எம்முடைய ஆரோக்கியத்திற்கு உறக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நாம் பாரம்பரியமாக இரவு நேரத்தில் உறங்கி காலையில் எழுந்து பணியாற்றும் மரபினை கொண்டவர்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள்.
இதனால் எம்முடைய உடலில் உள்ள இயற்கையான சுழற்சி கடிகாரம் தாள லயம் தவறி இயங்குகிறது. இதனால் ஆரோக்கியம் என்பது கெட்டு, சுகவீனம் என்பது அதிகமாகிறது. மேலும் காரணம் கண்டறிய இயலாத பல புதிய நோய்களுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியதிருக்கிறது.
இதனால் வைத்திய நிபுணர்கள் உறக்கம் அவசியம் என்றும், அதிலும் ஆரோக்கியமான ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் ஆரோக்கியமான உறக்கத்தை பெறுவதற்கான எளிய வழிமுறைகளையும் அவர்கள் பட்டியலிடுகிறார்கள்.
நாளாந்தம் ஏழு மணி தியாலம் முதல் எட்டு மணி தியாலம் வரை உறக்கம் அவசியம். அந்த உறக்கமும் இரவு நேரத்தில் தான் உறுதியாக மேற்கொள்ள வேண்டும். இரவில் கண் விழித்து பணியாற்றி விட்டு பகலில் உறங்குவது ஆரோக்கியமற்றது. ஏனெனில் பகல் பொழுதில் சூரிய ஒளி மூலம் எமக்கு கிடைக்கும் விற்றமின் டி சத்து பகலில் உறங்குவதன் காரணமாக எமக்கு கிடைக்காமல் போகக் கூடும்.
மேலும் வயது வித்தியாசம் இன்றி தற்போது உறக்கமின்மை பாதிப்பிற்கு ஆண்களும், பெண்களும் ஆளாகிறார்கள். இதற்கு சரியான தருணத்தில் முறையான ஆலோசனையையும், சிகிச்சையையும் பெறாவிட்டால் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.
முதலில் நாளாந்தம் உறங்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உறங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் உறங்கும் அறை அடர் வண்ணம் கொண்டதாகவும், அமைதியை வெளிப்படுத்தும் விதமாகவும், காற்றோட்டமானதாகவும் அமைத்துக் கொள்வது அவசியம்.
மூளைக்கு தூண்டுதலை ஏற்படுத்தும் உற்சாக பானமான கோப்பி, தேநீர் ஆகியவற்றை இரவு நேரத்தில் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மது அருந்துவதையும், அதீதமான உணவுகளை பசியாறுவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும். மாலையான பிறகு இதுபோன்ற திட மற்றும் திரவ உணவு ஆகாரங்களை பசியாறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் காரணமாக மூளையில் உறக்கத்தின் போது சுரக்கும் சுரப்பிகளில் சமச் சீரற்ற தன்மை ஏற்படக்கூடும்.
நாளாந்தம் புற உலகத்தினராலும், அகத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் உளவியல் சிக்கலாலும் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை இரவு உறங்க செல்வதற்கு முன்னரோ அல்லது மாலை வேளையிலோ மேற்கொள்ள வேண்டும்.
உறங்குவதற்கு முன் உங்கள் சிந்தனைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அந்தத் தருணத்தில் எதைப்பற்றியும் தீவிரமாக சிந்திக்க கூடாது. அதையும் கடந்து சிந்தித்தால் உங்களது மூளைப்பகுதியில் உறக்கத்தின் போது சுரக்கும் சுரப்பிகளில் சமசீரற்ற தன்மை ஏற்பட்டு உறக்கமும் கெடும். ஆரோக்கியமும் கெடும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் தொலைக்காட்சி, கணினி, கைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்ளை பாவிப்பதை ஒரு மணி தியாலத்திற்கு முன்னரே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
மேலே சொன்ன எளிய வழிமுறைகளை உறுதியாக பின்பற்றத் தொடங்கினால் உங்களது உறக்கம் ஆரோக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் உங்களது உடல் சுழற்சி கடிகாரம் இயல்பாக இயங்கத் தொடங்கி, உங்களது ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஆயுள் முழுவதும் நீரிழிவு, ரத்த அழுத்தம், அதீத கொழுப்பு போன்ற அசௌகரியங்களால் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.