போர் நிறுத்தத்திற்கு தயார் - உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
15 Jun,2024
உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதாவது “ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெறத் தொடங்கவேண்டும்” எனவும் “நேட்டோவில் சேருவதற்கான திட்டங்களை உக்ரேன் கைவிடவேண்டும்” எனவும் அவர் தனது நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டால், உடனே போரை நிறுத்த உத்தரவிடுவதாகவும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்குறுதியளித்துள்ளார்.
உக்ரேன் – ரஷ்ய போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் பதிலடி கொடுப்பதால் போர் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
பாதுகாப்பிற்காக நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயன்றமையினால், அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்படுமாக இருந்தால், நேட்டோ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் இராணுவ உதவி செய்ய வேண்டும் என்பதே நேட்டோ நாடுகளின் உடன்படிக்கையாகும்.
இந்நிலையிலேயே, உக்ரேனை நேட்டோவில் சேர விடாமல் தடுப்பதற்கு, ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு இரண்டு நிபந்தனை விதித்துள்ளமை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.