தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் (Foreplay) என்கிற வார்த்தையை பல வருடங்களாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த ஓரிரண்டு வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஏன் அவசியம்; உறவின் உச்சக்கட்டத்துக்கும் இது அவசியமா என்பதுபற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.
''ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டு. ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முக்கியமாகப் பிறப்புறுப்புகளில். இது வலியில்லாத, எரிச்சலில்லாத நல்ல தாம்பத்திய அனுபவத்தைக் கொடுக்கும். முக்கியமாக, ஃபோர்பிளேவுடன் ஆரம்பிக்கப்பட்ட உறவில் கணவன், மனைவி இருவருமே உச்சக்கட்டம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதனால், ஃபோர்பிளேவும் உங்கள் தாம்பத்தியத்தின் ஓர் அங்கமாக இருக்கட்டும்'' என்றவரிடம், ஃபோர்பிளே தொடர்பான வாசகர் ஒருவரின் கேள்வியை முன்வைத்தோம்.
வாசகரின் கேள்வி: எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன. 3 மாதத்தில் மகள் இருக்கிறாள். என் மனைவி மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால், உடலின் Anatomy பற்றியும் காமத்தை வெளிப்படையாக அணுகுவதையும் நான்தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர் இப்போது தாம்பத்திய உறவில் தனக்கு எது தேவை என்பதைக் கேட்டுப் பெறுகிறார். முன்விளையாட்டுகள் மூலம் தன்னை திருப்திப்படுத்தியும் கொள்கிறார். ஆனால், முதல் குழந்தை பிறந்ததிலிருந்து உறவுகொள்வதற்கு மிகவும் பயப்படுகிறார். ஏனென்று கேட்டால், `ரெண்டாவது குழந்தை உடனே நின்னுடுமோன்னு பயமா இருக்கு' என்கிறார். `சரி, நான் காண்டம் அணிந்துகொள்கிறேன்' என்றால், `அது எனக்கு அசெளகர்யமா இருக்கு' என்கிறார். மாதவிடாயைக் கணக்கிட்டு உறவுகொள்ளலாம் என்றாலும், அது அவருக்குப் புரியவில்லை. `சரி, நீயே ஏதாவதொரு கருத்தடை முறையை ஃபாலோ செய்யேன்' என்றாலும் சங்கடப்படுகிறார். வேறு வழி தெரியாமல், முன் விளையாட்டுகள் மூலம் என் மனைவியைத் திருப்திபடுத்தி வருகிறேன். `எனக்கு என்ன வழி' என்றால், `நீங்க மாஸ்டர்பேட் செஞ்சுக்கோங்க' என்கிறார். இதற்கு என்ன தீர்வு என்றே தெரியவில்லை.
மருத்துவரின் பதில்: செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது. `முன்விளையாட்டுகளிலேயே திருப்தியாகிவிடுகிறேன்' என்று உங்களுடைய மனைவி சொல்வது உண்மையாகவே இருக்கலாம். மார்புப்பகுதியைத் தூண்டி விடுவது, பிறப்புறுப்பைத் தூண்டி விடுவது போன்ற முன் விளையாட்டுகளிலேயே அவருக்கு உச்சக்கட்டம் நிகழ்ந்திருக்கலாம்.
மற்றபடி, மருத்துவரீதியாக கர்ப்பத்தடை முறைகள் கண்டறியப்படாத காலத்தில் `கரு நின்று விடுமோ' என்று பயந்தால் அது நியாயம்தான். இன்றைக்கு இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் அணிகிற காண்டம் சரியில்லையென்றால், இயற்கையான உணர்வைத் தருகிற காண்டம் அணியலாம். அல்லது உங்கள் மனைவி, மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு முறையொன்றை ஃபாலோ செய்யலாம்.
குழந்தை பிறந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன என்று உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதனால், உங்கள் மனைவிக்குப் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற உணர்விருக்கிறதா, அதனால் உறவைத் தவிர்க்கிறாரா என்று கேளுங்கள். அதுதான் பிரச்னையென்றால், தேங்காய் எண்ணெயை ஆணுறுப்பின் நுனியில் தடவிக்கொள்ளுங்கள். எந்த வகையிலும் உங்கள் பிரச்னை தீரவில்லையென்றால், இருவரும் உளவியல் நிபுணரைச் சந்தியுங்கள்.
மேலேயுள்ள என்னுடைய பதிலைப் படிக்கும்போது, சிலருக்கு ஃபோர்பிளே மூலமே உச்சக்கட்டம் அடைய முடியுமா என்கிற கேள்வி எழலாம். `அடைய முடியும்' என்பதுதான் உண்மை. உச்சக்கட்டத்தைப் பொறுத்தவரை, வஜைனல் ஆர்கஸம், எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் என இரண்டு உண்டு . கணவன் - மனைவி பிறப்புறுப்புகள் இணைவது வஜைனல் ஆர்கஸம், பிறப்புறுப்பைத் தூண்டி விடுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம்.
சிக்மண்ட் ஃபிராய்டு, பிறப்புறுப்புகள் இணைகிற வஜைனல் ஆர்கஸம்தான் சிறந்தது என்று சொல்லியிருப்பார். ஆனால், அது சரியல்ல என்பதையும், வஜைனல் ஆர்கஸம் போலவே எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸமும் உச்சக்கட்ட இன்பத்தைத் தரும் என்பதையும் அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் உறுதியாக நிரூபித்துவிட்டன. ஆனால், ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். தாம்பத்திய உறவு என்பது ஃபலூடா ஐஸ்க்ரீம்போல. ஃபோர்பிளேவிலேயே திருப்தியடைந்துவிட்டேன் என்பது ஃபலூடாவின் மேலிருக்கும் ஒரு லேயரை சாப்பிட்டுவிட்டு திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்வதுபோல. ஃபலூடாவின் அத்தனை லேயர்களையும் ருசியுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.''