இத்தாலியில் உயிருக்கு போராடிய இந்திய விவசாயி! சாலையில் வீசிச் சென்ற கொடூரம்! –
20 Jun,2024
இத்தாலியில் விவசாயக் கூலியாக வேலை பார்த்த இந்திய தொழிலாளி விபத்துக்குள்ளான நிலையில் அவரை காப்பாற்றாமல் சாலையில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் பலர் பலவிதமான வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறாக இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் அருகே உள்ள லட்டினா என்ற பகுதி இந்திய புலம்பெயர் தொழிலாளிகள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. இவர்கள் அங்குள்ள பண்ணைகளில் விவசாயக் கூலிகளாகவும், கட்டுமான பணியாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
அப்படியாக இந்தியாவை சேர்ந்த 31 வயது விவசாய கூலியான சத்னம் சிங் என்பவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வைக்கோல் இயந்திரத்திற்குள் சிக்கி அவரது கை துண்டாகியுள்ளது. அவரை வேலைக்கு வைத்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காரில் கொண்டு சென்று சாலையில் வீசியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்னம் சிங்கை அப்பகுதி போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இத்தாலிய இடதுசாரி அமைப்புகள், எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இத்தாலியில் மனிதநாகரீகம் தோல்வி அடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள இத்தாலி நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர் மரினா கால்டோரன், இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார்.