உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பணத்தை வசூலித்து, சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயுடன் தலைமறைவான பெண் மல்லையா யார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் செய்த குற்றத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் தற்போது ஏராளமான கிரிப்டோகரன்சிகள் கிடைக்கின்றன. அதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிட்காயின் கிரோப்டோகரன்சிதான் முதலீட்டுச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதில், பெரும்பாலானோர் முதலீடு செய்து வந்த நிலையில், அதன் ஆதிக்கத்தை குறைப்பதற்காக, ஒன் காயின் (Onecoin) என்ற கிரிப்டோகரன்சியை பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ருஜா இக்னாடோவா என்ற பெண் அறிமுகம் செய்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்ததாகவும், மெக்கின்சியில் படித்ததாகவும் கூறிய ருஜா இக்னாடோவா கொடுத்த பிரமோஷன்களால், அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஒன் காயின் மீது முதலீடுகள் குவியத் தொடங்கின. அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்ட ஒன் காயின் கிரிப்டோகரன்சியில் ஒரு கட்டத்தில் 3 மில்லியன் முதலீட்டாளர் முதலீடு செய்துள்ளதாக, அந்த நிறுவனமே அறிவித்தது.
பல கோடி ரூபாய் முதலீடுகள் ஒன் காயின் கிரிப்டோகரன்சி மீது குவிந்து வந்த நிலையில், திடீரென முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதையடுத்து, அவர் மீது உலகம் முழுவதும் முதலீடு செய்தவர்கள் புகார் கொடுக்கத் தொடங்கினர். இதையடுத்து, அமெரிக்க புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் ருஜா இக்னாடோவாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள். அவரை கைது செய்ய முடிவு செய்த நேரத்தில், கடந்த 2017 அக்டோபரில் கிரீஸ் சென்றிருந்த ருஜா இக்னாடோவா திடீரென மாயமானார். அடுத்த சில நாட்களில் அவரது பெற்றோரும் மாயமாகினர்.
பின்னர், அவர் எவ்வளவு மோசடி செய்தார் என்று கணக்கிட்டு பார்க்கும்போதுதான், சுமார் 4 பில்லியன் டாலர் பணத்துடன் அவர் மாயமானது தெரியவந்தது. அவருடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டாலும், ருஜா இக்னாடோவா என்ன ஆனார்? எங்கே போனார்? என்பது இதுவரை தெரியவில்லை. எனவே, அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவித்த நிலையில், Europol அமைப்பும் most anted listல் ருஜா இக்னாடோவா பெயரை சேர்த்து, சுமார் 5,000 யூரோவை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
இதனிடையே, ருஜா இக்னாடோவா ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதால், இவரும் ஜெர்மனி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பல்கேரியா, ஜெர்மனி, ரஷ்யா, கிரீஸ், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்றும் FBI சந்தேகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் அவர் பயணிப்பதாகவும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தை மாற்றியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் FBI, விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் என்பவர், ருஜா இக்னாடோவா அறிமுகம் செய்த ஒன் காயின் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை இழக்க வைத்திருப்பதாகவும், ஏமாற்ற வேண்டும் என்ற திட்டத்திலேயே அந்த கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.