ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது பிரிட்டன் - வீடுவீடாக சென்று கைதுசெய்யும் அதிகாரிகள்
03 May,2024
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை திட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக்கோரிக்கையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பிரிட்டிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்
புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம் முதல் வாரம் ருவாண்டா செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் எங்களின் அர்ப்பணிப்பு மிக்க சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிலெவெர்லி இவர்களை விரைவாக கைதுசெய்தால் எங்கள் விமானங்களை ருவண்டாவிற்கு அனுப்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ருவண்டா பாதுகாப்பான மூன்றாவது நாடு என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதை தொடர்ந்தே சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
பிரிட்டனின் உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள நிலையிலேயே பிரிட்டன் நாடாளுமன்றம் ருவண்டா பாதுகாப்பான மூன்றாவது நாடு என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனிற்குள் சிறிய படகுகள் மூலம் வரும் குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தப்போவதாக பிரதமர் ரிசி சுனாக் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
பத்து அல்லது 12 வாரங்களிற்குள் நாடு கடத்தல் விமானங்கள் புறப்பட ஆரம்பிக்கும் அதற்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும் என ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் குடிவரவு துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி வசிப்பவர்களை கைதுசெய்து கைவிலங்கிட்டு அழைத்து செல்லும் படங்களை வெளியிட்டுள்ள பிரிட்டனின் உள்துறை அமைச்சு ருவண்டா திட்டத்தில் இது ஒரு மைல்கல் என தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கம் மனிதாபிமானத்தின் கடைசி துளியையும் இழந்துவிட்டது என பிரீடம் புரொம் டோர்ச்சர் என்ற மனிதாபிமான அமைப்பு பிரிட்டன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.