தனது மனைவியுடன் தனிமையில் இருந்த நண்பனை சரமாரியாக அடித்துக் கொன்றிருக்கிறார் கட்டட மேஸ்திரி ஒருவர். திடீரென வீட்டுக்கு வந்து மனைவிக்கு அதிர்ச்சிக் கொடுத்த கணவரின் இந்த கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு அருகேயுள்ள குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் – வயது 32. இவர், ஓசூர் பகுதியில் தங்கி கட்டட வேலைச் செய்து வந்தார்.
காளிதாஸுக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் – வயது 35. இவர் வேன் ஓட்டுநர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஸிதாஸும், சரவணனும் நண்பர்களாகினர்.
காளிதாஸ் ஓசூரில் இருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் சரவணனுடன் சேர்ந்துதான் வெளியில் செல்வார்.
ஒன்றாக மது அருந்துவது தொடங்கி, இருவரிடையேயும் ஆழமான நட்பு இருந்தது. இந்த பழக்கத்தால் காளிதாஸின் வீட்டுக்கும் அடிக்கடி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் சரவணன். நண்பன் காஸிதாஸ் ஊரில் இல்லாதபோதும், அவரது வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் பேசி பழகி வந்திருக்கிறார் சரவணன்.
இதனால், இருவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டது. அடிக்கடி இரவு நேரத்திலும் நண்பன் வீட்டுக்குச் சென்று தனிமையில் இருந்திருக்கிறார் சரவணன்.
ஒருக்கட்டத்தில் `துரோகம்’ தெரியவர சரவணனை `வீட்டுக்குப் பக்கமே வரக் கூடாது’ என்று எச்சரிக்கை செய்து, ஒரே அடியாக ஓரங்கட்டினார் காளிதாஸ். அப்போதும் திருந்தாத சரவணன்,
காளிதாஸின் மனைவியைச் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறார். மனைவியையும் கண்டித்துவிட்டு குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் ஓசூருக்கு சென்று வேலைப் பார்க்க ஆரம்பித்தார் காளிதாஸ்.
இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மீண்டும் காஸிதாஸின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் தனிமையில் இருந்து வந்திருக்கிறார் சரவணன்.
இவர்களின் சந்திப்பை அக்கம், பக்கத்தினர் மூலமாக மீண்டும் தெரிந்துகொண்ட காளிதாஸ், நேற்று முன்தினம் இரவு முன்கூட்டியே தகவல் ஏதுவும் தெரியப்படுத்தாமல் வீட்டுக்குத் திடீரென வந்திருக்கிறார்.
வீட்டு கதவைத் தட்டியபோது, உள்ளே இருந்த மனைவிக்கு வியர்த்துக் கொட்டியது. காரணம், சரவணனும் வீட்டுக்குள் இருந்தார்.
கணவனிடம் இருந்து தப்பிப்பதற்காக சரவணனை பீரோவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார்.
அவரின் பேச்சைக் கேட்டு பீரோவுக்குப் பின்புறம் சென்று மறைந்துகொண்டார் சரவணன். மிகத் தாமதமாக கதவை திறந்த மனைவியின் பேச்சிலும், நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டதால் வீடு முழுவதும் நோட்டமிட்டார் காளிதாஸ்.
அப்போது, பீரோவுக்குப் பின்புறம் ஒளிந்துகொண்டிருந்த சரவணனை கண்டதும் ஆத்திரமடைந்து, அவரைக் கடுமையாகத் தாக்கினார் காளிதாஸ். கையில் கிடைத்த ஜல்லி கரன்டி போன்ற பொருள்களைக் கொண்டும் கொடூரமாக அடித்தார்.
பீர் பாட்டிலையும் தலையில் அடித்து உடைத்தார். பலத்த காயமடைந்த சரவணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, காளிதாஸை தடுத்து சரவணனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சரவணன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த குரிசிலாப்பட்டு போலீஸார், காளிதாஸை கைதுசெய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.