“நியூராலிங்க் சிப்பினை ஹேக் செய்யலாம்”- மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் தகவல்
24 Jun,2024
எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை முதல் முதலாக தனது மூளையில் பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக் எனும் நபர், அந்த சிப்பினை ஹேக் செய்யலாம் என தெரிவித்துள்ளார். அப்படி செய்வதன் மூலம் ஹேக்கர்கள் மூளையின் சிக்னல்கள் மற்றும் சில விவரங்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட், கடந்த ஜனவரியில் இந்த சிப்பை மூளையில் பொருத்திக் கொண்டார். இதன் மூலம் தன்னால் கணினியை இயக்க முடிகிறது என தெரிவித்தார்.
அதன் ஊடாக மின்னஞ்சல், எக்ஸ் மற்றும் இன்ஸ்டா போன்ற சமூக வலைதள பயன்பாடு, ஆன்லைனில் காமிக்ஸ் படிக்கவும், வேற்று மொழி கற்கவும், நியூராலிங்க் தலைமையகம் செல்லும் போது தங்கும் விடுதி புக் செய்யவும் முடிகிறது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் தனது சிப்பினை ஹேக் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சிப் நாணயத்தின் வடிவில் இருக்கும் நியூராலிங்க் முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தது. “என் மூளையில் உள்ள சிப்பினை ஹேக் செய்வதன் மூலம் பெரிய ஆதாயம் இருக்காது. அதன் பலனாக மூளையின் சில சிக்னல்களை பார்க்கலாம்,
மேலும், நியூராலிங்க் நிறுவனம் சேகரிக்கும் சில தரவுகளை பார்க்கலாம். நான் கணினி பயன்படுத்தும் போது ஹேக் செய்தால் அதில் என்ன செய்கிறேன் என்பதை பார்க்கலாம். மேலும், எனது கணினியை பயன்படுத்தலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நியூராலிங்க்: நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.
இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையிலான இந்த ஆய்வுப் பணிகளை நியூராலிங்க் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும் என சொல்லப்படுகிறது. இரண்டாவது நபரின் மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியையும் நியூராலிங்க் கடந்த மே மாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது.