தவிர்க்க முடியாத மற்றொரு தொற்றுநோய் - எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!
28 May,2024
தவிர்க்க முடியாத அளவுக்கு மற்றொரு தொற்றுநோய் வரவிருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2019ல் தொடங்கி, 2020ல் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா எனப்படும் கோவிட் 19 தொற்றால் பல லட்சம் பேர் மரணம் அடைந்தனர். மேலும், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் ஒருமுறை தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று பிரிட்டன் அரசின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார்.
பிரிட்டனில் விரைவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மற்றொரு தொற்று நோய் தவிர்க்க முடியாது என்பதால், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை குறைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். போவிஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மற்றும் தொற்றுநோய் பாதிப்புக்கு நாடு தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
தொற்றுநோயை விரைவாக கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஒவ்வொரு அரசும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், விரைவாக நோயறிதல், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றை மேற்கொள்ளை ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு நாடு ராணுவத்தை வைத்திருக்கிறது என்றால், இந்த ஆண்டு ஒரு போர் இருக்கும் என்பதற்காக அல்ல. ஆனால், ஒரு நாட்டிற்கு ராணுவம் என்பது ஒரு முக்கியமான பகுதி என்பதைப் போல, தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.