பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு.
09 Jun,2024
இந்தோனேஷியாவில் பெண்ணை பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இந்தோனேஷியா கலேம்பாங் கிராமத்தை சேர்ந்தவர் ஃபரிதா(45), இந்நிலையில், இவர் கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென காணாமல்போனார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனாலும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த கிராமத் தலைவர் சுர்தி ரோசியிடம் இதுகுறித்து கூறினர்.
இந்நிலையில், ஃபரிதாவின் உடமைகள் அங்கு உள்ள காட்டுப் பகுதியில் அவரது கணவர் கண்டுபிடித்தார். இது அவருக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் கிராம மக்கள் அப்பகுதியில் அவரை தீவிரமாக தேடினர். அப்போது அந்த பகுதியில் வயிறு வீங்கிய நிலையில் ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்ததை கண்டனர்.
இதனால் ஃபரிதாவை அந்த பாம்பு விழுங்கியிருக்க கூடுமோ? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பாம்பை அடித்து கொன்று மலைப்பாம்பின் வயிற்றை வெட்டினர். அப்போது அதன் வயிற்றில் ஃபரிதாவின் தலை உடனடியாகத் தெரிந்தது. மேலும் பாம்பு வயிற்றுக்குள் ஃபரிதா முழு ஆடையுடன் காணப்பட்டார். இதனை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிதாக நடக்கின்றன எனவும், சமீப ஆண்டுகளில் இந்தோனேசியாவில் மலைப்பாம்புகள் முழுவதுமாக விழுங்கப்பட்ட பின்னர் பலர் இறந்துள்ள சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். அதேபோல் கடந்த ஆண்டு தென்கிழக்கு சுலவேசியின் டினாங்கியா மாவட்டத்தில் 8 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியை கழுத்தை நெரித்து விழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதியினர் அந்த பாம்மை அடித்துக்கொன்றுள்ளனர்.
மேலும் 2018 ஆம் ஆண்டில் தென்கிழக்கு சுலவேசியின் முனா நகரில் 7 மீட்டர் மலைப்பாம்புக்குள் 54 வயதான பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அதற்கு முந்தைய ஆண்டு மேற்கு சுலவேசியில் ஒரு விவசாயியை 4 மீட்டர் மலைப்பாம்பு விழுங்கிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோல் அடுத்தடுத்து மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்கும் சம்பவங்கள் அங்கு வசிப்பவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.