எந்த நாடும் செல்லாத
சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக நிலவின் மறுபக்கம் உள்ளது.
Chang'e 6 எனும் சீன விண்கலம் நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பீஜிங் நேரப்படி 06:23 மணியளவில் தரையிறங்கியதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது.
மே 3 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், வரலாற்றில் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்திலிருந்து மதிப்புமிக்க பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
நிலவின் மறுபக்கத்தை அடைந்த பின்னர் விண்கலத்தை தொடர்புகொள்வது மிகவும் கடினம் என்பதால், அப்பகுதியில் தரையிறங்குவது ஆபத்து நிறைந்ததாகும். 2019-ம் ஆண்டில் Chang'e-4 விண்கலம் தரையிறங்கியதை தொடர்ந்து, இந்த சாதனையை புரிந்த ஒரே நாடாக சீனா திகழ்கிறது.
வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து ஏவப்பட்ட Chang'e 6 விண்கலம், அப்பகுதியில் தரையிறங்குவதற்காக நிலவை சுற்றிவந்தது.
பின்னர், பூமியிலிருந்து நிரந்தரமாக மறுபக்கத்தில் உள்ள நிலவின் பகுதியில் தரையிறங்க அந்த விண்கலத்தின் லேண்டர் சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்து சென்றது.
இதற்காக, தடைகளை கண்டறிந்து, அவற்றை தவிர்ப்பதற்காக தானாகவே இயங்கும் அமைப்பு ஒன்று பயன்படுத்தப்பட்டது. இது, மனிதக் கண்ணால் பார்க்கும் வகையிலான கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கும் இடத்தை தேர்ந்தெடுக்க பயன்பட்டதாக, சி.என்.எஸ்.ஏ-வை மேற்கோளிட்டு சீன அரசு ஊடகமான ஷின்ஹுவா (Xinhua) செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான தரையிறங்கும் இடத்திற்கு 100 மீட்டர் (328 அடி) மேலே விண்கலத்தின் லேண்டர் சுழன்று, செங்குத்தாக மெதுவாக தரையிறங்குவதற்கு முன்பாக முப்பரிமாண லேசர் ஸ்கேனரை பயன்படுத்தியது.
இந்த பணிக்கு Queqiao-2 எனும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் துணைபுரிந்ததாக, சி.என்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.
"பல பொறியியல் கண்டுபிடிப்புகள், அதிக அபாயங்கள் மற்றும் பெரும் சிரமங்களை" உள்ளடக்கிய இந்த செயல்பாட்டில், லேண்டர் மூன்று நாட்கள் வரை நிலவின் மேற்பரப்பில் பாறை மாதிரிகளை சேகரிக்கும் என, சி.என்.எஸ்.ஏ கூறியுள்ளது.
“யாராலும் இதுவரை பார்த்திராத பாறைகளை நாம் பார்க்கலாம் என்பதால் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளோம்,” என, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிலவின் புவியியல் குறித்த நிபுணர் பேராசிரியர் ஜான் பெர்னெட்-ஃபிஷர் விளக்குகிறார்.
அமெரிக்க அப்பல்லோ திட்டம் மற்றும் சீனாவின் முந்தைய இத்தகைய திட்டங்களால் கொண்டு வரப்பட்ட நிலவின் பாறைகளை இவர் ஆய்வு செய்துள்ளார்.
ஆனால், நிலவின் முற்றிலும் வேறுபட்ட பகுதியிலிருந்து வரும் பாறைகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பின் மூலம், கிரகங்கள் எப்படி தோன்றின என்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என அவர் கூறுகிறார்.
இதற்கு முன்னர் நிலவிலிருந்து சேகரிக்கப்பட்ட பெரும்பாலான பாறைகள், ஐஸ்லாந்து அல்லது ஹவாயில் காணப்படும் எரிமலை பாறைகளை ஒத்தவையே.
ஆனால், நிலவின் மறுபக்கத்திலிருந்து கண்டெடுக்கப்படும் பாறைகள் மாறுபட்ட வேதியியல் அம்சங்களை கொண்டிருக்கலாம்.
“கிரகங்கள் எப்படி தோன்றின, கடினமான மேற்புற படுகைகள் ஏன் தோன்றுகின்றன, சூரிய குடும்பத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பது போன்ற பெரிய கேள்விகளுக்கு பதில் கிடைக்க இது உதவலாம்” என்கிறார் பேராசிரியர் ஜான்.
இந்த விண்கலம் துளையிடும் கருவி மற்றும் எந்திரம் மூலம் சுமார் 2 கிலோ பொருட்களை சேகரிப்பதை இலக்காக வைத்துள்ளதாக, சி.என்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.
சூரிய குடும்பத்தில் இதுவரை அறியப்பட்டதில் தென் துருவ-எய்ட்கென் படுகை மிகப்பெரிய ஒன்றாகும்.
அங்கிருந்து, நிலவின் உள் மையப் பகுதியின் ஆழத்திலிருந்து பொருட்களை சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் பெர்னெட்-ஃபிஷர் கூறுகிறார்.
நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் அதன் தென் துருவம் அதிகம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அங்கு பனிக்கட்டி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அப்பகுதியை புரிந்துகொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வமாக உள்ளன.
நிலவில் தண்ணீர் கிடைத்தால், அது அங்கே அறிவியல் ஆராய்ச்சிக்காக தளம் ஒன்றை வெற்றிகரமாக நிறுவுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும்.
சீனாவின் திட்டம் வெற்றி பெற்றால், மதிப்புமிக்க மாதிரிகளுடன் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்.
அப்பொருட்களின் அசல் தன்மையை கூடுமானவரையில் பாதுகாக்கும் பொருட்டு, அவை பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வைக்கப்படும்.
இந்த பாறைகளை ஆய்வு செய்ய சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர், உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படும்.
நிலவிலிருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலத்தை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும்.
ஓசியானஸ் புரோசிலாரம் (Oceanus Procellarum) எனும் நிலவில் நாம் பார்க்கும் பகுதியில் 1.7 கிலோ எடையுள்ள பொருட்களை 2020ஆம் ஆண்டு Chang'e 5 விண்கலம் எடுத்து வந்தது.
நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறியவும் நிலவில் நிரந்தர தளத்தை நிறுவுவதற்கான ஆய்வில் ஈடுபடவும் வரும் பத்தாண்டுகளில் மேலும் மூன்று ஆளில்லா விண்கலங்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
2030-க்குள் சீன விண்வெளி வீரரை நிலவில் கால் பதிக்க வைப்பதே பீஜிங்கின் நோக்கமாகும்.
நாசா 2026 இல் தொடங்கும் ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது.