எம்மில் சிலர் கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு கில்லன்- பாரே சிண்ட்ரோம் எனப்படும் அதி விரைவு நரம்பு தளர்ச்சிப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடும். அப்போது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம்.. எம்முடைய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. இது அரிய வகை பாதிப்பு என்றாலும், கை, கால் போன்றவற்றில் ஏற்பட்டு, பாரிய சுகவீனத்தை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்க கூடும். எனவே இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் விவரிக்க இயலாத காரணங்களால் நரம்புகளை தாக்கி தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வெகுவிரைவில் உடல் முழுவதும் பரவி உடலை முடக்கி விடும். இதன் காரணமாக கை மற்றும் கால்களில் பலவீனமும், கூச்ச உணர்வும் ஏற்பட்டு அசௌகரியத்தையும், சுக வீனத்தையும் ஏற்படுத்துகிறது. இது அவசர நிலையாக கருதப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.
சுவாச தொற்று அல்லது இரைப்பை தொற்று, குடல் தொற்று, ஜிகா வைரஸ் தொற்று, கொரோனா வைரஸ் தொற்று ஆகிய தொற்று பாதிப்பால் இத்தகைய நோய்க்குறி ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.
கை விரல்கள், கால் விரல்கள், கணுக்கால், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, கால்களில் ஏற்படும் பலவீனம் உடல் முழுவதும் பரவுவது, நடையில் தடுமாற்றம், படிக்கட்டுகளில் ஏற இயலாத நிலை, பேச்சு- மெல்லுதல் -விழுங்குதல் போன்றவற்றில் சிரமம், பார்வையில் தடுமாற்றம், தசைப்பிடிப்பு குறிப்பாக இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது தசை பிடிப்பு, குடல் செயல்பாட்டில் சமசீரற்ற தன்மை, இதயத் துடிப்பில் சமசீரற்ற தன்மை, குருதி அழுத்த மாறுபாடு.. போன்ற அறிகுறிகள் இருந்தால் அவை இத்தகைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
இத்தகைய அறிகுறிகளுக்கு வைத்தியர்கள் வழக்கமான பரிசோதனைகளுடன் எலக்ட்ரோமயோகிராபி, நரம்பு செயல்பாட்டு திறன் குறித்த பிரத்யேக பரிசோதனை, தண்டுவட குழாயில் சுரக்கும் பிரத்யேக திரவத்தின் பரிசோதனை என சில பரிசோதனைகளை பரிந்துரைப்பர்.
பரிசோதனை முடிவுகளில் அடிப்படையில் உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அப்போது பிளாஸ்மா மாற்று சிகிச்சை மற்றும் இம்யூனோகுளோபுலின் தெரபி ஆகிய நவீன சிகிச்சைகளின் மூலம் உங்களுக்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனுடன் பிசிக்கல் தெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சையும் வழங்கி உங்களின் தளர்ச்சி அடைந்த நரம்பின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு மீட் பர். இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை, உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை முழுமையாக பின்பற்றினால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.