மூளையில் வளரும் கட்டி சத்திர சிகிச்சை!
25 May,2024
எம்மில் சிலருக்கு வயது வித்தியாசமின்றி திடீரென்று வலிப்பு தாக்கம் ஏற்பட்டாலோ அல்லது திடீரென்று பார்வையில் பாரிய குறைபாடு ஏற்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். ஏனெனில் அவை மெனிங்கியோமா எனப்படும் மூலையில் வளரும் கட்டி பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
மெனிங்கியோமா என்பது மூளை மற்றும் அதன் பகுதிகளில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் விவரிக்க இயலாத காரணங்களால் உருவாகும் ஒரு வகையினதான கட்டியாகும். இவை மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. இதனால் பலருக்கு அறிகுறிகளை விரைவில் உண்டாக்காது. ஆனால் சிலருக்கு இந்த கட்டி வளரும் இடங்களில் அருகில் உள்ள திசு, நரம்பு, நாளங்கள் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இத்தகைய பாதிப்பு ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்குகிறது என்றும், பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளை இத்தகைய பாதிப்பு அதிகம் தாக்குகிறது என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
பார்வையில் தடுமாற்றம் அல்லது பாரிய பின்னடைவு, காலையில் எழுந்ததும் கடும் தலைவலி, காதுகளில் வித்தியாசமான ஒலி, நினைவாற்றலில் குறைபாடு, நுகரும் தன்மையில் மாற்றம், வலிப்பு தாக்கம், கை அல்லது கால்களில் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என பொருள் கொள்ளலாம்.
இவர்களுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி மூளையில் உள்ள கட்டியின் அளவு, நோயாளியின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், அவருடைய வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொள்வர் .
அப்போது நோயாளிகளுக்கு SRS எனும் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜேரி ( Stereotactic Radio Surgery), SRT எனும் ஃப்ராக்ஷனேடட் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ தெரபி ( Fractionated Stereotactic Radio Therapy), IMRT எனும் இன்டன்சிட்டி மாடுலேட்டட் ரேடியேஷன் தெரபி ( Intensity- modulated radiation therapy) ஆகிய நவீன சத்திர சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும். மேலும் சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.