எகிப்து பிரமிடில் ‛எல்’ வடிவ ஓட்டை.. வாயை பிளந்த ஆய்வாளர்கள்!
18 May,2024
எகிப்து பிரமிடில் எல்-L- வடிவ ஓட்டை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓட்டை இயற்கையானது அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாகரிக மனிதனின் கட்டிடக் கலைகளுக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக பிரமிடுகள் விளங்குகின்றன. என்னதான் பிரமிடுகள் பார்க்க அழகானவையாக இருந்தாலும், உண்மையில் இது ஒரு கல்லறை தோட்டமாகும். அரசர்கள், முக்கிய நிர்வாகிகள், மத குருக்கள் ஆகியோரை அடக்கம் செய்யும் இடமாக பிரமிடு இருந்திருக்கிறது.
எகிப்து அரசர்கள் சூரியனைதான் முதல் கடவுளாக வழிப்பட்டனர். எனவே, இறந்த பின்னர் கடவுளிடம் செல்ல வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கி பிரமிடுகள் கட்டப்பட்டன. இந்த பிரமிடுகளின் உச்சியில் மேற்குறிப்பிட்ட நபர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். இதில் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில்,
சக்கரமே கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பிரமிடுகள் கட்டப்பட்டன என்பதுதான். இது குறித்த ஆய்வில், பிரமிடை அடிமைகள்தான் கட்டினார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், உன்மையில் இதனை கட்டியவர்களுக்கு உரிய கூலியும், உணவும் கூட வழங்கப்பட்டது. இதனையடுத்து பிரமிடுகள் குறித்த ஆய்வுகள் சூடுபிடிக்க தொடங்கின. இதில் அவ்வப்போது சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. அந்த வகையில் தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரமிடின் அடியில், எல் (L) வடிவ குறியீடு ஒன்று இருந்திருக்கிறது. இது இயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என்பதுதான் இந்த ஆய்வை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது. இந்த பகுதியில் மின்தடை டோமோகிராஃபியைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை பயன்படுத்தி பாறைகள், மண், நிலத்தடி நீர் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் போன்றவை ஆய்வு செய்ய முடியும். இப்படி நடத்தப்பட்ட ஆய்வில் பிரமிடுக்கு அடியில் சுமார் 6.5 அடி ஆழத்தில் இந்த எல் வடிவ அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பை மணல் கொண்டு மூடியிருக்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஒருவேளை பிரமிடை வெளியிலிருந்து யாரேனும் ஓட்டை போட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எகிப்தியர்கள் மத்தியில் வித்தியாசமான நம்பிக்கை இருந்திருக்கிறது. அதாவது, பிரமிடில் புதைக்கப்படுபவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்பதுதான் அது. எனவே, பிரமிடில் புதைக்கப்படும் அரசர்களுக்கு, அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் அனைத்தும் சேர்த்து புதைக்கப்படும். எனவே இதனை திருடுவதற்காக வெளியிலிருந்து யாரேனும் ஓட்டையிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும் இதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.