!
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சையின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு, ஒரு பில்லியன் டாலராக இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, ஒரு முறை தனது தந்தை ஸ்டான்போர்டில் தன்னை படிக்க வைக்க, தனது ஒரு வருட சம்பளத்தை கொடுத்து விமான டிக்கெட் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சையின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு, ஒரு பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாயில் சுமார், 8,342 கோடி ரூபாய். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு யூடியூபர் டியர் கிளாஸ் ஆஃப் 2020 என்ற நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது குறித்து பேசினார்.
அதாவது, “முதன்முறையாக நான் அமெரிக்கா வந்தபோது, எனது தந்தை, அவரது ஒரு வருட சம்பளத்தை செலவழித்தார். அதனால்தான் நான் ஸ்டான்போர்ட் வர முடிந்தது. நான் விமானத்தில் பயணித்தது அதுதான் முதன்முறை. அமெரிக்காவில் செலவு மிகவும் அதிகம். எனவே, நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றால், 2 டாலர்கள் செலவாகும். அதிர்ஷ்டத்தை தவிர, தொழில்நுட்பம் மீதான ஆர்வமும், திறந்த மனமும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது” என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் திறந்த மனதுடன், பொறுமையாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறிய சுந்தர் பிச்சை, நான் இன்று வரை நம்பிக்கையுடனே இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். “ஏனெனில், சிறு வயதில் தொழில்நுட்பம் எனக்கு பெரிதாக கிடைக்கவில்லை. 10 வயது வரை முதல் தொலைபேசி கிடைக்கவில்லை. நான் அமெரிக்காவிற்கு வரும் வரை எனக்கு கணினி பயன்படுத்த தெரியாது” என்றும் கூறினார்.
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு ஆகிவிட்டது. அவருக்கு தற்போது 52 வயதாகிறது. சிறு வயதில் இரு அறைகளை மட்டுமே கொண்ட வீட்டில் வசித்த சுந்தர் பிச்சைக்கு சொந்தமாக டிவி, கார் ஆகியவை எதுவும் இல்லையாம். ஆனாலும், மகன் மீது தனிக்கவனம் செலுத்தி வந்த சுந்தர் பிச்சையின் தந்தை, வேலையில் எதிர்கொண்ட சவால்களை அடிக்கடி பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இது சுந்தர் பிச்சைக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.