வயிற்றில் நீர் கோர்ப்பு சத்திர சிகிச்சை
23 May,2024
சிலருக்கு அவர்களுடைய வயிற்றுப் பகுதி இயல்பான அளவைவிட அதிக அளவில் உப்பி இருக்கும். இவர்களுக்கு அவர்களுடைய வயிற்றின் புறப் பகுதிகளுக்கும், வயிற்றின் உள் உறுப்புகளுக்கும் இடையே திரவங்கள் இயல்பான அளவைவிட கூடுதலாக சேகரமடைவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கவியல் சிகிச்சை முறையில் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடற்பருமன், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் சுருக்க பாதிப்பு, ஹெபடைடிஸ் பி, சி, டி ஆகிய வைரஸ் தொற்றால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு ஆகிய காரணங்களால் சிலருக்கு வயிற்றுப் பகுதியில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பு ஏற்படுகிறது. தெற்காசிய நாடுகளில் இது தொடர்பான விழிப்புணர்வு குறைவு என்பதால் நோயாளிகள் இதற்கு முறையான சிகிச்சையை பெறுவதில்லை. இந்நிலையில் நவீன மருத்துவ சிகிச்சையாக அறிமுகமாகி இருக்கும் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனும் சிகிச்சை முறையில் இதற்கு நிவாரண சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.
வயிறு வீக்கம் அல்லது விரிவடைவது, மார்பகப் பகுதியில் திரவம் குவிதல், உடல் எடை அதிகரிப்பு, குமட்டல், அஜீரணம், வாந்தி, கால்களில் வீக்கம், மூல நோய், தொப்புள் குடல் இறக்கம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் நீர் கோர்ப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணரலாம்.
கல்லீரலில் உள்ள முக்கிய ரத்த நாளங்களில் இயல்பாக நடைபெற வேண்டிய ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டலோ அல்லது அடைப்பு ஏற்பட்டலோ அங்கு அழுத்தம் அதிகரிக்கிறது. அதே தருணத்தில் சிறுநீரகங்கள் அதிகப்படியான உப்பை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதற்கான திறன் குறைவதால் அங்கு திரவங்கள் இயல்பான அளவைவிட கூடுதலாக தேக்கமடைகிறது. இது வயிற்றுப் பகுதியில் நீர் கோர்ப்பாக உருவாகிறது. மேலும் இதன் காரணமாக ஆல்புமின் எனப்படும் ஒரு வகையான ரத்தப் புரதத்தின் அளவும் குறைகிறது. இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரலை சேதப்படுத்தும் வைரஸ் தொற்றுகளாலும் நீர் கோர்ப்பு ஏற்படுகிறது.
இதன் போது மருத்துவர்கள் வயிற்றில் உள்ள திரவ மாதிரியை பரிசோதனை செய்வார்கள். அதனைத் தொடர்ந்து எம்ஆர்ஐ, சிடி, அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டுத் திறனை பரிசோதிப்பர். குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளையும் மேற்கொண்டு பாதிப்பின் வீரியத்தையும், தன்மையையும் துல்லியமாக அவதானிப்பர்.
இதனைத் தொடர்ந்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் நிவாரண சிகிச்சைகளை வழங்குவர். மேலும் TIPS ( Transjugular Intrahepatic Portosystemic Shunt) எனும் சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிப்பர். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக கடைப்பிடித்தால் இத்தகை பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.