பலஸ்தீன மக்களுக்கு சமமாக ஈழத் தமிழர்களையும் சர்வதேசம் அங்கிகரிக்க வேண்டும், சபா குகதாஸ்
24 May,2024
பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல நாடுகள் முன்மொழிந்து வருகின்றன அதனை ஈழத் தமிழர்கள் ஆகிய நாமும் வரவேற்கின்றோம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(24) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இஸ்ரேலின் நடவடிக்கைள் காரணமாக எப்படி பலஸ்தீன காஸா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரோ அதே போல ஈழத் தமிழர்களும் சிறிலங்காவின் சிங்கள ஆட்சியாளர்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பேரழிவை தமிழினப் படுகொலை என நிறுவக் கூடிய போதுமான ஆதாரங்கள் ஐக்கிய நாடுகள் சபை வசம் இருக்கின்ற போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வு கிடைப்பதற்கான வழி திறக்கும்.
சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க தயார் இல்லை என்பது இன்று வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இருப்பின் மீது மேற்கொள்ளப்படும் அபகரிப்பு மிகப் பெரிய ஆதாரமாகும்.
எனவே சர்வதேசம் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கிகரிக்க முயற்சிக்கும் சம நேரம் ஈழத் தமிழர்களையும் ஒரு தனியான தேசமாக அங்கிகரிக்க முன் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.