நூற்றுக்கணக்கான மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஏர்பஸ் ஏ340 ஜெட் விமானங்கள், லிதுவேனியாவிலிருந்து ஈரானுக்கு(Iran) கடத்தப்பட்டுள்ளன.
இந்த ஏர்பஸ் ஏ340 விமானங்கள் இரண்டும் முதலில் லிதுவேனியாவிலிருந்து(Lithuania) இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு(Philippines) சென்று கொண்டிருந்தன.
எனினும் நடுவானில் வைத்து இந்த விமானங்கள் ஈரானில் தரையிறங்கும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாத தரப்பினர் லிதுவேனியாவில் இருந்து இந்த விமானங்களை ஈரானுக்கு வெற்றிகரமாக கடத்தியுள்ளனர் என்று டிபென்ஸ் செக்கியூரிட்டி ஒப் ஏசியா இணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஏர்பஸ் ஏ340 விமானங்களில் ஒன்று மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும், மற்றொன்று தெற்கு ஈரானில் உள்ள சார்பஹாரில் உள்ள கொனாரக் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் லிதுவேனியாவின் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்து, ஈரானிய விமான நிறுவனமான மஹான் ஏர், வசம் விமானங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்காகவே இந்த இரண்டு வணிக விமானங்களையும் ஈரான் கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு விமானங்களும் ஈரானிய வான்பரப்பிற்குள் நுழைந்தவுடன், அவற்றின் இறுதி நிலைகளைக் கண்காணிப்பதைத் தடுக்க, அவற்றின் டிரான்ஸ்பொண்டர்கள் (transponders)நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற சம்பவம் ஒன்றில்,நான்கு வணிக ஏர்பஸ் ஏ340 விமானங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து உஸ்பெகிஸ்தானை நோக்கி புறப்பட்டபோது, அவை ஈரானில் தரையிறக்கப்பட்டன.
ஈரானின் அணுசக்தி வளர்ச்சிக்கு எதிராக அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஈரானிய வணிக விமான நிறுவனங்கள் புதிய வணிக விமானங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைகள் ஈரானிய வணிக விமானத் துறையில் நெருக்கடிக்கு வழிவகுத்தன, அத்துடன் சுமார் 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் பறக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறையால் விமான விபத்துக்களும் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.
ஏவியேசன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, 1979 இல் இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து, விமான விபத்துக்கள் இடம்பெற்று 1,755 இறப்புகளை விளைவித்துள்ளன. இதேவேளை ஈரானின் தேசிய விமான நிறுவனமான ஈரான் ஏர், 335 விமானங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது,
ஆனால் அவற்றில் பாதியளவானவை, உதிரி பாகங்கள் கிடைக்காததால் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தொழில் வல்லுநர்கள் ஈரானுக்கு 400 புதிய வணிக விமானங்கள் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.