மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்ற சுனிதா வில்லியம்ஸ்..!
09 Jun,2024
விண்வெளியில் விண்மீன்களை தான் பார்க்கமுடியுமா மீன் குழம்பு கூட சாப்பிட முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3ஆவது முறையாக சென்றார்.
அப்போது பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் நுழைந்ததும் மகிழ்ச்சியில் சுனிதா வில்லிம்ஸ் நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
விண்வெளிக்கு செல்வதற்கு முன்பு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுனிதா, தனக்கு பிடித்த இந்திய உணவான சமோசாவை எடுத்து செல்ல உள்ளதாக கூறினார். மேலும், தன்னுடன் சிறிய விநாயகர் சிலையையும் எடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுனிதா தன்னுடன் இந்திய உணவுகளில் ஒன்றான மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமோசாவுக்கு பதிலாக இந்த உணவை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனால் தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை சுனிதா பெற முடியும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.