எய்ட்ஸ் பாதித்த பெண்ணால் வைரஸ் பரவல் அபாயம். பரிசோதனைக்கு பகிரங்க அழைப்பு
20 May,2024
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் எய்ட்ஸ் பாதித்த பாலியல் தொழிலாளி ஒருவரால், நேரடியாக 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர், ஹெச்ஐவி அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கவும், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் ஓஹியோ மாகாண அதிகாரிகள் தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளனர்.
ஓஹியோவில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளி தனக்கு ஹெச்ஐவி-பாசிட்டிவ் என்று தெரிந்திருந்தும், 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததை மாகாண காவல்துறை கண்டறிந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் அங்கே பகிரங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளியான லிண்டா லெக்செஸ் என்பவர், 2022 ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். அதே நேரத்தில் அவர் தனக்கான ஹெச்ஐவி பாசிட்டிவ் குறித்தும் அறிந்துகொண்டார். ஆனபோதும் வருமான நோக்கில் தனது பாலியல் சேவையை தொடர்ந்திருக்கிறார். தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் ஹெச்ஐவி பரப்பி இருக்கிறார். ஓஹியோ மாகாண சட்டப்படி இது மூன்றாம் நிலை குற்றம் என்ற வகையில் சேரும்.
தென்கிழக்கு ஓஹியோவின் மரியெட்டாவில் வசித்து வந்த லிண்டாவின் வாடிக்கையாளர்களை அடையாளம் காண ஓஹியோ நிர்வாகமும், காவல்துறையும் தவித்து வருகிறது. மேற்படி 200 பேர் வாயிலாக கடந்த 2 ஆண்டுகளில் பல்லாயிரம் பேருக்கு, வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
"இந்த வழக்கு புளோரிடாவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை பரவலான மக்களை சந்தேகிக்கிறது. இதனையடுத்து இப்பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்று வாஷிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. முதல் சுற்றில் லிண்டா லெக்செஸ்ஸின் நன்கறிந்த வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும் அந்தந்த நபர்களுடன் சங்கிலித் தொடராக பாலியல் தொடர்பு கொண்டிருந்தவர்களையும் போலீஸார் அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.