ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது -இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் கருத்து
21 Jun,2024
ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேல் இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரியே இதனை தெரிவித்துள்ளார்.
ஹமாசினை அழிக்கலாம் அதனை காணாமல்போகச்செய்யலாம் என்ற எண்ணம் காணப்படுகின்றது ஆனால் இது மக்களின் கண்ணில் மண்ணை தூவுவது போன்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் சனல் 13க்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹகாரியின் இந்த கருத்திற்கு இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஹமாசினை எவ்வாறு அழிப்பது என தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவகம் காசா யுத்தத்தின் நோக்கமாக இஸ்ரேல் இதனை கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என பெஞ்சமின் நெட்டன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பின்னர் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் ஹமாசினை அழிப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பேச்சாளர் ஹமாஸ் என்ற கொள்கை குறித்தே தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இராணுவப்பேச்சாளரின் கருத்தினால் உருவாகியுள்ள சர்ச்சையை தணிக்கும் விதத்தில் இஸ்ரேலிய இராணுவம் கருத்து வெளியிட்டுள்ள போதிலும்,அவரது கருத்து இஸ்ரேலிய பிரதமருக்கும் இராணுவத்திற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தீவிரமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.