விண்வெளியில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர், 371 நாட்கள் பயணம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு சுற்றுப்பாதையில் இருப்பது, விண்வெளி வீரர்களின் தசைகள், மூளை, குடல் பாக்டீரியா ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் உடலை சில ஆச்சர்யகரமான வழிகளில் மாற்றும்.
சில கைகுலுக்கல்கள், சின்ன ஃபோட்டோஷூட் மற்றும் கையசைத்தலுடன், 371 நாட்கள் தனக்கு வீடாக விளங்கிய, அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அளவையொத்த விண்கலம் மற்றும் சோலார் பேனல்களுக்கு பிரியாவிடை அளித்தார் நாசா விஞ்ஞானி ஃபிராங்க் ரூபியோ. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பிய அவருடைய பயணத்தின் நிறைவு, இதுநாள் வரை அமெரிக்கர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட விண்வெளிப் பயணமாக உள்ளது.
விண்வெளியில் 355 நாட்கள் பயணம் என்பதே அமெரிக்கரின் முந்தைய சாதனை ஆகும். மார்ச் 2023-ல் ஃபிராங்க் ரூபியோவும் அவருடைய குழுவும் மீண்டும் பூமி திரும்பும் தருணத்தில், அவர்களின் விண்கலத்திலிருந்து குளிர்விப்பான் (coolant) கசிந்ததால், அவர்களின் விண்வெளிப் பயணம் நீட்டிக்கப்பட்டது. விண்வெளியில் கூடுதலாக தங்க நேர்ந்ததால், ரூபியோவால் பூமியை சுற்றி 5,963 சுற்றுகளும் 157.4 மில்லியன் மைல்களும் (253.3 மில்லியன் கி.மீ) பயணிக்க முடிந்தது.
இருந்தாலும், மனிதரால் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணத்தை முறியடிக்க அவருக்கு சுமார் இரண்டு மாதங்கள் குறைவாக உள்ளன. ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி போல்யகோவ், 1990களின் மத்தியில் மிர் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு விண்வெளியில் 437 நாட்கள் தங்கினார்.
சோயுஸ் எம்எஸ்-23 எனும் விண்கலம் மூலம் ரூபியோ பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார். குறைவான புவி ஈர்ப்பு சூழல் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கியதால் அவரின் உடலில் ஏற்பட்ட விளைவால், கேப்ஸ்யூலில் இருந்து அவர் மீட்புக்குழுவினரால் தூக்கிக் கொண்டு வரப்பட்டார்.
நீண்ட கால விண்வெளிப் பயணங்களை எப்படி சமாளிப்பது என்பதற்கான முக்கியமான தகவல்களையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் அவருடைய இந்த பயணம் வழங்கியுள்ளது. விண்வெளியில் குறைவான ஜிம் உபகரணங்களுடன் உடற்பயிற்சி செய்வது மனித உடலை எப்படி பாதிக்கும் என்ற ஆராய்ச்சியில் பங்கேற்ற முதல் விண்வெளி வீரர் இவரே.
,துணை உந்துகலன்கள் மற்றும் பாராசூட்கள் ஆகியவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு இறங்குவதை மெதுவாக்கினாலும், அந்த பயணம் மிகவும் கடினமாக இருக்கும்
நம் கை, கல்களில் தொடர்ச்சியாக புவி ஈர்ப்பு விசையின் இறுக்கம் இல்லாததால், தசைகள் மற்றும் எலும்புகளின் எடை விரைவிலேயே குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக, முதுகு, கழுத்து, பின்னங்கால், தொடையிலிருந்து காலை நீட்டிக்கும் தசை ஆகியவை பாதிப்படைந்து, மெலிய ஆரம்பிக்கும். வெறும் இரண்டு வாரங்களிலேயே தசைகளின் எடை 20% வரை குறைந்துவிடும். விண்வெளியில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தங்கியிருக்கும்போது 30% வரை குறையும்.
