வானியல் அதிசயம்,வரப்போகும் 6 கோள்கள்.... வெறும் கண்களால் பார்க்க முடியுமா?
03 Jun,2024
சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவிருக்கும் ஓர் அரிய நிகழ்வு இன்று (03.06.2024) நிகழவுள்ளது.
பூமி உள்ளிட்ட 8 கோள்கள் அடங்கிய நமது சூரிய குடும்பம் என்பது, இன்று வரை நமக்கு முழுமையாக புரியாத புதிராகவே உள்ளது. அத்துடன், பல அரிய நிகழ்வுகளும் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி சனி, நெப்டியூன், வியாழன், யுரேனஸ், புதன் ஆகிய கோள்கள் வானில் ஒரே நேர்க்கோட்டில் வந்தன.
இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நம்மை மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவிருக்கும் மிகவும் அரிய நிகழ்வு ஒன்று, இன்று (ஜூன் 3) வானில் நிகழவுள்ளது. இது கோள்களின் அணிவகுப்பு என்றும் வர்ணிக்கப்படுகிறது.
அதாவது, நமது பூமியைத் தவிர, புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவிருக்கின்றன. இந்த நிகழ்வை நோக்கிய பயணம் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், மிகச்சரியாக 6 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
ஒரே நேர்க்கோட்டில் வரும் 6 கோள்களில், புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். மீதம் உள்ள 2 கோள்களை தொலைநோக்கி மூலம் தான் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளில் இருந்து இதை பார்க்க முடியும் என்றாலும், ஒளி மாசு குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து இதை தெளிவாக பார்க்க முடியும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இன்று தேய்பிறை என்பதால், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், வெறுங்கண்களால் கோள்களை பார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.