விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா?
விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி வேகம் பெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதையில் நிலைத்திருக்கும் வகையில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்போது 26வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விரைவில் அதன் இடத்தில் மற்றொரு மையம் அறிமுகப்படுத்தப்படும்.
விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களுக்கு மனிதனை அனுப்ப விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனுடன், ராக்கெட்டுகள் மூலம் பணக்காரர்களை விண்வெளியின் விளிம்புகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. விண்வெளியை அடைந்த பிறகு, அங்கு நாம் என்ன சாப்பிடுவது, எப்படி வாழ்வது?
"சரியான உணவுதான் விண்வெளி வீரர்களை அறிவாற்றலுடன் செயல்பட வைக்கிறது," என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீரர் நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவர் முனைவர் சோன்யா ப்ரூங்ஸ் கூறினார்.
"விரிவான விண்வெளிப் பயணங்கள் வெற்றிகரமாக இருக்க, விண்வெளி வீரர்களுக்குப் பல்வேறு ஊட்டச்சத்துகளுடன் கூடிய சரியான உணவை வழங்குவது முக்கியம். மிக முக்கியமான ஒரு விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது," என்று அவர் கூறினார்.
தற்போது, விண்வெளி வீரர்களுக்குச் சிறிய பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது.
இந்த உணவுகள் சிறப்பு உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி, தயாரிக்கப்பட்ட உணவுகள் உறைய வைக்கப்பட்டு, நீரிழப்பு செய்யப்படுகின்றன.
விண்வெளி வீரர்கள் இந்த உணவை தண்ணீரில் சூடாக்கி அல்லது குளிர்வித்து சாப்பிடுவார்கள். சில சமயங்களில் வீட்டிலிருந்து உணவையும் கொண்டு வருகிறார்கள். (இது கவனமாக தயாரிக்கப்பட்டு நீரிழப்பு செய்யப்படுகிறது)
ரொட்டியை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால், குறைந்த புவியீர்ப்புச் சூழலில் துகள்கள் எளிதில் காற்றில் பறக்கும். அதாவது, அவற்றை உண்பதற்கு பதிலாக நாம் அவற்றின் துகள்களை சுவாசிக்கும் அபாயம் உள்ளது. விண்வெளில் உப்பையும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். மனித உடல் விண்வெளியில் சோடியத்தை வித்தியாசமாகச் சேமிக்கிறது. இதனால் எலும்புகள் உடையக்கூடிய அபாயம் உள்ளது.
கழிவுநீர் மறுசுழற்சி முறையை பாதிக்கும் ஆல்கஹால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனுமதிக்கப்படுவதில்லை.
“ஆறு மாதங்கள் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் மொறுமொறுப்பான உணவுகளை மெல்லும் உணர்வை இழக்கிறார்கள். அதனால்தான் நீண்ட விண்வெளிப் பயணங்களில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கு மனநலமும் முக்கியமானது. அதனால் அவர்களுக்கு பலவிதமான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும்” என்கிறார் சோன்யா ப்ரூங்ஸ்.
நாசா 2021-ஆம் ஆண்டில் ‘டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்ச்’ என்பதை அறிமுகப்படுத்தியது. இது விண்வெளியில் குறைந்த வளங்களைக் கொண்டு உணவை உருவாக்குவதற்கும் குறைந்த கழிவுகளை உற்பத்தி செய்வதற்கும் புதிய வழிகளைக் கண்டறிவதற்கான திட்டம். அந்த உணவு பாதுகாப்பானதாக மட்டுமல்லாமல், சத்தானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஹெல்சின்கியை தளமாகக் கொண்ட 'சோலார் ஃபுட்ஸ்' நிறுவனம் இந்தச் சவாலில் உள்ள எட்டு இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் விண்வெளிக் கழிவுகளில் இருந்து புரதம் தயாரிக்கும் அற்புதமான யோசனையை கொண்டு வந்தது.