அதேபோன்று, பூமியில் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசை காரணமாக எலும்பு மண்டலத்திற்கு போடப்படும் அதிக வலுவை விண்வெளியில் விஞ்ஞானிகள் அளிக்காததால், எலும்புகளில் கனிம நீக்கம் நடைபெற்று, அவை வலுவிழக்க ஆரம்பிக்கும். விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் எடையை இழக்கின்றனர், ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். (பூமியில் வயதான ஆண்கள் மற்றும் பெண்கள், ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்). இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான நேரம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது. பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.
இதனைத் தடுக்க சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் ஒருநாளைக்கு 2.5 மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில், ஸ்குவாட், எடை பயிற்சிகளும் அடங்கும். மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக சில மாத்திரைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், இத்தகைய உடற்பயிற்சிகளும் தசை செயல்பாடு மற்றும் அதன் எடையில் ஏற்படுத்திய இழப்புகளை தடுப்பதில் போதுமானதாக இல்லை என சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. வலுப் பயிற்சியில் அதிக எடைகளை பயன்படுத்துதல், HIIT எனப்படும் அதி தீவிர பயிற்சிகள் இத்தகைய தசையிழப்பை தடுப்பதில் உதவுமா என்பதை பரிசோதிக்க வேண்டும் என அந்த ஆராய்ச்சி பரிந்துரைத்துள்ளது.
விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும்போது, அவர்களின் முதுகுத்தண்டு சிறிது நீட்சியடைவதால் கொஞ்சம் உயரம் அதிகரிக்கவும் செய்கிறார்கள். இதனால், விண்வெளியில் இருக்கும்போது முதுகுவலி ஏற்படுகிறது. பூமிக்குத் திரும்புவதற்கு முன்னதாக, தனது முதுகெலும்பு வளர்ந்து வருவதாக ரூபியோ கூறினார்.
ஸ்காட் கெல்லியின் 340 நாள் பயணம், பூமியில் உள்ள தனது இரட்டை சகோதரருடன் ஒப்பிடும்போது விண்வெளி அவரை எவ்வாறு பாதித்தது என்பதை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை அனுமதித்தது.
சுற்றுப்பாதையில் இருக்கும்போது ஆரோக்கியமான எடையை பராமரிப்பது ஒரு சவால். நாசா அதன் விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையான சத்தான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய முயற்சிக்கிறது. மிக அண்மையில் விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்படும் சில சாலட் இலைகள் உட்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவையும் விண்வெளி வீரரின் உடலை பாதிக்கும்.
ஸ்காட் கெல்லி, ஒரு நாசா விண்வெளி வீரர். அவரது இரட்டை சகோதரர் பூமியில் தங்கியிருந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 340 நாட்கள் தங்கியிருந்த பின்னர், நீண்டகால விண்வெளிப் பயணத்தின் விளைவுகள் குறித்த மிக விரிவான ஆய்வில் பங்கேற்றார் கெல்லி. சுற்றுப்பாதையில் இருந்தபோது அவரது உடலின் எடையில் 7% இழந்தார்.
கண் பார்வை
பூமியில், ஈர்ப்பு விசை நம் உடலில் உள்ள ரத்தத்தை கீழ்நோக்கி செலுத்த உதவுகிறது, அதே நேரத்தில் இதயம் அதை மீண்டும் மேலே செல்ல வைக்கிறது. இருப்பினும், விண்வெளியில், இந்த செயல்முறை குழப்பமடைகிறது (இதற்கு உடல் ஓரளவுக்கு தகவமைத்துக் கொள்கிறது என்றாலும்), இதனால் ரத்தம் சாதாரணமாக இருப்பதை விட தலை பகுதியில் குவிந்துவிடும். இதில், சிறிதளவு ரத்தம் கண்ணின் பின்புறம் மற்றும் பார்வை நரம்பைச் சுற்றி நிரம்புவதால், எடிமா எனப்படும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது பார்வை கூர்மை குறைதல் மற்றும் கண்ணில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
இந்த மாற்றங்கள் விண்வெளியில் இரண்டு வாரங்கள் கழிந்த உடனேயே கூட ஏற்படலாம், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதன் ஆபத்து அதிகரிக்கிறது. விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய ஒரு வருடத்திற்குள் சில பார்வை குறைபாடுகள் சரியாகின்றன, மற்றவை நிரந்தரமாக இருக்கலாம்.
