இரானின் இஸ்லாமியக் குடியரசின் உச்ச அதிகாரத்தை அடைவதற்கு அருகில் இருந்த இப்ராஹிம் ரைசி அதை அடைவார் என்று பரவலாகக் கருதப்பட்டது.
ஆனால், நிலை இப்போது முற்றிலும் வேறாகிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணம் அடைந்ததும், ஏற்கனவே நீண்டகாலமாக கவலைக்கிடமான நிலையில் இருக்கும் 85 வயதான இரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு அடுத்து யார் தலைவராக வருவார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இரான் அதிபரின் மரணம், இரான் கொள்கைகளின் திசைபோக்கையோ அல்லது இஸ்லாமியக் குடியரசின் மீதோ குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், பழமைவாதக் கொள்கைகளை கொண்டுள்ள அதன் அதிகார மட்டம், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத அரசின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்புக்கு இது சோதனையான காலம்.
சாதம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் திட்ட இயக்குனரான சனம் வகீல் கூறுகையில், "இந்த அமைப்பு, ரைசியின் மரணத்திற்குப் பொதுவெளியில் வைத்து பெரியளவில் சடங்குகள் செய்வதோடு, அரசின் செயல்பாடு மற்றும் நிலைத்தன்மையை நிரூபிப்பதற்காக அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்றும். அதே நேரத்தில் தனது பழமைவாத ஒற்றுமையையும், காமேனிக்கான விசுவாசத்தையும் பாதுகாக்கும், மற்றும் நிர்வகிக்கக் கூடிய ஒரு புதிய நபரையும் அது தேர்வு செய்யும்," என்கிறார்.
1980-களில் அரசியல் கைதிகளைக் கொலை செய்ததில் பெரிய பங்கைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வழக்குரைஞரான ரைசியின் வெளியேற்றத்தை அவரது எதிர்ப்பாளர்கள் பாராட்டுவார்கள். அவருடைய ஆட்சியின் முடிவு இந்த ஆட்சியின் முடிவைக் குறிக்கும் என்று அவர்கள் நம்புவார்கள். (அந்தக் கொலைகளுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று ரைசி கூறிவந்தார்.)
இரானின் ஆளும் பழமைவாதிகளுக்கு, ரைசியின் அரசு இறுதி ஊர்வலம் உணர்ச்சிப்பூர்வமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். இது அவர்களின் ஆட்சி அதிகாரத்தின் தொடர்ச்சியை உணர்த்துவதற்கான சமிக்ஞைகளை அனுப்புவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்.
இஸ்லாமிய இறையியலாளர்கள் குழுவான நிபுணர்கள் கூட்டமைப்பில் மேலும் ஒரு நிரப்பப்பட வேண்டிய முக்கியமான பதவி உள்ளது. அது நடுத்தர-தர வரிசையில் உள்ள மதகுரு வகிக்கும் பதவி. இந்த அமைப்புதான் தீவிரமான மற்றும் முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் போது உச்சத் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம் பெற்றது.
சனம் வகீல் கூறுகையில், "கமேனியைப் போலவே ரைசியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஒப்பீட்டளவில் இளமையான, மிகவும் விசுவாசமான, உறுதியான ஒரு சித்தாந்தவாதியாக இருந்ததால் சாத்தியமுள்ள அடுத்த வாரிசு என்று கருதப்பட்டார்," என கூறுகிறார். இந்த ரகசியமான தேர்வில், உச்ச தலைவரின் மகனான மொஜ்தபா கமேனி உட்பட பலரின் பெயர்கள் போட்டியில் உள்ளன என்கிறார் அவர்.
ரைசியின் மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே, அயதுல்லா அலி கமேனி தனது எக்ஸ் பக்கத்தில், "இரானிய மக்கள் கவலைப்பட வேண்டாம், நாட்டின் செயல்பாடுகளில் எந்த இடையூறும் ஏற்படாது," என்று தெரிவித்தார்.
