அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
சாங்கே 6 (Chang'e 6) எனும் சீன விண்கலம், செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, அதன் பணி நிறைவடைந்துள்ளது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) உறுதி செய்துள்ளது.
கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த முக்கிய கேள்விகளுக்கு இந்த மாதிரிகள் பதிலளிக்கக் கூடும் என்பதால் விஞ்ஞானிகள் Chang'e-6 மாதிரிகளை ஆய்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டில் நிலவின் ஆராயப்படாத தொலைதூரப் பக்கத்தில் கால் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
பூமியிலிருந்து அதன் தூரம் மற்றும் அதன் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, நிலவின் தொலைதூரப் பகுதிகளை அணுகுவது தொழில்நுட்ப ரீதியாக கடினமானது. அதன் நிலப்பரப்பு, பல பெரிய பள்ளங்கள் மற்றும் சில சமதளப் பகுதிகளை உள்ளடக்கியது.
விஞ்ஞானிகள் இந்த ஆராயப்படாத நிலவின் பரப்பு மீது ஆர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம், அதில் பனியின் தடயங்கள் இருக்கலாம், அப்படி பனியின் தடயம் கிடைத்தால் அதன் மூலம் தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் இருப்பை ஆய்வு செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.
சீனா `சாங்கே 6’ விண்வெளி திட்டம் மூலம் நிலவுக்கான தனது பயணங்களில் மேலும் ஒரு அடி முன்னேறி அதன் போட்டியாளரான அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
`சாங்கே 6’ விண்கலம் மங்கோலியன் பாலைவனத்தில் தரையிறங்கியவுடன், அதிகாரிகள் சீனக் கொடியை பெருமையுடன் உயர்த்தும் காணொளியை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் `சாங்கே 6’ மிஷனின் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதிபர் ஷி ஜின்பிங், "மனித குலத்திற்கு பயனளிப்பதற்கும், நாட்டை மேம்படுத்துவதற்கும் ஆழமான விண்வெளி ஆய்வைத் தொடர முடியும். பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்ப்பதில் புதிய உயரங்களை எட்ட முடியும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சீன விண்கலம் `சாங்கே 6’, மே மாத தொடக்கத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்டது/ சில வாரங்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் பணி 53 நாட்கள் நீடித்தது.
சீன தொலைக்காட்சியான சிசிடிவி கூற்றுபடி, விண்கலம் சேகரித்த மாதிரிகள் ஆய்வுக்காக பெய்ஜிங்கிற்கு அனுப்பப்படும்.
இது சீனாவின் ஆறாவது நிலவுப் பயணமாகும். நிலவின் மறுபக்கத்தை ஆராயும் இரண்டாவது பயணமாகும். சீன புராணங்களில் சந்திர தெய்வமாக கருதப்படும் ``சாங்கே’’ (Chang'e) நினைவாக இந்த ஆய்வுக்கு Chang'e என்று பெயரிடப்பட்டது.
இந்த ஆய்வில் ஒரு டிரில்லர் மற்றும் ஒரு ரோபோவைப் பயன்படுத்தி நிலவின் நிலப்பரப்பில் இருந்து மண் மற்றும் பாறைகளை சீன விண்கலம் தோண்டி எடுத்தது. பின்னர் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதன் பின்னர் சீனக் கொடியை நிலவின் மறுபக்கத்தில் நட்டது.
சீனா கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டையும் முந்தும் முயற்சியில் அதன் விண்வெளி ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு குழுவை நிலவுக்கு அனுப்புவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பின்னர் நிலவின் தென் துருவத்தில் ஒரு தளத்தை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
அடுத்த விண்வெளிப் பந்தயம் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது மட்டுமல்ல, நிலவின் வளங்களை உரிமை கோரவும் கட்டுப்படுத்தவும் நாடுகளுக்குள் போட்டி நடக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.