ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை.
13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது.
போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான பீட் குவின்லான், குட்டிகளை ஈன்றதற்கு முன்பு வரை ரொனால்டோ ஒரு ஆண் பாம்பு என்றே தான் நம்பியதாக கூறினார்.
தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் ரொனால்டோ எந்த ஒரு ஆணுடனும் இணை சேரவில்லை என்கிறார் பீட்.
இணை சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது.
தானாக கருத்தரித்த பாம்பு
இதுபோன்ற நிகழ்வு பிரேசிலிய போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்புகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது.
சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் பராமரிப்பாளராக பணியில் சேர்ந்ததாகவும், அப்போது தன்னுடன் இந்த பாம்புகளையும் எடுத்து வந்ததாகவும் அவர் விவரித்தார்.
ரொனால்டோ குட்டியை ஈன்ற நாளன்று பீட் குவின்லான் வேறு இடத்திற்கு சென்றிருந்துள்ளார். அங்கு பயிலும் மாணவர் ஒருவர், ரொனால்டோ இருந்த பெட்டிக்குள் சில பாம்பு குட்டிகள் நெளிவதை அடையாளம் கண்டு, பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார்.
“உடனடியாக நான் கல்லூரிக்கு விரைந்து வந்தேன். அங்கு நான் பார்த்த போது அந்த பெட்டிக்குள் எங்கு பார்த்தாலும் பாம்புக் குட்டிகள் நிறைந்திருந்தன.”
சில விலங்குகளில் இணையில்லாமல் கருத்தரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
இதுபோன்ற நடைமுறையின் போது தன்னைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருக்கும் சந்ததிகளை அவை உயிரி நகலாக்கம்(க்ளோனிங்) செய்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இணையின் உதவியில்லாமல் ஒரு திருக்கை மீன் தாமாகவே கருத்தரித்தது.
அதேபோல ஆணின் துணையில்லாமல் பெண் முதலை தானாகவே கருத்தரித்த சம்பவம் கோஸ்டாரிகாவில் கடந்த ஆண்டு நடந்தது.
ஆனால் பாம்பு போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இத்தகைய நிகழ்வு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.