விண்மீன்களில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் மற்றும் ஆற்றல்மிக்க சூரிய துகள்கள், மற்ற கண் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். பூமியின் வளிமண்டலம் இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது, ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் இந்த பாதுகாப்பு இருக்காது. அதிகப்படியான கதிர்வீச்சிலிருந்து விண்கலங்கள் கவசமளிக்க முடியும் என்றாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவர்களின் கண்களில் ஒளி பிரகாசங்களைக் கண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், காஸ்மிக் கதிர்களும் சூரிய துகள்களும் விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளைத் தாக்குகின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் புவியீர்ப்பு விசை மிகக்குறைவாக இருப்பது, மனித உடலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் வெகுதூரம் ஆராயும்போது ஒரு சவாலாக இருக்கும்.
நரம்பு மண்டலத்தில் மாற்றம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கிய பிறகும் கெல்லியின் அறிவாற்றல் செயல்திறனில் சிறிதளவு மாற்றமே ஏற்பட்டது. ஒப்பீட்டளவில் பூமியில் இருந்த அவரது சகோதரரைப்போலவே அது ஏறக்குறைய இருந்தது. இருப்பினும் கெல்லி பூமிக்கு வந்து சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்கு அவரது அறிவாற்றல் செயல்திறனின் வேகமும் துல்லியமும் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். ஒருவேளை பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவரது வித்தியாசமான வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்திக்கொள்ள அவரது மூளைக்கு இந்தக்கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம்.
2014 இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 169 நாட்கள் செலவழித்த ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் பற்றிய ஆய்வு, அவர் சுற்றுப்பாதையில் இருக்கும்போது மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுவதை வெளிப்படுத்தியது. மோட்டார் செயல்பாடு தொடர்பான மூளையின் நரம்பு இணைப்புகளில் மாற்றங்கள் இருப்பதை அது கண்டறிந்தது. அதாவது, இயக்கம் மற்றும் நோக்குநிலையில் முக்கிய பங்கு வகிக்கும் வெஸ்டிபுலர் கோர்டெக்ஸில் மாற்றங்கள் இருந்தன. விண்வெளியில் இருக்கும்போது எடையின்மையின் விசித்திரமான தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு இல்லாமல் திறமையாக நகர்ந்து நங்கூரமிடவும், மேலே அல்லது கீழே என்று எதுவும் இல்லாத உலகத்தில் வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீண்ட கால விண்வெளிப் பயணங்களின் போது மூளையின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிற மாற்றங்கள் குறித்து மிக சமீபத்திய ஆய்வு கவலைகளை எழுப்பியுள்ளது. ரைட் லேட்ரல் மற்றும் தேர்ட் வென்ட்ரிக்கிள்கள் என அழைக்கப்படும் மூளையில் உள்ள குழிவுகள் (செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சேமிப்பது, மூளைக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவது மற்றும் கழிவுகளை அகற்றுவது ஆகிய வேலைகளை செய்கிறது) வீங்கக்கூடும். அவை சாதாரண அளவுவுக்கு சுருங்குவதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம்.
நமது உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் அமைப்பும் பன்முகத்தன்மையும்தான் நல்ல ஆரோக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க திறவுகோல் என்பது சமீபத்திய ஆண்டுகளின் ஆராய்ச்சியில் இருந்து தெரிகிறது. இந்த மைக்ரோபயோட்டா, நாம் உணவை எவ்வாறு ஜீரணிக்கிறோம் மற்றும் நம் உடலில் ஏற்படும் அழற்சியின் அளவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கூடவே நமது மூளை வேலை செய்யும் விதத்தையும் அது மாற்றக்கூடும்.