தற்போது மிக உடனடியான அரசியல் சவால் என்னவெனில், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்துவது தான்.
தற்போதைக்கு அதிகாரங்கள் அனைத்தும் துணை அதிபர் முகமது மொக்பருக்கு மாற்றப்பட்டுள்ளன. அடுத்த 50 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இரான், எப்போதும், தனது தேர்தல்களில் அதிகமான மக்கள் வாக்களிப்பதாகப் பெருமையாக கூறி வருகிறது. ஆனால் கடந்த மார்ச் மாத தேர்தலில் குறைவான வாக்குபதிவே பதிவானது. இந்நிலையில், மீண்டும் ஒரு தேர்தலுக்கு அறைகூவல் விடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த தேர்தல் மூலமாகவே ரைசி அதிபர் பதவியைக் கையற்றினார். ஆனால், இந்த வெற்றி தேர்தல்களில் பங்கேற்ற மிதவாத மற்றும் சீர்திருத்தச் சிந்தனை கொண்ட வேட்பாளர்களை மேற்பார்வை அமைப்புகள் மூலம் போட்டியிலிருந்து விலக்கியதன் மூலமே சாத்தியமாயிற்று.
லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி இணையதளமான 'அம்வாஜ் மீடியா'வின் ஆசிரியர் முகமது அலி ஷபானி கூறுகையில், "முன்கூட்டிய அதிபர் தேர்தல், கமேனி மற்றும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுக்கு, நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு அரசியல் செயல்முறைக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தருவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடும்," என்று கூறுகிறார்.
"ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அரசு தயாராக இருப்பது போல் எந்த அறிகுறிகளையும் இதுவரை நாங்கள் பார்க்கவில்லை," என்கிறார்.
"இந்தப் பழமைவாதக் குழுவிற்குள்ளேயே பல்வேறு முகாம்கள் உள்ளன. இதில் மிகவும் கடினமான நபர்கள் மற்றும் மிகவும் நடைமுறைவாதிகளாகக் கருதப்படுபவர்கள் என்ற இரு தரப்பினர் உள்ளனர்," என்று பெர்லினை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான SWP-வைச் சேர்ந்த ஹமித்ரேசா அஸிஸி குறிப்பிடுகிறார்.
இது புதிய பாராளுமன்றத்திலும், உள்ளூர் மட்டங்களிலும் பதவிக்கான தற்போதைய போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.
ஆனால், ரைசியின் பதவியை எடுத்துக்கொள்ளப் போகும் நபர் யாராக இருந்தாலும், அவர் கண்டிப்பாக சவால்களையும் தடைகளையும் சந்திப்பார் என்று அஸிஸி நம்புகிறார்.
இரானின் இஸ்லாமியக் குடியரசில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உச்சத் தலைவரிடமே உள்ளது.
வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) ஆகியவற்றில் அவரது முடிவே இறுதியானது.
சில மாதங்களுக்கு முன்பு இரான், அதன் பரம எதிரியான இஸ்ரேலுடன், இஸ்ரேல்-காசா போரின் மத்தியில் எதிர்பாராத பதற்றத்தை எதிர்கொண்டபோது, அது குறித்தான முடிவுகளை இரான் அதிபர் எடுக்கவில்லை.
இந்தச் சம்பவம் தெஹ்ரான் உள்ளிட்ட பல தலைநகரங்களில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் ஒன்றாக அமைந்தது.
ஆனால், இரான் அதிபரோ சர்வதேசத் தடைகள், தவறான நிதி மேலாண்மை மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளால் உருவாகியுள்ள நிதி நெருக்கடி உள்ளிட்ட அன்றாட அலுவல் சார்ந்த பணிகளில் தீவிரமாக இருந்தார்.
அப்போது பணவீக்கம் 40%-க்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. ரியால் நாணயத்தின் மதிப்பும் சரிந்தது.
