பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல்
23 May,2024
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல்ராணுவம் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
இந்த போருக்கு உலக நாடுகள்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.வும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது.
இதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்த நாட்டின்பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கோரி வருகிறார். இஸ்ரேல் கடுமையாக மறுத்த இனப்படுகொலைகுற்றச்சாட்டுகளை விசாரிப்பதுகுறித்து சர்வதேச நீதிமன்றமும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பாலஸ்தீனர்கள் வரவேற்பு: இந்த சூழ்நிலையில், நார்வே,அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக நேற்று அறிவித்தன. இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்று கருதப்படுவதுடன் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் அடையாள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை, காசா பகுதிகளுக்கு பல ஆண்டுகளாக அரசுரிமை கோரும்வேட்கையை உறுதிப்படுத்தும் விதமாக வந்துள்ள இந்த அறிவிப்புகளை வரவேற்பதாக பாலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான நாடுகள் பல ஆண்டுகளாக பாலஸ்தீன அரசை அங்கீகரித்து வருகின்றன