கெல்லியின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு அவரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவரது குடலில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அவர் விண்வெளிக்கு பறப்பதற்கு முன்பு இருந்ததை விட அதிகம் மாறியிருப்பதைக் கண்டறிந்தனர். அவர் உண்ட வித்தியாசமான உணவு மற்றும் அவர் தனது நாட்களைக் கழித்த மாறுபட்ட நபர்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது அவ்வளவாக ஆச்சயத்தை அளிக்கவில்லை. (நாம் சேர்ந்து வாழும் நபர்களிடமிருந்து குடல் மற்றும் வாய்வழி நுண்ணுயிரிகள் அதிக அளவில் நம் உடலுக்குள் செல்கின்றன). ஆனால் கதிர்வீச்சின் வெளிப்பாடு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடு ஆகியவையும் அவரது உடல் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் பங்கு வகித்தன.
தோல்
இப்போது ஐந்து நாசா விண்வெளி வீரர்கள் 300 நாட்களுக்கு மேல் சுற்றுப்பாதையில் செலவிட்டிருந்தாலும், சுற்றுப்பாதையில் இருக்கும்போது தோலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பது பற்றிய நுண்ணறிவுக்கு நாம் கெல்லிக்கு மீண்டும் நன்றி சொல்ல வேண்டும்.
அவர் விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய ஆறு நாட்களுக்குப் பிறகு அவரது தோலில் அதிக உணர்திறன் மற்றும் சொறி (rashes) இருப்பது கண்டறியப்பட்டது. விண்வெளி பயணத்தின்போது தோலில் தூண்டுதல் இல்லாதது இதற்குக்காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர்.
மரபணுக்கள்
கெல்லியின் நீண்ட கால விண்வெளி பயணத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று அது அவரது டிஎன்ஏவில் ஏற்படுத்திய விளைவுகள் ஆகும். டிஎன்ஏவின் ஒவ்வொரு இழையின் முடிவிலும் டெலோமியர்ஸ் எனப்படும் கட்டமைப்புகள் உள்ளன. அவை நமது மரபணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்று கருதப்படுகிறது. நமக்கு வயதாகும்போது, இவை குறுகியதாகின்றன. ஆனால் விண்வெளி பயணம் இந்த டெலோமியர்களின் நீளத்தை மாற்றுவதை, கெல்லி மற்றும் பிற விண்வெளி வீரர்கள் மீதான ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
"விண்வெளிப் பயணத்தின் போது நீளமான டெலோமியர்களைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்" என்று கெல்லி மற்றும் அவரது சகோதரரை ஆய்வு செய்த குழுவில் ஒரு பகுதியாக இருந்த கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கதிரியக்க ஆரோக்கியத்தின் பேராசிரியர் சூசன் பெய்லி கூறுகிறார். சுமார் ஆறு மாத குறுகிய பயணங்களில் பங்கேற்ற, ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத மேலும் 10 விண்வெளி வீரர்களுடன் அவர் தனி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
"பூமிக்கு திரும்பிய பிறகு எல்லா விண்வெளி வீரர்களின் டெலோமியர் நீளமும் விரைவாகக் குறைந்தது எதிர்பாராதது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்கள் முன்பு இருந்ததை விட நீளம் குறைவான டெலோமியர்களைக் கொண்டிருந்தனர். நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் வயதாகும் செயல்முறையில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.”
இது ஏன் நடக்கிறது என்பது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று அவர் கூறுகிறார். "எங்களிடம் சில தடயங்கள் உள்ளன. ஆனால் ஒரு வருடத்தை விண்வெளியில் கழித்த ரூபியோ போன்ற அதிக காலம் விண்வெளியில் இருந்தவர்கள், அதன் சாத்தியமான ஆரோக்கிய விளைவுகளையும், அவற்றை வகைப்படுத்துவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்."
விண்வெளியில் இருக்கும்போது அவர்கள் சந்தித்த கதிர்வீச்சின் சிக்கலான கலவை இதற்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். சுற்றுப்பாதையில் இருக்கும் போது நீண்டகால கதிர்வீச்சை அனுபவிக்கும் விண்வெளி வீரர்கள் டிஎன்ஏ சேதத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
மரபணு வெளிப்பாட்டிலும் சில மாற்றங்கள் இருந்தன. உயிரணுக்களில் புரதங்களை உருவாக்க டிஎன்ஏவைப் படிக்கும் பொறிமுறையானது, கெல்லியிடம் காணப்பட்டது. இது அவரது விண்வெளி பயணத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இவற்றில் சில டிஎன்ஏ சேதத்திற்கு உடலின் பதில், எலும்பு உருவாக்கம் மற்றும் மன அழுத்தத்திற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் பதில் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருப்பினும், இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை அவர் பூமிக்கு திரும்பிய ஆறு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.
