21 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் துபாயின் செயற்கைத் தீவுகள் திட்டம்
15 Jun,2024
துபாயில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட 'தி வர்ல்ட்' திட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் 260 செயற்கை தீவுகளை உருவாக்கும் திட்டமே இது. இந்த தீவுகள் உலகின் ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களாக இணைக்கப்படும். வானிலிருந்து பார்க்கும் போது உலகின் வரைபடம் போல தத்ரூபமாக தெரியும்.
ஆனால் இங்கு இரண்டு தீவுகள் மட்டுமே முழுவதுமாக கட்டப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்கள், விடுதிகள் கட்டிக்கொள்ளலாம். இந்த தீவுகள் ஒவ்வொன்றும் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி பெற்றிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்க இந்த செயற்கை தீவுகள் உதவும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு நக்கீல் ப்ராபர்டீஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஏற்கெனவே பாம் ஜுமேரா என்ற பெரிய செயற்கை தீவை வெற்றிகரமாக கட்டி முடித்து, செயல்பாட்டில் உள்ளது.
ஆனால் 2008ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி துபாயையும் சூழ்ந்தது. பிறகு இந்த நிறுவனம் கடனில் மூழ்கியது.
செயற்கை தீவுகள் கட்டுவது மூலம், கடலில் உள்ள பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என்ற புகாரும் முன் வைக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்ததாரரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.