இளம் யுக்ரேனிய ஆயுத ஆய்வாளரான கிறிஸ்டினா கிமாச்சுக்கு ஜனவரி 2 ஆம் தேதி, கார்கிவ் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது வழக்கத்திற்கு மாறான தோற்றமுள்ள ஏவுகணை ஒன்று மோதியுள்ளதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக யுக்ரேனிய ராணுவத்தில் இருக்கும் தனது நண்பர்களைத் தொடர்பு கொண்ட அவருக்கு, அடுத்த ஒரு வாரத்திற்குள் தலைநகர் கீவில் ஒரு பாதுகாப்பான இடத்தில் அந்த ஏவுகணையின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
தன்னுடைய விரல் நகத்தை விட சிறிய கணினி சில்லுகள் உட்பட அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவருக்கு, அது ரஷ்ய ஏவுகணை இல்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. ஆனால், அதை நிரூபிப்பது தான் அவருக்கு சவாலாக இருந்தது.
அங்கு குவிந்துக் கிடந்த ஏவுகணை குப்பைகளுக்கு மத்தியில் கொரிய எழுத்துகள் சிலவற்றை கண்டறிந்திருக்கிறார் க்றிஸ்டினா. அதோடு கூடுதல் விவரங்களும் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பாகங்களில் 112 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது.
வட கொரிய நாட்காட்டியின்படி அந்த எண் 2023 என்பதை குறிக்கும். அப்போதுதான் அவருக்கு தனது நாட்டை தாக்க வடகொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்பது புரிந்துள்ளது.
கீவில் இருந்து என்னுடன் தொலைபேசி மூலம் அவர் பேசுகையில், “ரஷ்யாவிற்கு அவர்கள் ஆயுதங்களை வழங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், முதல்முறையாக இதுவரை யாரும் கண்டுபிடித்திராத ஆதாரத்தை என்னால் பார்க்க முடிகிறது, தொட முடிகிறது, ஆய்வு செய்ய முடிகிறது” என்று உற்சாகம் பொங்க கூறினார்.
அதிலிருந்து டஜன்கணக்கான வடகொரிய ஏவுகணைகள் ரஷ்யாவால் தங்களது எல்லைக்குள் வீசப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் இறந்துள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயம் பட்டுள்ளதாகவும் கூறுகிறது யுக்ரேன்.
கிம் ஜாங் உன் ஒரு அணு ஆயுதப் போரைத் தொடங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சமீபத்தில் பரவி வரும் விவாதங்களுக்கு மத்தியில், தற்போது நடந்து வரும் போர்களை மேலும் தூண்டும் வகையில் நடந்துக் கொள்ளுதல் மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மையை ஊக்குவிக்கும் வட கொரியாவின் திறன் இப்போது உலகின் உடனடி அச்சுறுத்தலாகும்.
க்றிஸ்டினா போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்டெடுக்கும் ஒரு அமைப்பான கான்ஃபிளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச் (CAR) இல் பணியாற்றுகிறார்.
அந்த ஏவுகணையின் சிதைந்த பாகங்களை அவர் புகைப்படம் எடுத்த பின், அதன் நூற்றுக்கணக்கான கூறுகளை அவரது குழுவினர் ஆய்வு செய்த பிறகே அதுகுறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியே வந்துள்ளது.
இந்த ஏவுகணையில் பல்வேறு நாடுகளின் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான பாகங்கள் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அதுவும் மார்ச் 2023இல் தயாரிக்கப்பட்ட அமெரிக்க தொழில்நுட்பமும் கூட அதில் இடம்பெற்றிருந்தது.
இதன் பொருள் என்னவென்றால், வடகொரியா இந்த தொழில்நுட்ப பாகங்களை சட்டவிரோதமாக வாங்கி, அவற்றை தங்களது நாட்டில் ஒன்றாக இணைத்து ஏவுகணையாக தயாரித்து, அந்த ஏவுகணைகளை எப்படியோ ரஷ்யாவுக்கு வழங்கியிருக்கிறது. இவை எல்லாம் ஒரு சில மாதங்களில் நடந்துள்ளது.
"இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 20 ஆண்டுகளாக வட கொரியா மீது பல்வேறு தடைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது ஆயுதம் தயாரிக்க தேவையான பொருட்களை வேகமாக பெற ஏற்பாடுகளை கொண்டுள்ளது அந்நாடு " என்கிறார் கான்ஃபிளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச் அமைப்பின் துணை இயக்குனர் டேமியன் ஸ்ப்ளீட்டர்ஸ்.
லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) என்ற பாதுகாப்பு குழுவின் வட கொரிய நிபுணரான ஜோசப் பைர்னேவும் இதுகுறித்து வியப்புக்குள்ளானார்.
"ஐரோப்பிய மக்களைக் கொல்ல வட கொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்று கூறினார் அவர்.
அவரும் அவரது அமைப்பும், கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவில் கிம் மற்றும் விளாடிமிர் புதினுக்கு இடையில் நடந்த சந்தேகத்திற்குரிய ஆயுத ஒப்பந்தத்திற்கு பிறகு, வட கொரிய ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதைக் கண்காணித்து வருகின்றனர்.
செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வட கொரியாவிற்கும் ரஷ்ய இராணுவத் துறைமுகத்திற்கும் இடையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் நான்கு ரஷ்ய சரக்குக் கப்பல்கள் முன்னும் பின்னுமாகச் செல்வதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.
அந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் நிரம்பிய7,000 கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதனை ரஷ்யாவும் வட கொரியாவும் மறுத்தாலும் கூட , இந்த அமைப்பின் தரவுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறைகள் வழியாக திரட்டப்பட்டவையாகும்.
"இன்றைய தேதியில் உலகமே இந்த குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வாங்குவதற்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எந்த மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்துவது என்று தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஷ்யாவோ இதே ஆயுதத்தைக் கொண்டு யுக்ரேன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது” என்று ஜோசப் கூறினார்.
ஆயுதம் வாங்குதல் மற்றும் தாக்குதல்
ஆனால், போரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் பயன்பாடு ஜோசப் மற்றும் அவரது சகாக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது,
1980 களில் இருந்து வட கொரியா தனது ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலும் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான லிபியா, சிரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
இந்த ஆயுதங்கள் அனைத்தும் பழைய, சோவியத் பாணியிலான ஏவுகணைகள் என்ற பெயரைக் கொண்டுள்ளன. கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கூட பியோங்யாங்கின் பழைய தொழில்நுட்பத்தில் தயாரான கையெறி குண்டுகள் சிலவற்றை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.
ஆனால் ஜனவரி 2 ஆம் தேதி ஏவப்பட்ட மற்றும் க்றிஸ்டினா பார்த்த ஏவுகணையானது, பியோங்யாங்கின் அதிநவீன குறுகிய தூர ஏவுகணை ஹ்வாசோங் 11 ஆகும். இது 700 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டது.
"யுக்ரேனியர்கள் அதன் துல்லியத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தாலும், ரஷ்ய ஏவுகணைகளை விட மோசமானதாக இல்லை" என்று வட கொரிய ஆயுதங்கள் மற்றும் பரவல் தடுப்பு நிபுணரான டாக்டர் ஜெஃப்ரி லூயிஸ், கூறுகிறார். இவர் மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் பணிபுரிகிறார்.
“இந்த ஏவுகணைகளின் நன்மை என்னவென்றால், அவை மிகவும் மலிவானவை. எனவே, நீங்கள் அதிகமாக வாங்கலாம் மற்றும் அதிக அளவில் தாக்கலாம். ரஷ்யா இதையே செய்கிறது” என்று அவர் கூறுகிறார்.
இது வட கொரியர்கள் இது போன்ற எவ்வளவு ஏவுகணைகளை தயாரிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது. வடகொரியா 6,700 கண்டெய்னர் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு அனுப்பியிருப்பதாக சமீபத்தில் தென் கொரிய அரசாங்கம் சமீபத்தில் கூறியது.
பியோங்யாங் ஆயுதத் தொழிற்சாலைகள் முழு வீச்சில் இயங்கி வருவதாகவும், ஆண்டுக்கு சில நூறு என்ற அளவில் அவற்றால் பெரும் அளவிலான ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து வரும் டாக்டர் லூயிஸ் தெரிவிக்கிறார்.
வட கொரியாவிற்கு உதிரிபாகங்களை விற்பதில் இருந்து நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட, இது எப்படி சாத்தியம் என்பதை அறிய , டேமியன் மற்றும் அவரது குழுவினரும் முயற்சிக்கின்றனர்.
நவீன ஆயுதங்களை இயக்கி, அவற்றின் இலக்குகளை அடையச் செய்யும் அதே கணினி சில்லுகள் தான் , நமது அன்றாட பயன்பாடுகளான போன், கார், வாஷிங் மெஷின் போன்ற இயந்திரங்களையும் இயக்குகின்றன என்கிறார் டேமியன்.
இவை உலகம் முழுவதும் பெருமளவிலான எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. இவற்றை பில்லியன்கணக்கில் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களுக்கே, இது எங்கு போய் சேர்கிறது என்று பல நேரங்களில் தெரியாது.
அப்படியிருந்தும், இந்த ஏவுகணையில் இடம்பெற்றிருக்கும் எத்தனை பாகங்கள் மேற்கில் இருந்து வந்தவை என்பதை அறிந்து டேமியன் விரக்தி அடைவதில் இருந்து தவிர்க்க முடியவில்லை.
வட கொரியாவின் கொள்முதல் வலையமைப்பானது, அவற்றை விசாரித்து வரும் டேமியன் அறிந்ததை விட மிகவும் திறன் மிக்கது மற்றும் பரந்து விரிந்தது.
அவரது அனுபவத்தின் படி, வெளிநாடுகளில் உள்ள வட கொரியர்கள், பெரும்பாலும் கள்ளப் பணத்தைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக ஹாங்காங் அல்லது பிற மத்திய ஆசிய நாடுகளில் போலி நிறுவனங்களை நிறுவுவார்கள்.
பின்னர் அங்கிருந்து பொருட்களை வடகொரியாவிற்கு அனுப்புவார்கள். அதிலும் வழக்கமாக சீன எல்லையில் இது நடைபெறும். அப்படி ஒரு போலி நிறுவனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அதன் இடத்தில் வேறு ஒரு நிறுவனம் உருவாக்கப்படும்.
நாடுகள் விதித்துள்ள தடைகள் நீண்ட காலமாக இந்த வலையமைப்புகளை ஒழிப்பதற்கான சிறந்த கருவியாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை உண்மையாகவே திறனோடு செயல்பட தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 2017 முதல் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்க ரஷ்யாவும் சீனாவும் மறுத்து வருகின்றன.
பியோங்யாங்கின் ஆயுதங்களை வாங்குவதன் மூலம், மாஸ்கோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அது வாக்களித்த கட்டுப்பாடுகளையே தற்போது அப்பட்டமாக மீறுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், விதிமீறல்களைக் கண்காணிக்கும் ஐ.நா குழு ஒன்றை ஆய்வைத் தவிர்க்கும் பொருட்டு ரஷ்யா லாவகமாக கலைத்தது.
"வட கொரியாவிற்கு எதிரான ஐ.நாவின் பல பொருளாதாரத் தடைகள் சிதைந்து வருவதை நேரடியாகவே நாங்கள் பார்க்க முடிகிறது. இது பியோங்யாங்கிற்கு எளிமையான வழிகளை ஏற்படுத்தி தரும்", என்று ஜோசப் கூறினார்.
இவை அனைத்தும் யுக்ரேன் போருக்கு அப்பாற்பட்ட தாக்கங்களையும் கொண்டுள்ளன.
"இங்கே உண்மையில் வட கொரியர்கள் தான் வெற்றியாளர்கள்", என்று கூறுகிறார் ஜோசப்.
"அவர்கள் ரஷ்யர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வழியில் உதவியுள்ளனர், மேலும் இது அவர்களுக்கு ஏராளமான அந்நியச் செலாவணியை வழங்கியுள்ளது".