2024 ஜூன் இல் ஒரு புதிய ஆய்வானது, ஆண் மற்றும் பெண் விண்வெளி வீரர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் விண்வெளிப் பயணத்தின்போது செயல்பட்ட விதத்தில் சில சாத்தியமான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. 2021 செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கும் குறைவாக இருந்த ஸ்பேஸ் எக்ஸ் இன்ஸ்பிரேஷன் 4 பணித்திட்ட குழுவினரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து மரபணு வெளிப்பாடு தரவைப் பயன்படுத்தி, நோயெதிர்ப்பு அமைப்பு, முதுமையடைதல் மற்றும் தசை வளர்ச்சி தொடர்பான 18 புரதங்களில் மாற்றங்களை அந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
முந்தைய பயணங்களில் இருந்த மற்ற 64 விண்வெளி வீரர்களின் மரபணு செயல்பாட்டை ஒப்பிடுகையில், விண்வெளி பயணத்திற்கு முன்பு இருந்ததை விட அழற்சியில் பங்கு வகிக்கும் மூன்று புரதங்களின் வெளிப்பாட்டில் மாற்றத்தை ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மரபணு செயல்பாட்டிற்கு அதிக இடையூறு ஏற்பட்டது மற்றும் பூமிக்குத் திரும்பிய பிறகு அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்தனர்.
குறிப்பாக, உடலில் ஏற்படும் அழற்சியின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இன்டர்லியூகின்-6 மற்றும் நோய் எதிர்ப்புச் செல்களை நோய்த்தொற்று உள்ள இடங்களுக்குச் செலுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் இன்டர்லியூகின்-8 ஆகிய இரண்டு புரதங்களின் மரபணு செயல்பாடு, பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் அதிக விளைவைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ரத்த உறைதலில் பங்கு வகிக்கும் ஃபிர்பிரினோஜென் எனப்படும் மற்றொரு புரதமும் ஆண் விண்வெளி வீரர்களில் அதிகம் பாதிக்கப்பட்டது.
ஆனால் விண்வெளிப் பயணத்தின் இந்த குறிப்பிட்ட விளைவுகளுக்கு பெண்கள் ஏன் குறைவான உணர்திறன் கொண்டவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பது ஆராய்ச்சியின் கீழ் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது மன அழுத்தத்தை சமாளிக்கும் அவர்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
நாசா விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், விண்வெளியில் 675 நாட்கள் இருந்துள்ளார். அவர் மற்ற எந்த ஒரு அமெரிக்கரையும் விட சுற்றுப்பாதையில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இருப்பினும் உலக சாதனை தற்போது ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோவாவிடம் உள்ளது. அவர் 878 நாட்கள் விண்வெளியில் இருந்தார்.
கெல்லி தனது விண்வெளி பயணத்திற்கு முன்பும், அதன் பின்னரும் தொடர்ச்சியான தடுப்பூசிகளைப் பெற்றார். அவரது நோயெதிர்ப்பு அமைப்பு சாதாரணமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. ஆனால் விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் இருக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவுகளுக்கு ஏற்ப வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதாக பெய்லியின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
இருப்பினும் பூமியில் வாழ்வதற்காக பரிணாம வளர்ச்சியடைந்த இரு கால், பெரிய மூளை உயிரினங்களில் விண்வெளி பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டி உள்ளது. 371 நாட்கள் விண்வெளியில் இருந்த ரூபியோவின் மருத்துவப் பரிசோதனைகள், ரத்த மாதிரிகள் மற்றும் ஸ்கேன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராயும்போது அவர்களுக்கு மேலும் பல விஷயங்கள் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.