"அடிப்படையில், காற்றிலிருந்து உணவை உருவாக்குகிறோம்," என்கிறார் சோலார் ஃபுட்ஸ்-இன் மூத்த துணைத் தலைவர் அர்து லுக்கனென். ஃபின்லாந்தின் கிராமப்புறங்களில், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கலவையை உட்கொண்டு உயிர்வாழும் நுண்ணுயிரியை அவரது நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த நுண்ணுயிரியை மனிதர்கள் உண்ண முடியும்.
இந்த நுண்ணூயிரியிலிருந்து புரதம் தயாரிக்கப்படுகிறது. இதை மற்ற பொருட்களுடன் கலக்கலாம். இதைப் பயன்படுத்தி பாஸ்தா மற்றும் புரோட்டீன் பார்கள் போன்ற சத்தான உணவுகளைத் தயாரிக்கலாம். இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு மாற்றாகவும் இதைப் பயன்படுத்தலாம்.
"நாங்கள் விண்வெளி உணவைப் பற்றி யோசித்து வருகிறோம். ஏனெனில் விண்வெளியில் வசிப்பவர்களிடம் இரண்டு கழிவு வாயுக்கள் உள்ளன. அவை ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு,” என்கிறார் லுக்கனென். "அதனால்தான் நாங்கள் விண்வெளியில் உணவின் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை, உயிர்வாழ்வதற்கு அவசியமான அமைப்புகள் பற்றியும் சிந்திக்கிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் புரதத்தை பேஸ்ட் அல்லது பொடியாக்க முடியும். பாஸ்தா, புரோட்டீன் பார்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த சாக்லேட் தயாரிக்க இது மாவு, மற்ற வழக்கமான உணவுப் பொருட்களுடன் கலக்கப்படலாம்.
அதை (புரதத் தூள்) எண்ணெய்களுடன் கலந்து மாமிசத்தை (இறைச்சித் துண்டு அல்லது மீன்) உருவாக்கலாமா என்பது ஆராயப்படுகிறது. இதற்கு 3டி பிரிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
விண்வெளி வீரர்கள் புதிய உணவை விரும்பினால், வைட்டமின் மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வரலாம், மேலும் சூரிய ஒளியும் புவியீர்ப்பு விசையும் முற்றிலும் இல்லாமல் காய்கறிகளை வளர்ப்பதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெஜ்ஜி (Veggie) என்ற காய்கறி தோட்டம் உள்ளது. விண்வெளி வீரர்கள் சூரிய வெளிச்சம், புவியீர்ப்பு விசை இல்லாமல் தாவரங்கள் வளர்ப்பது எப்படி என ஆய்வு செய்கின்றனர்.
புளோரிடாவின் மெரிட் தீவில் உள்ள 'இன்டர்ஸ்டெல்லர் லேப்ஸ்' ஆய்வகம் சிறிய தாவரங்கள், காய்கறிகள், காளான்கள் மற்றும் பூச்சிகளை உற்பத்தி செய்ய ஒரு மாதிரி உயிரியக்க அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனம் ஆஸ்திரேலியாவின் ‘எனிக்மா ஆஃப் தி காஸ்மோஸ்’ உடன் இணைந்து நாசா டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்சில் இறுதிப் போட்டியாளராகவும் உள்ளது. எனிக்மா ஆஃப் தி காஸ்மோஸ் விண்வெளியில் வளரும் சிறிய தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது.
விண்வெளியில் எதிர்கால உணவாகத் தோன்றும் பொருட்களின் பட்டியலில் பூஞ்சைகளும் உள்ளன. டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்சில் இறுதிப் போட்டிக்கு வந்த ஆறு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பூஞ்சைகளை உணவாக உருவாக்க வேலை செய்கிறார்கள்.
இதில், ஸ்வீடனின் கோதன்பர்க் நகரைச் சேர்ந்த மைகோரேனா என்ற நிறுவனம், நுண்ணிய பாசி மற்றும் பூஞ்சை ஆகியவற்றை இணைத்து மைக்ரோ புரத உற்பத்தி முறையை உருவாக்கி வருகிறது.
