கோவையில் தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானையை முதுமலை முகாமில் வைத்து வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். தாயைப் பிரியும் குட்டி யானைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? தாய் யானையைப் போல் வனத்துறையால் குட்டியை வளர்க்க முடியுமா?
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் மே 30-ஆம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 40 வயதான பெண் யானையையும், மூன்று மாதங்களேயான அதன் குட்டி யானையையும் வனத்துறையினர் ரோந்து பணியின் போது கண்டறிந்தனர்.
வனக்கால்நடை மருத்துவர்கள் குழுவினர், 5 நாட்கள் அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர், சிகிச்சையில் இருக்கும் போதே தாய் யானையிடம் குட்டி யானை பால் குடித்து வந்தது. தாய் யானையின் உடல் நலம் தேறியதால், அதனை அதன் குட்டியுடன் சேர்த்து வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்திருந்தனர்.
இந்த நிலையில், குட்டி யானை தாயிடம் இருந்து பிரிந்து, தனியார் தோட்டத்தினுள் சுற்றித்திரிந்தது. குட்டி யானையை மீட்டு, ட்ரோன் மூலம் தாய் யானையை கண்டறிந்து பல முறை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டும், தாய் யானை குட்டியைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.
இதன் காரணமாக கடந்த, 9-ஆம் தேதி குட்டி யானையை, நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துக் குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி இதேபோன்று, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையையும், அதன் குட்டியையும் மீட்ட வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை கொடுத்தனர். தாய் யானை இறந்த நிலையில், குட்டியை தெப்பக்காடு முகாமில் வைத்துப் பராமரித்து வருகின்றனர்.
கோவை, ஈரோட்டில் மீட்கப்பட்ட இரு குட்டி யானைகள் உள்பட தற்போது, மூன்று குட்டி யானைகளை வளர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தாய் யானையைகளை விட்டு குட்டிகள் பிரிவதற்கான காரணம் என்ன? தாய் மற்றும் தன் கூட்டத்தை இழக்கும் குட்டி யானைகளின் மனநிலை எப்படி இருக்கும்? தாய் யானையைப் போல் குட்டி யானையை வனத்துறையினர் வளர்க்க முடியுமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இந்தக் கேள்விகள் குறித்து, பல ஆண்டுகளாக யானைகள் குறித்து ஆய்வு செய்து வரும் சில ஆய்வாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் வனத்துறையினரிடம் தமிழ் பேசியது.
தாய் யானைகள் குட்டியைப் பராமரிக்காமல் தனித்து விடுவது, உணவு பற்றாக்குறை உள்ள வனப்பகுதிகளில் அதிகம் நிகழ்வதாக தெரிவிக்கிறார், ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வன உயிரியல் துறையின் தலைவரும், யானைகள் ஆய்வாளருமான முனைவர் ராமகிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "யானைகள் தனது குட்டியைப் பராமரிக்காமல் தனித்து விடுவதற்கு தாய் யானையின் உடல் நிலை, வயது மூப்பு, மரணம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. தனித்து விடப்பட்டாலும் அந்தக் குட்டி யானையின் கூட்டம் அதைப் பராமரிக்கும்,” என்றார்.
குட்டிகள் தாய் யானையைப் பிரிந்து செல்வதற்கு அதன் வாழிடம் ஒரு முக்கியக் காரணம் என அவர் கூறுகிறார்.
முதுமலை போன்ற வனப்பகுதிகளில் யானைகளுக்குப் போதிய உணவு ஒரே இடத்தில் அல்லது சிறு தொலைவுக்குள்ளேயே கிடைத்து விடுகிறது. இதனால், யானைகள் பெருங்கூட்டமாக ஒரே பகுதியில் அல்லது சிறு தொலைவுக்கு உள்ளேயே நகர்கின்றன. இதுபோன்ற கூட்டத்தில் இருந்து ஒரு குட்டி யானை தனித்து விடப்படுவது அரிதாகவே நடக்கிறது. ஏனெனில், “தாய் யானை இறந்தாலோ, பராமரிக்காமல் விட்டாலோ அந்தக்கூட்டத்தின் பெண் யானைகள் குட்டியை பார்த்துக்கொள்ளும்," என்கிறார் ராமகிருஷ்ணன்.
மாறாக, கோவை, ஈரோடு, ஓசூர் போன்ற பகுதிகளில், யானைகளுக்குப் போதிய உணவு ஒரு சிறு நிலப்பரப்பில் கிடைக்காததால், உணவு மற்றும் நீர் தேடி அவை நீண்ட தொலைவிற்குப் பயணிக்கின்றன. இதனால், யானைகள் பெருங்கூட்டமாக இருக்காது, மிகச்சிறு குழுக்களாகத்தான் சுற்றித்திரியும்.
இதுபோன்ற வனப்பகுதிகளில், கூட்டத்தில் இருந்து குட்டி யானை தனித்து விடப்படுவதையும், குட்டி யானை பிரிந்து சென்று மீண்டும் சேர முடியாத சூழல்களைப் பார்க்க முடிவதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
"எனினும் தாய் யானையை பிரிந்தாலோ, இறந்தாலோ, குட்டி யானை சில நாட்களுக்கு மன வேதனையில் சுற்றித்திரியும். தாய் யானையும் இதே மன வேதனையைச் சந்திக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்திலும், கோபத்துடனும் இருக்கும்," என்கிறார் அவர்.
தாயைப் பிரியும் குட்டி யானையின் மனநிலை வெகுவிரைவில் சாதாரண நிலைக்கு மாறிவிடும் என்கிறார், மூத்த வனக்கால்நடை மருத்துவரும் கால்நடை பராமரிப்புத்துறை
"தாய்மை உணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. தாயும் குட்டியும் பிரிந்தால் இரண்டும் மன ரீதியில் பாதிப்பைச் சந்திப்பது உண்மை தான், ஆனால், அந்த பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்காது," என்கிறார் அவர்.
“குட்டி யானைக்கு பால் கிடைக்காத வரையில் அவை மனரீதியில் பாதிக்கப்படும், பின்பு வேறு யானைகளின் பராமரிப்பு கிடைத்ததும் பாதிப்பை மறந்து விடும். தாய் யானையும் சில நாட்கள் குட்டி பிரிந்த வேதனையில் இருக்கும், ஆனால் விரைவில் இனப்பெருக்கம், உணவு தேடி அலைவதென சாதாரண நிலைக்கு மாறிவிடும்," என்கிறார் மனோகரன்.
மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிரினமும், இது போன்ற சூழல்கள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து வெகுவிரைவாக வெளிவந்து சாதாரண மனநிலைக்கு மாறிவிடும் என்கிறார் அவர்.
தனித்து விடப்பட்ட குட்டி யானையைக் கண்டறிந்தால், வனத்துறை என்ன செய்வார்கள்? எப்படி வளர்ப்பார்கள் என்பதையும் விவரிக்கிறார் மருத்துவர் மனோகரன்.
"தாயால் தனித்து விடப்பட்டக் குட்டியைக் கண்டறிந்தால் உடனடியாக அந்தப்பகுதி முழுவதிலும் வனத்துறையினர் அதன் தாய் மற்றும் கூட்டம் இருக்கிறதா எனத் தேடுவார்கள். குட்டிக்குப் பால் அல்லது உணவு கொடுத்துப் பராமரித்து, கூட்டத்தைக் கண்டறிந்த பின் தாயுடன் அல்லது கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்," என்றார்.
மனித வாசனை குட்டி மீது பரவாத வகையில் தான் உணவு வழங்கப்படும். தாய், கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பல முறை தோல்வியில் முடிந்தால் தான், குட்டி யானையை மருத்துவக் குழு உதவியுடன் வளர்க்கும் முடிவை வனத்துறை எடுக்கும், என்கிறார் அவர்.
வனத்துறை அளித்த தகவல்களின்படி, ஒரு குட்டி யானை பிறக்கும் போது 90 - 100 கிலோவும், ஆறு மாதத்தில் 200 கிலோவிற்கு மேலும் இருக்கும். ஒரு நாளைக்கு அதன் உடல் எடையில் 5% அளவுக்கு (சுமார் 10 - 15 லிட்டர்) பால் கொடுக்கப்படும்.
யானையின் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் அளவுக்கு வனக்கால்நடை மருத்துவக் குழு மூலம் பால் தயாரிக்கப்பட்டு, பிரத்யேக புட்டி தயாரிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 10 - 15 முறை பால் வழங்கப்படும். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். விளையாடுவதற்கு தனி இடம், உறங்குவதற்கு மரக்கூண்டில் பாகன்கள் பராமரிப்பில் இருக்கும். ஆறு மாதம் பால் அதன்பின் மெல்ல மெல்ல புற்கள் வழங்கப்பட்டு குட்டி வளர்க்கப்படும், என்கிறார் மருத்துவர்
குட்டி யானையை வனத்துறையினர் எப்படி வளர்த்தாலும், இயற்கையாக அதன் தாய் வளர்ப்பது போன்று இருக்காது, குட்டி யானைக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது, என்கிறார் சூழலியலாளர் கோவை சதாசிவம்.
நம்மிடம் பேசிய அவர், "ஒரு தாய் யானை தனது தாய்ப்பால் மூலம் தன் குழந்தைக்கு தேவையான சத்துக்களை வழங்குவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாசத்தையும் சேர்த்து தான் வழங்குகிறது. பிறந்தது முதல் ஏழு மாதங்கள் வரையில் தாய்ப்பாலும், அதன்பின் தாய்ப்பாலுடன் சேர்த்து புற்களை தன் குட்டிக்கு வழங்கும்,” என்றார்.
யானையின் உணவில், 60% செரிமானமாகுமே தவிர பழங்கள், விதை மற்றும் புற்கள் போன்ற 40% உணவு அப்படியே தான் வெளியேறும் என்றும், ஆறு மாதமான குட்டி தனது கூட்டத்தில் உள்ள யானைகள் வெளியிடும் கழிவில் உள்ளவற்றை உட்கொள்ளும் என்றும் கூறுகிறார் அவர்.
ஏற்கனவே பெரிய யானையின் வயிற்றில் நொதிப்புக்குள்ளாகி செரிமானமான கழிவை குட்டி உண்பதால் அது விரைவில் குட்டிக்கு செரிமானமாகும் என்கிறார்.
மேலும், தன் கூட்டத்துடன் கிடைக்கும் விளையாட்டு என இயற்கையான எதுவும் கிடைக்காத சூழலும் குட்டிக்கு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குட்டி யானைகள் தனித்து விடப்படும் சம்பவங்கள் தொடர்பாக, வனத்துறை பிரத்யேகமான ஆய்வு ஒன்றை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார் சதாசிவம்.
16 - 22 யானைகள் சேர்ந்தது ஒரு கூட்டம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இதுபோன்று கூட்டமாக இருந்த யானைகளை தற்போது காண்பது அரிதாகிவிட்டதாகவும், வனத்தினுள் ஆய்வு செய்த போது பல இடங்களில், இரு குட்டிகளுடன் ஒரு யானை, 4 - 8 யானைகள் கொண்ட கூட்டம் என, கூட்டமே சுருங்கிவிட்டதை காண முடிந்ததாகவும் கூறுகிறார் சதாசிவம்.
வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்பு, உணவுப் பற்றாக்குறை, என பல காரணங்களால் யானைக்கூட்டங்கள் சுருங்கி விட்டதாகச் சூழலியல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதிலும் யானைகள் கூட்டத்தின் எண்ணிக்கை, ஏன் யானைகள் குட்டிகளை தனித்து விடுகின்றன, வலசைப் பாதைகள் எப்படி இருக்கின்றன, வலசைப் பாதைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா எனப் பல கோணங்களில் வனத்துறையினர் பிரத்யேக ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
முகாம்களில் குட்டி யானைகள் எப்படி வளர்க்கப்படுகின்றன என்பதை தமிழ்நாடு வனத்துறை செயலாளர்
நம்மிடம் பேசிய அவர், "தமிழ்நாடு வனத்துறை 70 ஆண்டுகளுக்கும் மேலாக குட்டி யானைகளை வளர்க்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளது. அறிவியல் ரீதியில் குட்டி யானைகளை வளர்ப்பது தொடர்பாகத் தனி செயல்முறைகளே நம்மிடம் உள்ளன. பாகன்களுக்குப் பயிற்சியும் உள்ளது. அறிவியல் ரீதியில் நாம் குட்டியை ஒரு குழந்தை போல வளர்க்கிறோம். நோய் எதிர்ப்பு திறனுக்கான சத்துக்கள், மருந்துகள் வழங்கப்படுகின்றன," என்றார்.
"கோவையில் மீட்கப்பட்ட குட்டியை 12 முறை தொடர்ந்து அதன் தாய், கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தோம். ஆனால், தாய் குட்டியை சேர்த்துக்கொள்ளவில்லை," என்கிறார் அவர்.
, "தாய் யானையின் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கலாம், வயது மூப்பு காரணமாக இருக்கலாம், அல்லது குட்டி மீது மனித வாசனை இருந்திருக்கலாம், இது போன்ற பல அறியப்படாத காரணங்களால் குட்டியை தாய் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் தான் குட்டியை முகாமில் வைத்து வளர்க்கிறோம்," என்றார்
யானைகளின் வலசைப் பாதைக்கும் குட்டிகள் தாய் யானையிடமிருந்து பிரிந்து செல்லும் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறுகிறார்
குட்டி யானைகள் தனித்து விடப்படும் சம்பவங்கள் குறித்தும், அதன் காரணங்களை அறிய பிரத்யேக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.