இதுபோதாது என்று, இரானின் கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்ட 22 வயதான மாஷா அமினி செப்டம்பர் 2022-இல் காவல்துறைக் கட்டுப்பாட்டில் மரணம் அடைந்ததையொட்டி நடந்த போராட்டம் இஸ்லாமிய குடியரசையே அதிரச் செய்தது.
பல வாரச் போராட்டங்களுக்கு பிறகு, இரானின் ஹிஜாப் தொடர்பான சட்டத்தை கடுமையாக்கி உத்தரவிட்டார் அதிபர் ரைசி.
ஆனால், இளம்தலைமுறையைச் சேர்ந்த பெண்களால் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டம், தங்கள் வாழ்வில் விதிக்கப்பட்டுள்ள மோசமான கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதற்கு மூலக்காரணமான உச்சத்தலைவர் மற்றும் அந்த அதிகார அமைப்புக்கு எதிரானதாகவும் இருந்தது.
இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் விற்கப்படும் மசாலாக்களில் எத்திலீன் ஆக்ஸைடு இல்லை: பிபிசியிடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல்
"இரானிய வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவில் வாக்குகள் பதிவான தேர்தலில் வென்று, அதிபரான ரைசிக்கு அவரது முன்னோடியான ருஹானிக்கு இருந்த அளவுக்கு மக்கள் ஆதரவு இல்லை," என்று கூறுகிறார் ஷபானி.
சீர்திருத்தவாத தலைவர் ஹசன் ரூஹானியின் ஆரம்பகட்ட புகழ் 2015-இல் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் ஓரளவு அதிகரித்தது. இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக இதிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றியபோது முறிந்தது.
தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் மற்றும் ரைசியின் குழுவிற்கு இடையே நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது.
"இஸ்லாமியக் குடியரசின் எதிர்ப்பாளர்களால் ருஹானி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை ரைசியால் தவிர்க்க முடிந்தது. அதே சமயம் அவர் சக்தி குறைந்தவராகவும், திறமையற்றவராகவும் கருதப்பட்டார்,” என்று கூறுகிறார் ஷபானி.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் உயிரிழந்தார். இரானின் நிலைப்பாடுகளை உலகிற்கு எடுத்துரைப்பதிலும், அந்நாட்டின் மீதான சர்வதேசத் தடைகளின் கடுமையான தாக்கத்தைத் தணிப்பதற்கான வழிகளைத் தேடுவதிலும் முக்கியமான பங்கு வகித்தவர் இவர்.
இஸ்ரேல்-காசா போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கவும், அமைதியை ஏற்படுத்தவும், இரானின் நட்பு நாடுகளுடனும், அரபு மற்றும் மேற்கத்திய வெளியுறவு அமைச்சர்களுடனும் ஆர்வமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தவர் அவர்.
“நாடுகளுக்கு இடையே தகவல்களைச் சேர்ப்பதற்கான மதிப்புமிக்க தூதுவராக அவர் பணியாற்றினாலும், உண்மையான முடிவெடுக்கும் அதிகாரம் வெளியுறவு அமைச்சகத்திடம் இல்லை என்பதால் அதன் செயல்திறனில் அவரது பங்கு ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டதாக,” மூத்த மேற்கத்திய ராஜதந்திர நிபுணர் கூறுகிறார்.
போர்ஸ் மற்றும் பஜார் சிந்தனைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்ஃபண்டியர் பேட்மாங்கெலிட்ஜ் கூறுகையில், "அதிபரின் திடீர் மரணம் பொதுவாகவே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தாலும் தற்போது அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒரு சாத்தியமான உச்ச தலைவராகக் கருதப்பட்ட போதிலும், அவருக்கு சரியான அரசியல் ஆதரவு மற்றும் தெளிவான அரசியல் பார்வை இல்லை," என்கிறார்.
“ஆனால் அவரைத் தேர்வு செய்தவர்கள் அவர் இல்லாமலேயே தற்போதைய நிலையை சரி செய்துக் கொண்டு முன்னேறி செல்வார்கள்,” என்றார்.