பெண் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய கணவர்: தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்!
17 Jun,2024
தமிழ்நாடு (Tamil Nadu) காஞ்சிபுரத்தில் பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரியை அவரது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது, இன்று (17) சங்கரமடத்திற்கு அருகேயுள்ள தனியார் வங்கி நுழைவு வாயிலில் இடம்பெற்றுள்ளது.
சின்னகாஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவல்துறை அதிகாரி டில்லிராணியே இவ்வாறாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் காவல்துறை அதிகாரியும் அவரது கணவரும் இன்று பகல் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
இதன்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, மனைவியின் இடது கையில் குத்திவிட்டு அவரது கணவர் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, பெண் காவல்துறை அதிகாரி உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.