ள்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த புருஷோத்தம்(82) என்பவர் கடந்த மாதம் 22-ம் திகதி கார் விபத்தில் இறந்து போனார்.
இதனை பொலிஸார் வழக்கமான விபத்தாக பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஜாமீனில் வரக்கூடிய வழக்கு என்பதால் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதோடு விபத்தை ஏற்படுத்திய காரும் விடுவிக்கப்பட்டது. ஆனால் புருஷோத்தம் உறவினர் இந்த விபத்து குறித்து சந்தேகம் கிளப்பி இருந்தார்.
திட்டமிட்டு புருஷோத்தம் கொலை செய்யப்பட்டதாகவும், இக்கொலையில் புருஷோத்தம் மருமகள் அர்ச்சனாவிற்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் பொலிஸார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து இக்கொலை தொடர்பாக கார் ஓட்டிய டிரைவர் தர்மிக் மற்றும் அர்ச்சனா கணவரின் கார் டிரைவர் சர்தக் பாக்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலைக்கு மூளையாக செயல்பட்டது புருஷோத்தமின் மருமகள் அர்ச்சனா என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அர்ச்சனா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட புருஷோத்தம்-க்கு 300 கோடி அளவுக்கு குடும்ப சொத்து இருக்கிறது. இச்சொத்தில் தனது பங்கை பிரித்துக்கொடுக்கும்படி அர்ச்சனா கேட்டுள்ளார்.
ஆனால் புருஷோத்தம் கொடுக்கவில்லை. இதையடுத்து 300 கோடி சொத்தையும் முழுமையாக அபகரிக்கும் நோக்கில் புருஷோத்தமை ஆள் வைத்து அர்ச்சனா கொலை செய்துள்ளார்.
இக்கொலை நடந்த அன்று புருஷோத்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளை பார்த்துவிட்டு வரும் போது அவர் மீது கார் ஏறியதில் உயிரிழந்தார்.
அர்ச்சனாவை பொலிஸார் தங்களது காவலில் எடுத்து 3 நாள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அர்ச்சனா தனது மாமனாரை கொலை செய்ய தனது கணவரின் கார் டிரைவர் சர்தக் உதவியை நாடி இருக்கிறார்.
சர்தக்கிடம் பணம் கொடுத்து பழைய கார் ஒன்றை வாங்கும்படி கூறி இருக்கிறார். சர்தக் இக்கொலைக்காக தர்மிக் என்பவனை பயன்படுத்தி இருக்கிறார்.
இக்கொலைக்கு கட்டணமாக அர்ச்சனாவிடமிருந்து 3 லட்சம் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை தர்மிக் வாங்கி இருந்தார்.
இக்கொலைக்கு நீரஜ் என்பவரும் பயன்படுத்தப்பட்டு இருந்தார். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து இரண்டு கார், தங்க நகைகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கொலைக்காக அர்ச்சனா ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அரசின் நகர திட்டமிடுதல் துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் அர்ச்சனா தான் பணியாற்றும் இடத்தில் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் வந்து இருக்கிறது. ஆனால் தனக்கு இருக்கும் அரசியல் பலத்தை பயன்படுத்தி தன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அர்ச்சனா பார்த்துக்கொண்டார்.
இப்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர் மீதான இதர குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.