தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!
03 Jun,2024
காரைக்காலில் தங்கையிடம் அத்துமீற முயன்ற இளைஞனை தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிங்காரவேலுவின் வீட்டிற்கு எதிரெ உள்ள வீட்டில் 17 வயது இளைஞன் ஒருவனும் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளான்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த 17 வயது இளைஞன் சிங்காரவேலுவின் மகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் அதனால் 13 வயது சிறுவன் அந்த இளைஞனுடன் தகராறில் ஈடுப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமானான். சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. அதேசமயம் எதிர்வீடு பல மணி நேரமாக பூட்டி கிடந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் எட்டி பார்த்தபோது அங்கு காணாமல் போன 13 வயது சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான 17 வயது இளைஞனையும், அவனது தாயாரையும் தேடி வந்தனர்.
தீவிர தேடுதலுக்கு பின் மாயவரத்தில் பதுங்கியிருந்த அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.