி என்றைக்கும் தமிழின துரோகி தான். உங்க ஆட்சிங்கறதுனால உங்க அப்பாவை புனிதப்படுத்தி விடுவீர்களா? அதே பாட்டை நானும் இப்போது பாடுகிறேன். என் மீது கை வைத்து பார் பார்ப்போம்” என்று சவால் விட்டு பிரச்சார மேடையில் சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை செய்தியாளர்கள் முன் பாடினார் சீமான்.
இந்நிலையில், ” திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், தலைவர் கலைஞரையே மிகவும் கொச்சைப்படுத்தி விட்டார். இனியும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று திமுகவின் பல மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் ஜூலை 12ஆம் தேதி அமைச்சர் கீதாஜீவன் பத்திரிகையாளர்களை சந்தித்து சீமானை கடுமையாக விமர்சித்தார்.
சீமான் சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும்ஸ ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு உரிய பொறுப்புணர்வு அவருக்கு இல்லை என்றும் அவரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார் அமைச்சர் கீதா ஜீவன்.
சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் சீமான் செயல்படுகிறார் என்று ஒரு அமைச்சரே சொல்லும்போது அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று திமுகவினரே கேள்வி எழுப்புகிறார்கள்.
1278385-768x445.jpg
இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் பேசிய போது, “2009, 2010 காலகட்டத்தில் தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அப்போது இலங்கையின் இறுதிப்போர் நடந்த நிலையில்ஸ திமுகவையும் திமுக அரசையும் எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் இருந்தது. தமிழ் உணர்வாளராக மட்டுமே அறியப்பட்டிருந்தார் சீமான்.
ஒரு கட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சீமானை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அதிகாரிகள், ‘அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவருக்கு அது அரசியல் ஆதாயமாகிவிடும்’ என்று முதலமைச்சர் கலைஞரிடம் தெரிவித்தார்கள்.
ஆனால் கலைஞரோ அப்போது வீரியமாக போராடிக் கொண்டிருந்த வைகோவின் பலத்தை குறைப்பதற்கு சீமான் பயன்படுவார் என்று கணக்கு போட்டுஸ ‘சின்ன பையனா இருந்தா என்ன கைது பண்ணுங்க’
என்று சீமானை பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதன்படியே சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறு மாத காலம் வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமான் விடுதலையாகி வெளியே வந்த பிறகு தமிழ் தேசிய அரசியலில் வைகோவின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தார். அது அன்று கலைஞர் போட்ட அரசியல் கணக்கு.
இதேபோல கடந்த 2023 வருட இறுதியில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார்களை சென்னைக்கு வந்து எழுப்பினார். இதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையம் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்தது. அப்போதும் சீமானை கைது செய்யக்கூடிய ஒரு சூழல் உருவானது.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், ‘என் அப்பா செய்த தப்பை நான் செய்ய மாட்டேன். அவரை அப்போது கைது செய்திருக்காவிட்டால் அரசியலில் இப்படி வந்திருக்க மாட்டார். இப்போது அவரை கைது செய்தால் மீண்டும் அது அவருக்கு அரசியல் ஆதாயம் ஆகிவிடும்’ என கைது நடவடிக்கையை தவிர்த்தார் ஸ்டாலின்.
ஆனால் இன்றுஸ மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் கலைஞருக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளால் சீமான் அவரை இழிவு படுத்துகிறார். சீமானை கைது செய்து ஆக வேண்டும் என்று முதலமைச்சருக்கு அழுத்தங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன.
தற்போது சீமானை கைது செய்தால் அது எதிர்க்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் அரசியல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்ததாக ஆகிவிடுமோ என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. என்றாலும் இறுதி முடிவு முதலமைச்சர் கையில் தான் உள்ளது” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.
நேற்று அமைச்சர் கீதா ஜீவனின் பேட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதியே பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். என்னை அச்சுறுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள். முழுமையான பதிலை நாளை சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
இன்று ஜூலை 13ஆம் தேதி பகல் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் சீமான். இதில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் சீமானை கைது செய்வதற்கு பல முகாந்திரங்கள் இருக்கிற நிலையில்ஸ அவரை இன்னமும் பேச விட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே திமுக நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.