கிரிப்டோ குயின் ருஜா குறித்து தகவல் தெரிவித்தால் 5 மில்லியன் டாலர் பரிசு - யார் இந்த பெண் தெரியுமா?
30 Jun,2024
கிரிப்டோ குயின் என்று அழைக்கப்படும் ருஜா இக்னாடோவா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியை 4 மில்லியனில் இருந்து 5 மில்லியன் டாலராக, அமெரிக்காவின் FBI உயர்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமான கிரிப்டோகரன்சிகள் தற்போது கிடைத்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில கிரிப்டோகரன்சிகள்தான் இருந்தன. அதில் முதன்மையானதாக பிட்காயின் கிரிப்டோகரன்சிதான் இருந்து வந்தது. ஆனால், அதை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பிரமாண்ட விளம்பரத்துடன் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ருஜா இக்னாடோவா என்ற பெண் அறிமுகம் செய்த கிரிப்டோகரன்சியின் பெயர்தான் ஒன் காயின் (One Coin).
விளம்பரம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்ததாக கூறிய ருஜா இக்னாடோவா கொடுத்த விளம்பரங்களால், அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஒன் காயின் மீது முதலீடுகள் குவியத் தொடங்கின. அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்ட ஒன் காயின் கிரிப்டோகரன்சியில் ஒரு கட்டத்தில் 3 மில்லியன் பேர் முதலீடு செய்ததாக, அந்த நிறுவனமே அறிவித்தது.
பல கோடி ரூபாய் முதலீடுகள் ஒன் காயின் கிரிப்டோகரன்சி மீது குவிந்து வந்த நிலையில், திடீரென முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதேபோன்று அவர் மீது உலகம் முழுவதும் முதலீடு செய்தவர்கள் புகார் கொடுக்கத் தொடங்கினார்கள். இதையத்து, அமெரிக்க புலனாய்வுப் பிரிவான FBI அதிகாரிகள் ருஜா இக்னாடோவாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவரை கைது செய்ய முடிவு செய்த நேரத்தில், கடந்த 2017 அக்டோபரில் கிரீஸ் சென்றிருந்த ருஜா இக்னாடோவா திடீரென மாயமானார்
இதையடுத்து, அவருடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டாலும், ருஜா இக்னாடோவா என்ன ஆனார் என்பது தெரியவில்லை. எனவே, அவர் எவ்வளவு மோசடி செய்தார் என்று கணக்கிட்டபோது, அது சுமார் 4 பில்லியன் டாலர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என FBI அறிவித்தது. அதைத் தொடர்ந்து, Europol அமைப்பும் most anted listல் ருஜா இக்னாடோவா பெயரை சேர்த்து, சுமார் 5,000 யூரோவை பரிசுத் தொகையாக அறிவித்தது.
அதன்பிறகும் ருஜா இக்னாடோவா குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், அவரை கண்டுபிடித்து தருவோருக்கு 4 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்தது. பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது சன்மானத்தை 5 மில்லியன் டாலராக அமெரிக்காவின் FBI அறிவித்துள்ளது.