"பூஞ்சைகள் மிகவும் மாறுபட்டவை," என்கிறார் மைகோரேனா நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் கார்லோஸ் ஓட்டேரோ. “இது பல்வேறு பரப்புகளில் வளர்க்கப்படலாம். இது வேகமாக வளரும். விண்வெளியில் உள்ள குழுவினருக்கு போதுமான அளவு உற்பத்தி செய்ய சிறிய வடிவமைப்புடன் ஒரு நேர்த்தியான அமைப்பை உருவாக்கலாம். மிகவும் சக்திவாய்ந்த, ஆரோக்கியமான, கதிரியக்க எதிர்ப்பு கொண்டவையாகவும் இவை இருக்கும். சேமித்து எடுத்துச் செல்வது மிகவும் எளிதானது,” என்றார்.
மற்றொரு கூடுதல் நன்மை என்னவென்றால், இந்த உணவில் உள்ள புரதங்களில் மனித உடல் செயல்படத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன.
விண்வெளி பந்தயத்தில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், தனியார் சமையல் கலைஞர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
கோபன்ஹேகனில் உள்ள அல்கெமிஸ்ட் உணவகத்தில் பணிபுரியும் சமையல் கலைஞர் ராஸ்மஸ் மன்ச், புளோரிடாவைத் தளமாகக் கொண்ட விண்வெளி தொடக்க நிறுவனத்துடன் இணைந்து தனது சிறப்பான உணவை விண்வெளிக்கு எடுத்துச் சென்று அங்கு பரிமாறியுள்ளார்.
நெப்டியூன் என்ற விண்கலத்தில் ஆறு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விண்வெளிக்கு செல்ல உள்ளார். இதற்காக ஸ்பேஸ் விஐபி எனும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்றார்.
ஆறு மணி நேர பயணத்திற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் 4,95,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 கோடியே 10 லட்சம்) வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலங்களில் உணவு வழங்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர விரும்பும் பல சமையல் கலைஞர்களில் இவரும் ஒருவர்.
ஆனால், உலகம் முழுவதும் இந்த விலையுயர்ந்த பயணத்திற்குச் செல்லக்கூடியவர்கள் வெகு சிலரே. விண்வெளி உணவைத் தயாரிப்பதன் முக்கியக் குறிக்கோள் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, பூமியில் அதை உண்ணக்கூடியதாக மாற்றுவதும் ஆகும்.
நாசாவின் டீப் ஸ்பேஸ் சேலஞ்ச், வளம் இல்லாத பகுதிகள் மற்றும் தீவிர வானிலை நிலைகளில் பூமியில் கூட அதிநவீன உணவை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"காலநிலை மாற்றம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு உற்பத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்கிறார் லுக்கனென். “பூமியில் நாம் பயன்படுத்திய வளங்களிலிருந்து வரும் கழிவுகளில் இருந்து நல்ல விஷயங்களை உருவாக்குகிறோம். இதுதான் பொருளாதார சுழற்சி கோட்பாடு. பூமி மிக உயரமான விண்கலம். நாங்கள் அதில் இருக்கிறோம். இங்கு வளங்கள் குறைவாகவே உள்ளன,'' என்றார்.
"விண்வெளியிலும் பூமியிலும் உள்ள வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துவதே எங்கள் நோக்கம்," என்கிறார் மைகோரெனாவின் ஆராய்ச்சித் துறையின் தலைவர் கிறிஸ்டினா கார்ல்சன்.
“எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வுகள் இருக்காது, கழிவுகள் இருக்காது. அத்தகைய திட்டத்தை உருவாக்க விண்வெளி சரியான இடம். அது அங்கே சாத்தியம் என்றால், பூமியிலும் சாத்தியம்,” என்றார்.
இதன் ஒரு பகுதியாக, இந்தத் திட்டங்கள் விண்வெளி போன்ற சூழலில் அவை எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்க சோதிக்கப்படும். இந்த நவீன உணவுகள் விண்வெளி வீரர்களின் உணவின் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? இனி வரும் நாட்களில் பூமியில் நாம் உண்ணும் உணவு இதுதானா என்று அனைவரும் இப்போட்டிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.