மார்ச் மாதத்தில், ரயில் பெட்டிகளில் அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து வட கொரியாவிற்கு அதிக அளவு எண்ணெய் அனுப்பப்பட்டதை RUSI அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது,
நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையதாக கருதப்படும் இந்த ஒப்பந்தம், பியோங்யாங்கின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அதன் இராணுவத்தையும் உயர்த்தும்.
ரஷ்யாவால் தொடர்ந்து இந்த ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும், அல்லது போர் விமானங்கள் போன்ற இராணுவ உபகரணங்களையும், மேலும் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதற்கான கூறுகளையும் கூட வடகொரியாவுக்கு அனுப்ப முடியும்.
வடகொரியா தனது ஏவுகணைகளை உண்மையான போர்க்களத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இது. இந்த தரவுகளைக் கொண்டு, அந்த ஆயுதங்களை அந்நாடு மேலும் மேம்படுத்தும்.
ஏவுகணை வர்த்தகம்
இதில் மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தப் போர் வட கொரியாவுக்கு உலகின் பிற பகுதிகளுக்கும் ஆயுதம் விற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இப்போது பியாங்யாங் இந்த ஆயுதங்களை பெருமளவில் உற்பத்தி செய்து வருவதால், அவற்றை பல நாடுகளுக்கு விற்க விரும்புகிறது, இந்த ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு சரியானதாக இருந்தால், மற்றவர்களுக்கும் அவை பொருத்தமானதாக இருக்கும் என்று டாக்டர் லூயிஸ் கூறுகிறார்.
அதிலும் குறிப்பாக தடைகளை மீறுவது ஒன்றும் குற்றமில்லை என்ற உதாரணத்தை வேறு ரஷ்யா ஏற்படுத்தி வைத்துள்ளது.
சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணைகளை வழங்கும் பெரிய நாடாக வடகொரியா மாறும் என்று டாக்டர் லூயிஸ் கணித்துள்ளார்.
இந்த மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வட கொரியா இரானுடன் அதன் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஆயுதத் திட்டங்களில் இணைந்து செயல்படலாம் என்பது "நம்ப முடியாத அளவிற்கு கவலையளிக்கும்" விஷயம் என அமெரிக்கா கூறியது.
"இந்தப் பிரச்னையைப் குறித்து பேசும்போது நிறைய இருண்ட முகங்களை நான் காண்கிறேன்" என்று கூறுகிறார் டேமியன்.
"ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை எவ்வளவு சார்ந்திருக்கிறார்கள் என்பது இப்போது நமக்குத் தெரியும், அதில் நம்மால் ஏதாவது செய்ய முடியும்." என்கிறார் அவர்
உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வட கொரியாவின் விநியோகச் சங்கிலிகளைத் துண்டிக்க முடியும் என்று டேமியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு முக்கியமான வர்த்தகம் முடிவதற்கு முன்பே அந்த வலையமைப்பை கண்டறிந்து இவரது குழு அதை முழுமையாக மூடியுள்ளது.
ஆனாலும், இவை குறித்து டாக்டர் லூயிசுக்கு பெரிய திருப்தி இல்லை.
"நாம் இந்த வர்த்தகத்தை கடினமாக்கலாம், செலவை அதிகரிக்கலாம், ஆனால் இவை எதுவும் வட கொரியா இந்த ஆயுதங்களை தயாரிப்பதில் இருந்து தடுக்கப் போவதில்லை," என்று அவர் கூறுகிறார்.
வட கொரியாவை கட்டுப்படுத்துவதில் மேற்குலகம் தோற்று விட்டதாக அவர் கருதுகிறார்.
தற்போது அந்நாட்டின் ஏவுகணைகள் அரசியல் மற்றும் கௌரவத்தின் ஆதாரமாக மட்டுமின்றி, பணம் உருவாக்கும் விஷயமாகவும் மாறிவிட்ட நிலையில், அதை ஏன் கிம் ஜாங் உன் விட்டுக்கொடுக்க போகிறார் என்ற கேள்வியை முன்வைக்கிறார் டாக்டர் லூயிஸ்.